Mon. May 6th, 2024

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்….

“2011 முதல் 2021 வரை எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்த நேரத்தில், அக்கட்சியைப் பற்றி அதிகமாக ஜுவியில் கட்டுரைகள் வெளியாகின. ஆளும்கட்சியான அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுகவை விமர்சனம் செய்யும் கட்டுரைகள் அதிகமாக வெளியிடப்பட்ட நேரத்தில், குறிப்பாக 2010 ல் 2ஜி முறைகேடு வெளியான போது, அதுதொடர்பான கட்டுரைகள் வெளியிப்பட்ட போதும் அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராஜா, அப்போதைய திமுக எம்பி கனிமொழியை பற்றியும் தனித்தனியாகவும், இருவரையும் கேவலப்படுத்தும் வகையில் இணைத்தும் அட்டைப்பட கட்டுரைகள் வெளியிட்டு அசிங்கப்படுத்தியது ஜுவி. அப்போது ஆசிரியர்களாக இருந்த திருமாவேலன், கண்ணன் ஆகியோர்தான் தற்போது ஆளும்கட்சியான திமுகவின் தொலைக்காட்சியான கலைஞர் டிவிக்கு தலைமை செய்தி ஆசிரியராகவும் ஆளும்கட்சியின் ஐடி விங்கிற்கு தலைமைப் பொறுப்பும் முறையே ஏற்று இருக்கிறார்கள். என்ன ஊடகத் தர்மமோ?”

இவ்வாறு கிண்டலும் கேலியுமாக பேசியவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால்.

கடந்த ஆண்டு மூத்த ஊடகவியலாளர் கோசல்ராமின் மரணத்தையொட்டி அஞ்சலி செலுத்திய நேரத்தில் அங்கு குழுமியிருந்த மூத்த ஊடகவியலாளர்கள் சிலருடன் உரையாடும் போது மிகுந்த வேதனையோடு இதை அவர் தெரிவித்தார்.

பொதுவாகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைப்பவர் இல்லை நக்கீரன் ஆசிரியர் என்றாலும், அன்றைய தினம் அவருக்கு கிடைத்த நம்பகத்தகுந்த சில தகவல்களின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டார்.

இயல்பாகவே, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் நடைபெறும் முறைகேடுகளை பொதுவெளியில் விவாதிப்பதை பெரும்பாலும் எந்தவொரு ஊடகவியலாளர்களும் விரும்புவதில்லை. இதன் காரணமாகவே, அறத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை யாரும் பேச மாட்டார்கள் என்ற துணிச்சலில் ஆண், பெண் என மூத்த ஊடகவியலாளர்களான பலர் செய்யும் மனிதாபிமானமற்ற செயல்களையும், சுயநலத்துடன் ஆடும் ஆட்டங்களையும் பற்றி வரும் தகவல்கள் தர்மநெறியோடு நடைபோடுகிறவர்களை கொந்தளிக்க வைக்கிறது.

முண்டாசு கவிஞரின் கோப வரிகளான பாதகம் செய்வோரைக் கண்டால் அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிடு பாப்பா…என்று நிலைக்குதான் தள்ளப்படுகிறார்கள்.

மனித உயிர்களிலேயே கனிவு மிகுந்தவர்களாக மகளிர்கள் இருப்பர் என்பார்கள். ஆனால், ஆளும்கட்சி ஊடகத்தில் பணியாற்றும் பெண் செய்தி வாசிப்பாளரின் தில்லுமுல்லுகளை கேள்விபட்டபோது அன்பான ராட்சசிக்கு பதிலாக அராஜக பேர்வழி என்றுதான் விமர்சனம் செய்ய வேண்டியிருக்கிறது.

அந்த ஊடகத்தில் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய செய்தியாளர், விவகாரத்து பெற்றவர். அவருக்கு அதே ஊடகத்தில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. துவக்கத்தில் நட்பை பேணி வந்தவர்கள்,  நாளடைவில் காதலர்களாக மாறிப் போகிறார்கள். பால(க)னான அந்த ஊடகவியலாளருக்கு காதல் விஜயமாகிவிடும் என்ற கற்பனையில் பெண் செய்தி வாசிப்பாளரின் மீதான ஈர்ப்பு கண்களை மறைக்க, தனது ஊதியம் முழுவதையும் அந்த பெண் செய்தி வாசிப்பாளருக்கு தாராளமாக செலவு செய்கிறார். அவர் விருப்பப்பட்ட பிரபலமான அனைத்து அசைவ ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லுதல், திரைப்படங்களுக்கு செல்லுதல், துணிக்கடைகளுக்கு செல்லுதல் என அந்த பெண்ணே கதியென்று வாழ்ந்து வந்திருக்கிறார். தன் வருங்கால மனைவியாக வரப்போகிறவர்தானே என்று தங்க நகைக்கடைக்கும் அழைத்துச் சென்று பல ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.

நாளுக்கு நாள் காதல் அதிகமாகி பித்து பிடித்தவராக மாறிய அந்த செய்தியாளரின் மயக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் செய்தி வாசிப்பாளர், வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு வந்து செல்லும் வாடகை காருக்கான கட்டணம், அவரது பெற்றோர் வாசிப்பதற்கான நாளிதழ்கள், வார இதழ்கள் என அன்றாட செலவினங்களுக்குக் கூட காதலனாக இருந்த அந்த செய்தியாளரின் வங்கி சேமிப்பை படுவேகமாக கரைத்திருக்கிறார். இப்படி அந்த செய்தியாளர் இழந்த பணம் மட்டுமே 8 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.     

ஒருகட்டத்தில் கடன் வாங்கி தான் தனது காதலியின் அன்றாட செலவுகளை சமாளிக்க வேண்டும் என்ற நிலை உருவானபோது, காதலியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூற, அந்த பெண் செய்தி வாசிப்பாளரோ, உன்னையெல்லாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று முகத்தில் அறைந்த மாதிரி கோபமாக கூறிவிடுகிறார். இதனால் மனம் உடைந்து போன அந்த இளம் செய்தியாளர், தற்கொலை முடிவை எடுக்க, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அவருடன் தொடர்ந்து பேசி அவரது தற்கொலை முடிவை கைவிட வைக்கிறார்கள். ரொக்கமாக மட்டுமே 6 லட்சம் ரூபாயை பெண் செய்தி வாசிப்பாளரிடம் வழங்கியிருக்கிறேன் என்று சொல்ல, அதை மட்டுமாவது திரும்ப பெற பேசி பார் என்று அறிவுரை கூறுகிறார்கள்.

நண்பர்களின் அறிவுரைக்கு ஏற்ப,  காதலியாக நாடகமாடிய  பெண் செய்தி வாசிப்பாளரிடம் பணத்தை திருப்பி கேட்க, மெரினா கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கிறார். அவரும் மாலை மங்கிய நேரத்தில் செல்ல, செய்தியாளரிடம் இருந்த செல்போனை பிடுங்கி, அதில் இருந்த புகைப்படங்கள்,  இருவருக்கும் இடையேயான உரையாடல்களின் ஆடியோ சேமிப்பு உள்ளிட்டவற்றை அழித்துவிட்டு, கடற்கரை மணலில் தூக்கி விசிவிடுகிறார் பெண் செய்தி வாசிப்பாளர். கைபேசியை எடுக்க செய்தியாளர் ஓட, அவரை வழிமறித்து மூன்று பேர் சரமாரியாக தாக்குகிறார்கள். அதில் ஒருவர், வரலாற்றில் படித்தோமே….சாலையின் இருபுறமும் மரம் நட்டார் என்ற மன்னரின் பெயரைக் கொண்டவர். அதே நிறுவனத்தில் பணியாற்றியவர்.

ரத்த காயங்களுடன் அலுவலகத்திற்குச் சென்று தலைமைச் செய்தி ஆசிரியரும், ஜனநாயக மாண்பை பாதுகாக்க கூடியவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் திருமாவேலனிடம் தனக்கு நடந்த துயரத்தை கண்ணீர் மல்க விவரிக்கிறார். இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறி நிர்வாகத் தரப்பினரிடம் முறையிட கை காட்டி விடுகிறார்.

பெண் செய்தி வாசிப்பாளர் மீதான புகாரை கைவிட்டுவிட்டு வேலையை விட்டு விலகினால் 9 ஆண்டுகள் செய்தியாளராக பணிபுரிந்ததற்கான பணிக்கொடை கிடைக்கும்..போலீஸில் புகார் என்று போனால் ஒத்த பைசா கிடைக்காது என்று மேலாளரான சாமிநாதன் மிரட்ட, அப்போது எதிர்க்கட்சி ஊடகமாக இருந்தபோதும் புகார் கொடுக்க அஞ்சி, வேலையில் இருந்து விலகிவிடுகிறார். இன்று அந்த ஆண் செய்தியாளர் எந்த வேலையும் இன்றி சாப்பாட்டிற்கு வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதேநேரத்தில்,  மனம் இரங்காத அந்த ராட்சசி, வட சென்னையின் காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணனின் கைபேசிக்கு செய்தியாளருக்கு எதிராக புகார் கொடுக்க, அதன் மீது விசாரணை நடத்த புதிய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமியிடம் கூறுகிறார். அவரின் உத்தரவின் பேரில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி, அந்த ஊடகத்தின் அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரித்துச் செல்கிறார். டிசி, ஜெ.சி ஆகியோரின் முனைப்பான விசாரணையில், பெண் செய்தி வாசிப்பாளர் காதலின் பெயரில் ஊடகவியலாளரை ஏமாற்றியதை உரிய ஆதாரங்களுடன் கண்டுபிடித்து, குடும்பத்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்து இதுபோன்ற மோசடியில் இனிமேல் ஈடுபட மாட்டேன் என்று எழுதி வாங்குகின்றனர். ஆண் செய்தியாளர் புகார் தராததால், எதிர்க்கட்சி ஊடகம் என்ற போதும் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 8 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்த அந்த இளம் ஊடகவியலாளருக்கு இந்த நிமிடம் வரை நியாயம் கிடைக்கவில்லை.ரொக்கமாக தான் வழங்கிய 6 லட்சம் ரூபாயை திருப்பி பெற்று தந்தால் கூட பெட்டிக் கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என்று காதல் திரைப்படத்தின் கதாநாயகன் மாதிரி விழுப்புரத்தில் தெரு தெருவாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

விடியல் அரசின் முதல்வர் அருகில் அமர்ந்து விழாக்களில் பங்கேற்கும் அளவிற்கு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்களே திருமாவேலன் சாரே… உங்களுக்கு மனம் இரங்காமல் போனது ஏனோ..?

ஆளும்கட்சி ஊடகத்தில் இந்த பெண் செய்தி வாசிப்பாளர் மட்டும் தான் ராட்சசி குணத்தோடு இருக்கிறாரா என்றால் இல்லை என்கிறார்கள் சக ஊழியர்கள்.

ஆளும்கட்சி ஊடகத்தின் செய்தியாளராக தலைமைச் செயலகத்திற்கு அன்றாடம் செய்தி சேகரிக்க செல்லும் பெண் ஊடகவியலாளர் பற்றி கூறும் தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் அக்கட்சி நிர்வாகிகள் எப்படி பணம் சம்பாதிக்க முயற்சி மேற்கொள்கிறார்களோ அதைவிட வேகமாக தலைமைச் செயலகத்திற்கு செல்லும் அந்த பெண் செய்தியாளரும் பணம், பணம் என்றே அலைந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் சக ஊடகவியலாளர்கள்.

அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்கள் என்றால் கேமிராமேன், உதவி கேமிராமேன் என படையோடு அமைச்சர் அறைக்கு செல்லும் அந்த பெண் செய்தியாளர் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பணம் கேட்கிறார் என்று கூறுபவர்கள், ஆளும்கட்சி ஊடகத்தின்  பெண் ஊடகவியலாளரே பணம் கேட்டு வருவதால், வேறுவழியின்றி அமைச்சர்களும் பல ஆயிரம் ரூபாயை வழங்குவதாகவும் மூத்த அமைச்சர்களில் ஒன்றிரண்டு பேர் கால் லட்சம் அளவுக்கு ரூபாயை அன்பளிப்பாக வழங்குவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

ஆளும்கட்சி ஊடகத்தின் மானம், மரியாதை காப்பாற்றபட வேண்டும் என்ற கடமையுணர்வு இருந்தால், ஊர் அறிய, உலகறிய அமைச்சர் அறைகளை தேடிச் சென்று திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு தெரியும் அளவுக்கு நேரிடையாக அமைச்சர்களிடம் அன்பளிப்பு கேட்கும் அந்த பெண் செய்தியாளரை கண்டிக்க வேண்டிய தலைமை செய்தி ஆசிரியர் திருமாவேலனோ கண்டும் காணாமல் இருக்கிறார் என்கிறார்கள். அவரின் மௌனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த பெண் செய்தியாளரின் அடாவடித்தனத்தைப் பார்த்து, ஆளும்கட்சி ஊடகத்தின் செய்திப்பிரிவே ஆடிப்போயிருக்கிறதாம்.

அண்மையில் பெண் செய்தியாளர் விடுமுறையில் சென்ற போது, அவருக்கு மாற்றாக காலைநேரத்தில் பணிக்குச் சென்ற வேறு ஒரு குழுவினரை, மதிய உணவு இடைவேளையின் போது மூத்த அமைச்சர் எதிர்பாராதவிதமாக சந்தித்திருக்கிறார். அப்போது அவராகவே மனமுவந்து, சாப்பிட்டீர்களா என்று கேட்க, அந்த குழுவும் சாப்பிட்டு விட்டோம் என்று கூற, இருந்தாலும் பரவாயில்லை.. செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என சில ஆயிரம் ரூபாயை வலிய வந்து கொடுத்திருக்கிறார் அந்த மூத்த அமைச்சர்.

இந்த தகவல் விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய அந்த பெண் செய்தியாளருக்கு தெரியவந்தவுடன், அந்த குழுவினரை கடுமையாக மிரட்டியதுடன்,  எனக்கு தெரியாமல் எதற்கு அமைச்சரிடம் பணம் வாங்கினீர்கள் என்று வானுக்கும் பூமிக்கும் பேயாட்டம் ஆடிவிட்டு, தலைமை அலுவலகத்திலும் புகார் கூறி, அந்த குழு ஊழியர்களை பழிவாங்கியுள்ளார். அதைவிட மோசமாக, அதே அமைச்சர் அலுவலகத்திற்குச் சென்று எனக்கு தெரியாமல் யாருக்கும் அன்பளிப்பு பணம் கொடுக்க கூடாது என்றும் முறையிட்டிருக்கிறார்.  

கடந்த மூன்றாண்டுகளாகதான் இதுபோன்ற அறமற்ற நிகழ்வுகள் ஆளும்கட்சி ஊடகத்தில் அதிகரித்து வருகிறது என்று வேதனையோடு கூறுகிறார்கள் அந்த ஊடகத்தின் உண்மையான ஊழியர்கள். ஊடகவியலாளர்களின் நல்வாழ்விற்காக நல வாரியத்தை அறிவித்தும், மருத்துவத் திட்டங்களை செயல்படுத்தியும் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் உள்ள ஊடக நிறுவனத்தின் நிர்வாகத்தில் நடந்து கொண்டிருக்கும் அறமற்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தும்  விசுவாசமிக்க ஊடகவியலாளர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் புல்லுருவிகளை விரைந்து களையெடுத்தால், துன்பத்தில் உள்ள ஊழியர்களின் வாழ்வில் வசந்தம் வீசும் என்கிறார்கள்  அண்ணா அறிவாலய பணியாளர்கள்..