Sat. Apr 27th, 2024

அதிமுகவை நிறுவிய மறைந்த முதல்வர் எம்ஜிஆர், அவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை எஃகு கோட்டையாக வளர்த்தெடுதத மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா வரிசையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து அதிமுகவை வழிநடத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் மாபெரும் வரலாற்று பெருமையை படைக்கவிருந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம், ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டப் போராட்டத்தினால், அதிமுகவின் ஒற்றை தலைமையாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முடி சூடிக் கொள்ளும் வைபவம் ஜூலை 11 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இடம் பெற போகும் சிறப்பு வாய்ந்த பொதுக்குழுவில் பங்கேற்க போகிறோம் என்ற பெருமிதத்துடன் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்து வந்திருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தீராத மனவேதனையுடன் அவரவர் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், பொதுக்குழுவில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக அதிகமாக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல் அமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பொதுக்குழுவில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் உண்மை தன்மையைப் பற்றி அறிந்து கொள்ளாமலும் ஆர்வக் கோளாறின் காரணமாகவும் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு நிகழ்வைப் பற்றி மனம் வெதும்பி போய்வுள்ளார்கள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள். அவர்களில் நல்லரசுக்கு அறிமுகமானவரிடம் பேசினோம். பொதுக்குழுவில் ஆளுயுர ரோஜா மாலை அணிவிக்கப்பட்ட போது இபிஎஸ் கோபமாக பேசுவதைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அதிமுக மாவட்ட செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.

எதற்காக இபிஎஸ் கோபப்படும் சூழல் உருவானது என்பதையும் அவரே விவரித்தார். கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஆகியோரின் உத்தரவுகளுக்கு எதிராக விடியற்காலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு அளித்த ஒரு சாரருக்கான தீர்ப்பால், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியடைந்தனர். அதனால், பொதுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாருக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்துதல் போன்ற எந்தவொரு கொண்டாட்ட நிகழ்வும் வேண்டாம் என்று அதிமுக தலைமை கண்டிப்புடன் கூறிவிட்டது. மேலும், ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய ஓபிஎஸ், பொதுக்குழு மேடையில் அமர்ந்திருந்த போதும் அவர் மீதான கோபம் முன்னணி நிர்வாகிகளிடமும் காணப்பட்டது.

இப்படிபட்ட அசாதாரண சூழலில் தனக்கு மட்டும் மாலை மரியாதையெல்லாம் செய்வது நாகரிகமாக இருக்காது என்று பொதுக்குழுக் கூட்ட அரங்கிற்குள் வருவதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார். அதையும் மீறி பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகளை முன்னின்று செய்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அவைத்தலைவர் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்காக மைக் முன்பு இபிஎஸ் வந்த போது பன்னீர் ரோஜாக்களால் கட்டப்பட்ட ஆளுயுர மாலையை அணிவித்து மரியாதை செலுத்த முயன்றார். அப்போதே அதை வேண்டாம் என்று தடுத்து விட்டார் இபிஎஸ். அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பொதுக்குழு உறுப்பினர்களின் எதிர்ப்பு முழக்கத்தை எதிர் கொள்ள முடியாததால் ஓபிஎஸ், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பொதுக்குழுக் கூட்டம் மரபுபடி நடைபெறுவதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஓபிஎஸ் நடந்து கொண்டததால் இபிஎஸ் யோசனையில் ஆழ்ந்தார். இந்த நேரத்தில் மீண்டும் ஏற்கெனவே போட்ட அதே பன்னீர் ரோஜா மாலையை பெஞ்சமின் எடுத்து வந்து அணிவிக்க முயன்ற போதுதான், ஒருமுறை சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்களா? என்று கொஞ்சம் அழுத்தமாக இபிஎஸ் சொல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இந்த காட்சியைதான் இபிஎஸ் ஆத்திரப்பட்டார். ‘பன்னீர்’ ரோஜா மாலையை பார்த்து எரிச்சல் பட்டார் என்று காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன.

அதுவும் குறிப்பாக சன் நியூஸில், இந்த காட்சி மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டது. மற்ற காட்சி ஊடகங்கள் இந்த நிகழ்வை கடந்து போனது ஒரு பக்கம் நிம்மதியளித்தாலும், உண்மைக்கு மாறான நிகழ்வை திரும்ப திரும்ப ஒளிபரப்பி, இபிஎஸ்ஸின் புகழுக்கு அவப்பெயர் சூட்டுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரோஜா பெயரில் பன்னீர் இருந்தால் கூட எதிர்க்கட்சித்தலைவருக்கு பிடிக்காது என்று பொருள்பட செய்தி பரப்பியது எல்லாம் விஷமத்தனமானது என்று கொஞ்சம் கோபப்படவே பேசினார் அந்த மாவட்டச் செயலாளர்.

ஒரு ரோஜா மாலையால் இவ்வளவு அவதூறு பரப்ப முடியுமா?

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா…..