ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கோடு வரும் 11 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழுவிற்கும் தடை கோரும் மனுவையும் சேர்ந்து விசாரிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த இரு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் எம் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்ற அமர்வு, ஜுன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் குறித்து மட்டுமே இந்த அமர்வில் விசாரிக்க முடியும்; ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்ற இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. அடுத்து நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது
ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என கருத்துகள் தெரிவித்தது. பின்னர், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜுன் 11ம் ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.