Sat. Nov 23rd, 2024

தாரை இளமதி….

75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட குமுதம் வார இதழின் ஆசிரியரான ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பால் நேற்று முன்தினம் ( ஜுன் 22) காலமானார். அவரின் திடீர் மறைவு குமுதம் குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், பணியாளர்கள் மட்டுமல்லாமல், ஊடகத்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளம் ஊடகவியலாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.  

30 ஆண்டுகளுக்கு மேலாக குமுதம் குடும்பத்திலேயே தொடர்ந்து பயணித்து, குமுதம் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராக பணியாற்றிய ப்ரியா கல்யாணராமனின் ஊடகப் பயணத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, கடந்த 22 ஆம் தேதி மாலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டார்.

பிரியா சாரின் உடல், அஞ்சலிக்காக முதல்வரின் தொகுதியான சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டது.

வெளிநாட்டில் உயர்கல்வி படித்து வரும் அவரது மகன் சென்னை திரும்பியவுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருந்ததால் இன்று  காலை 11 மணியளவில் அவரது உடல் வில்லிவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  

3 நாட்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்ட போதும் அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட ப்ரியா கல்யாண ராமனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. அதுபோலவே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தவில்லை. இதேபோல பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்த வரவில்லை என்றே தகவல் கிடைத்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேலான ஊடகப் பயணம்.. பத்தாண்டுகளுக்கு மேலாக குமுதம் உள்ளிட்ட பல இதழ்களுக்கு ஆசிரியர் பணி. மிகுந்த பண்பாளர். கடும் உழைப்பாளி. இளைஞர்களை உற்சாகப்படுத்தக் கூடிய நல்ல மனம் படைத்தவராகவே தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர். சர்ச்சைகளில் சிக்காதவர். குறை சொல்ல முடியாதபடி தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர்.

இப்படி பல்வேறு சிறப்புக் குணங்களை கொண்டவர், நீண்ட பாரம்பரியம் கொண்ட குமுதம் குழுமத்தில் பல்வேறு நிலைகளைக் கடந்து,  ஆசிரியர் என்ற பொறுப்பை பல ஆண்களாக வகித்து வந்தவரின் இறுதி ஊர்வலமும் கூட ஆரவாரமின்றி அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது. தன் வாழ்க்கையைப் போலவே, தனது இறுதி ஊர்வலமும் எளிமையாக, ஆர்ப்பாட்டமின்றி நடக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்திருக்கலாம். அப்படியொரு எண்ணம் இந்த இளம் வயதில் நிச்சயம் ஏற்பட்டிருக்காது.

கடந்த பல ஆண்டுகளாகவே குமுதம் இதழும், ரிப்போர்ட்டர் எனும் வாரம் இருமுறை இதழும் பெரும்பாலும் ஆளும்கட்சிக்கு சாதகமாகவே செய்திகளையே வெளியிட்டு வந்திருக்கிறது.  திமுக ஆட்சி ஏற்ற நாள் முதலாக கடந்த ஓராண்டில் திமுக தலைமையை விமர்சனம் செய்யும் அளவிற்கு எந்தவொரு செய்தி கட்டுரையும் பிரசுரிக்கப்பட்டதில்லை. இப்படி ஆளும்கட்சியான திமுகவின் புகழை பரப்பும் அளவுக்கு செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு ஊடகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த ஆசிரியரே மரணத்தை தழுவிய போது கூட, அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் அளவிற்கு திமுக அமைச்சர்களுக்கு மனம் வரவில்லை என்றால், ஊடகவியலாளர்களுக்கு திமுக அரசு வழங்கும் மரியாதையை, முக்கியத்துவத்தை எப்படி புரிந்து கொள்வது?

ப்ரியா கல்யாணராமனின் ஊடக வாழ்க்கைக்கு மரியாதை கிடைக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் இந்துமதி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தியது ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கிறது.

வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் புகழாரம்….

மேலும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நேற்று இரவு (ஜுன் 23) ப்ரியா கல்யாணராமனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஊடகத்துறைக்கும், இலக்கியத்துறைக்கும் ஆசிரியர் அளித்த பங்களிப்பையும் நினைவுக்கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசின் உயரதிகாரியாக அல்லாமல், எழுத்தாளர் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது தலைமைச் செயலாளரின் வருகையும், அஞ்சலியும்…

இதில் என்ன பெருந்தன்மை இருக்கிறது-? என்ற கேள்வி எழுகிறது அல்லவா…

ஆசிரியர் பிரியா கல்யாணராமன் சாருக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடலில் திரு.இறையன்பு ஐஏஎஸ் பற்றிய ஒரு மலரும் நிகழ்வும் இதய அடுக்கில் மறைந்திருக்கிறது.

2006 – 2008 காலகட்டத்தில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் நான் செய்தியாளராக பணியாற்றிய போது, தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வேளையில் ஐஏஎஸ் அதிகாரியான இறையன்பு ஐஏஎஸ் அவர்களை பல நேரங்களில் சந்திப்பது உண்டு. அப்படிதான் 2007 ஆம் ஆண்டில் ஒருநாள் அவரை சந்தித்த போது, காகித கவர் ஒன்றை கொடுத்து குமுதம் ஆசிரியரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்.

குமுதம் அலுவலகம் திரும்பியவுடன் ஆசிரியர் பிரியாவின் அறைக்குச் சென்று அவரிடம் வழங்கினேன். என்ன என்று கேட்டார். வெ.இறையன்பு ஐஏஎஸ் சார் கொடுக்க சொன்னார் என்றேன். கவரை பிரித்தவர், அதில் சிறுகதை ஒன்று இருந்ததை பார்த்துவிட்டு, என்னைப் பார்த்து தலைமைச் செயலகத்திற்கு எதற்கு சென்றீர்கள்? என்று கேட்டார். செய்திக்கான தகவல்களை சேகரிப்பதற்காக என்றேன்.

உடனே கொஞ்சம் கோபமாக, எந்த வேலைக்கு சென்றீர்களோ அந்த வேலையை மட்டும் பாருங்கள் என்றார். எனக்கு தர்மசங்கடமாக ஆகிவிட்டது. இயல்பாகவே ரிப்போட்டரில் பணியாற்றிய செய்தியாளர்கள், குமுதம் ஆசிரியரிடம் பேசுவதோ, பழகுவதோ அரிது. ராணுவ கட்டுப்பாடு மாதிரி, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே அப்போது செய்து கொண்டிருந்தார்கள். எப்போதுமே சிரித்த முகத்தோடு பார்த்த எனக்கு அன்று கோபத்தோடு அவர் பேசியதை இன்றைக்கும் கூட மறக்க முடியவில்லை.

ஆசிரியர் கடிந்து கொண்டது பற்றி இந்த நிமிடம் வரை நான் யாரிடமும் பகிர்ந்து கொண்டது இல்லை.  வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கும் கூட தெரியப்படுத்தப்படவில்லை. உண்மையில் இப்படியொரு நிகழ்வு நடந்ததா ?என்று கூட சந்தேகிக்கலாம். அதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

அந்த சிறுகதையை என்னிடம் கொடுத்த ஒன்றிரண்டு வாரங்கள் கடந்த பிறகு (2007 ஆம் ஆண்டில்)  அவர் விபத்தில் சிக்கி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பா கல்லூரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் என்னிடம் கொடுத்த அதே சிறுகதை, ஆனந்த விகடனில் பிரசுரமானது. அப்போதுதான் குமுதத்தில் அந்த சிறுகதை பிரசுரிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

ஆசிரியர் மீதும் குறை சொல்லிவிட முடியாது. குமுதம் ஆசிரியர் குழுவை அந்தளவுக்கு கட்டுகோப்புடன் வைத்திருந்தவர். அண்மையில் நல்லரசு வெளியிட்ட “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா” என்ற செய்திக் கட்டுரையில் கூட இந்த நிகழ்வை குறிப்பிட விரும்பினேன். ஆனால், ஆசிரியரின் புகழுக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் தவிர்த்தேன்.

ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிப்போர்ட்டரில் நான் சேர்ந்த போது என்மீது பரிவு காட்டினார். ஒரு சில நிமிட விசாரிப்புகள்தான் என்றாலும் கூட அதில் உண்மையான பாசத்தை காட்டியிருக்கிறார் என்பதை, ரிப்போட்டரில் இருந்து நான் வெளியேறிய பிறகு, அவர் என்னிடம் பேசிய நேரத்தில் உணர்ந்து கொண்டேன். அப்போது கூட, குமுதம் குழும சேர்மன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் என்னை பற்றி பேசி மீண்டும் பணியில் சேர்வதற்கான முயற்சியை எடுப்பதாகவே பிரியா சார் ஆதரவாக பேசினார்.

மெஸ்ஸஞ்சர் மூலம் நன்றி தெரிவித்த போது என் மீதான மரியாதையை வெளிப்படுத்திய விதம், இன்றைக்கும் உருக வைக்கிறது.

ஊடக வாழ்க்கையில் உடன் பயணித்தவர்களை மட்டுமின்றி இளமை துடிப்போடு சமுதாய அக்கறையோடு பயணித்த அடையாளம் தெரியாதவர்கள் என  எல்லோரிடமும் கைபேசி வாயிலாக பேசி அன்பு பாராட்டியது, அரவணைத்தது பற்றியெல்லாம் முகநூலில் பரவலாக பதியப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலிகளை வாசிக்கும் போது….

ப்ரியா சார்.. உங்கள் பிறப்பை விட உங்கள் வாழ்க்கை மகத்தானது.. உங்களோடு பழகியவர்கள் மட்டுமல்ல, உங்கள் வாழ்த்துகளை நெஞ்சில் பதியம் போட்டிருக்கும் இளம்தலைமுறை ஊடகவியலாளர்கள் அனைவருமே வாழ்நாள் முழுவதும் உங்கள் பெருமைகளை, புகழை பரப்பிக் கொண்டே இருப்போம்…

அரசியல் இதழ்களில் பணியாற்றினாலும் அரசியல் வாசம் இன்றியே வாழ்ந்தீர்கள்…உங்களின் (அரசியல்) துறவு வாழ்வுக்கு தூயவர்களின் கண்ணீர்  மழையாக பொழிந்திருக்கிறது….

புகழ் வணக்கம்.. புகழ் வணக்கம்..

One thought on “குமுதம் ஆசிரியருக்கு அரசு மரியாதை இல்லை…   வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் பெருந்தன்மை….”
  1. அரசியல்வாதிகள் வந்தால்தான் புகழ் என்பது மாயை சார். உறவுகளும், நட்புகளும் தான் என்றும் நிரந்தரம். சால்ரா போடுபவருக்கு கிடைக்கும் அந்தஸ்து ஜாம்பவான்களுக்கு கிடைப்பதில்லை.
    இது இயல்பானது.
    நான் ஒரு மிகப்பெரிய நாளிதழின் தலைமை நிருபர் ஒருவர் இல்லத் திருமணத்துக்கு சென்றிருந்தேன். என்ன ஆச்சர்யம் … அங்கு அரசியல் வாடையே இல்லை. அத்தனை பேரும் உறவுகள், நட்புகள்… எனக்கு ஆச்சர்யம். அவர் அரசியல்.வதிகளிடம் நெருங்கி பழகியிருந்தாலும்… கொஞ்சம் தூரமாகவே இருந்து கொள்வார். அதையே விரும்பினார், என்றபோது, மனம் நெகிழ்கிறது.
    க.செய்யது அப்துல் கனி,
    செய்தியாளர்.

Comments are closed.