Mon. May 6th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் அவரது இல்லத்தரசி துர்கா ஸ்டாலின் இருக்கிறார் என்பதை, முதல்வரே பல்வேறு நிகழ்வுகளின் போது பெருமிதமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

பகுத்தறிவு பாசறையான கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்தின் மருமகளாக இருந்த போதும், பக்தியில் ஒருபோதும் துர்கா ஸ்டாலின்  சமரசம் செய்து கொண்டவர் இல்லை. வெளிப்படையாகவே ஆன்மிகத்தில் ஈடுபட்டு வரும் அவர், ஆலய வழிபாடுகளிலும் அதிக ஆர்வம் கொண்டவராகவே இருந்து வருகிறார். வைணவம், சைவம் என்று சமயத்தை பிரித்து பார்க்காமல், அனைத்து ஆலயங்களுக்கும் சிறப்பு நாட்களில் சென்று வருபவர்.

திமுக, எதிர்க்கட்சியாக இருந்த போதே, புகழ் பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று வந்திருந்தாலும் கூட, திமுக ஆளும்கட்சியான பிறகு, சின்ன சின்ன கோயில்களிலும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று பயபக்தியுடன் விளம்பரம் இன்றி பல்வேறு புண்ணிய பணிகளை செய்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.

சென்னையில் சைவத்தின் மகிமையை கூறும் பிரபல கோயில்கள் எத்தனையோ இருந்தாலும் கூட, பக்தர்களின் நம்பிக்கைக்குரிய சின்ன சின்ன சிவன் கோயில்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் துர்கா ஸ்டாலின் என்று கூறும் சிவபக்தர்கள், அவரின் பேருதவியால்தான் சென்னை சேப்பாக்கத்தில், கிரிக்கெட் மைதானத்தில் இருந்து எம்எல்ஏ விடுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ இஷ்டலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சிறப்பு கவனம் கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, 2006 – 2011 வரை முதல்வராக இருந்தபோது ராஜாஜி மண்டபத்திற்கு அருகே புதிய தலைமைச் செயலகத்திற்கான கட்டுமான பணி நடைபெற்ற போது, அங்கு இருந்த லிங்கத்தை அப்புறப்படுத்தி, தற்போது கோயில் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் கோயில் கட்டி லிங்க வழிபாடு மீண்டும் துவங்கியது. இப்படியொரு கோயில் இருக்கிறது என்பதை அறிந்த முந்தைய அதிமுக ஆட்சியில் செய்தித்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு கோயிலுக்கு அடிக்கடி வந்து தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் நாள்தோறும் வழிபாடு நடைபெற பொருளாதார உதவிகளையும் செய்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மூலம் கோயில் சிறப்பை அறிந்த துர்கா ஸ்டாலின், பிரதோஷம், பௌர்ணமி ஆகிய சிறப்பு நாட்களில் ஸ்ரீ இஷ்டலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

பத்து பக்தர்கள் கூட நின்று சாமி தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு கோயில் அமைப்பு இருந்ததைப் பார்த்து, விரிவான திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கேட்டுக் கொண்டுள்ளார் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின். அமைச்சரும் கோயிலை வந்து பார்த்துவிட்டு தமது துறை சார்பாக கோயிலை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட, இந்த இடத்தில்தான்  தெய்வச் செயல் போல அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகனின் புதல்வர் கார்த்திக், கோயில் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தாமாக முன் வந்தார் என்கிறார்கள் கோயிலுக்கு அன்றாடம் வரும் சிவபக்தர் ஒருவர்.

யார் இந்த கார்த்திக்-?  

ஜி ஸ்கொயர் பற்றி பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது முதல்வரின் மருமகன் சபரீசன், புதிதாக பல நிறுவனங்களை பதிவு செய்திருக்கிறார் என்று பட்டியல் வாசித்த போது சபரீசனோடு மற்ற இயக்குனர்களாக கார்த்திக், அவரது தாய், கார்த்திக்கின் மனைவி ஆகியோர் இருந்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார் கே.அண்ணாமலை.

சபரீசனையும் கார்த்திக்கையும் பிரிக்க முடியாத அளவுக்கு இருவரும் அனைத்து தொழில்களிலும் கூட்டாளியாக இருப்பதற்கும், நெருங்கிய நட்போடு இருப்பதற்கும் திமுக ஆளும்கட்சியாக இருப்பதுதான் காரணம் என்று கே.அண்ணாமலை உள்பட பலர் விமர்சனம் செய்து வரும் வேளையில், ஆளும்கட்சியான பிறகுதான் சபரீசனுக்கும் கார்த்திக்கிற்கும் நெருக்கம் அதிகமானதா? என்று கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு வரும் சிவபக்தரிடம் கேட்டபோது, அந்த சிவபக்தர் கூறியவை சுவாரஸ்யத்தை கூட்டியது..

கார்த்திக் குடும்பத்தின் பின்னணி தெரியாமல் அரசியல் ரீதியாக அவருக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். கார்த்திக்கின் அப்பா, அண்ணா நகர் திமுக எம்எல்ஏ எம்.கே. மோகன். அவரின் அப்பா கோதண்டராம நாயுடு. மறைந்த திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்களுக்கு மிகமிக நெருக்கமானவர். 1949 ஆம் ஆண்டில் திகவில் இருந்து பிரிந்து வந்து திமுக அரசியல் ரீதியாக செயல்பட தொடங்கிய காலத்திலேயே மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர் கோதண்டராம நாயுடு.

அந்த காலத்தில் திமுக மாநாடு, திமுக பொதுக்கூட்டம், கட்சி விழாக்கள் என எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டால், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் சொன்னால், அவர்கள் கேட்கும் பணத்தை தயங்காமல் நன்கொடையாக தந்தவர் கோதண்டராம நாயுடு. அந்த காலத்திலேயே  அதிகாரமிக்க பதவியிலும் இருந்தவர். தற்போது அண்ணா அறிவாலயம் கட்டப்பட்டுள்ள இடத்தை திமுக விலைக்கு வாங்கிய போது, அடிமனை விவகாரத்தில் உரிமையாளர் தொடர்பான சிக்கல் வந்தபோது,  நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமான அந்த நிலத்தை எந்த வில்லங்கமும் இல்லாமல் திமுகவுக்கு பெற்று தந்தவர்தான் கோதண்டராமு நாயுடு.

இப்படி மூன்று தலைமுறைகளாக திமுக குடும்பத்திற்கு மிகுந்த விசுவாசமாக இருப்பவர்கள் கார்த்திக் குடும்பத்தினர். அந்த விசுவாசம்தான் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ,  சபரீசன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரோடும் அண்ணா நகர் மோகன் எம்எல்ஏ குடும்பம் நெருங்கி பழக முக்கிய காரணமாகும். உயிரே போனாலும் காட்டிக் கொடுக்காதவர்கள் நாயுடு குடும்பத்தினர்.  

முதல்வருக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் நிம்மதியையும், நற்பெயரையும் தேடித் தரும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் முதல் நபராக கார்த்திக் முன்னால் வந்து நிற்பார். அந்தளவுக்கான அன்பு ஒருபக்கம் என்றால், தெய்வப் பணி என்று தெரிய வந்தவுடன், துர்கா ஸ்டாலினின் விருப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக ஸ்ரீ இஷ்டலிங்கேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிகளை முழுமையாக நிறைவேற்றித் தரும் பொறுப்பை  தாமாக முன்வந்து கார்த்தி மோகன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, கான்கீரிட் தளம் போடும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சியுள்ள திருப்பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் பணிகள் வேகமெடுத்துள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்வதுடன் ஆற அமர்ந்து தியானம் மேற்கொள்ளவும், பிரசாதம் உள்ளிட்டவற்றை சுவைக்கவும் கோயிலையொட்டி காலியாக உள்ள தரைபகுதியையும் கோயிலோடு இணைக்கும் வகையில் கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

உரிய முறையில் அனுமதி கிடைத்தவுடன், ஸ்ரீ இஷ்டலிங்கேஸ்வரர் கோயில் பிரம்மாண்டமான ஆலயமாக உயர்ந்து நிற்கும். சிவத் தொண்டில் மிகுந்த ஆர்வம் காட்டும் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினின் தெய்வ சேவையின் பயனை பல்லாயிரம் பக்தர்கள் உள்ளார்ந்த பக்தியோடு அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. துர்கா ஸ்டாலினின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பது மூலம் கார்த்திக் மோகனுக்கும் சிவப்பெருமானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்கிறார் சிவ பக்தர்.

ஸ்ரீஅபயாம்பிகை சமேத ஸ்ரீ இஷ்டலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பரம்பரை தர்மகர்த்தாவான கே.சுப்பிரமணிய குருக்களின் தலைமையில் அன்றாடம் வழிப்பாடுகள் சிறப்பாக நடைபெற்று பெற்று வருவதாக கூறும் சைவர்கள், புகழ்மிக்க சிவ ஆலயங்களில் தரிசனம் செய்த மனநிறைவு இங்கு தரிசனம் செய்யும் போது கிடைப்பதாக நெகிழ்ச்சியோடு கூறுகிறார்கள்.

அன்பே சிவம்….