Sun. Jul 3rd, 2022

 அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றுக்கு கரும்புள்ளியாக,  கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுக்குழுவில் காணப்படாத குழப்பம், தலைதூக்கிய அநாகரிக செயல்கள் போன்றவை அக்கட்சியின் லட்சோப தொண்டர்கள் மனதில் ஆறாத வடு போல அவமானத்தை தேடி தந்துவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..

பனிவின் சிகரம் என்று புகழப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தன் செல்வாக்கு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பதை உணர்ந்த பிறகும், திமுகவிடம் சோரம் போன உண்மை வெட்ட வெளிச்சமான பிறகும்கூட மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரிமான் போலஎன்று நிலையை மேற்கொள்ளாமல், ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கைக்கும் அவமானத்தை தேடித் தரும் வகையில், நடந்து கொண்டார் என்ற விமர்சனத்தை பற்றி கட்டுரையின் நிறைவுப் பகுதியில் விரிவாக பார்ப்போம்.

அதற்கு முன்பாக பொதுக்குழுக் கற்றுத் தந்த பாடம் என்னென்ன?

முதலில் நீதித்துறை……

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியின் உத்தரவும், அரசியல் ஆய்வாளர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் எந்தவிதமான விமர்சனத்தையும் ஏற்படுத்தாத நிலையில், மேல்முறையீட்டு மனுவை நள்ளிரவில் விசாரணைக்கு ஏற்று விடிய விடிய வாதங்களைக் கேட்டு இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவு, சாதாரண மனிதர்களைக் கூட கொந்தளிக்க வைத்திருக்கிறது என்பது பிரபல வழக்கறிஞர் தமிழ்மணி, மூத்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரின் சூடான வாதமாக இருந்து வருகிறது.

ஒரு அரசியல் கட்சியின் பொதுக்குழுவில் என்னென்ன விவாதங்கள் நடைபெறும் என்பதை முன்கூட்டியே நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்பதற்கு என்ன தேவையிருக்கிறது என்ற கேள்வியும், இருதரப்பில் ஒரு சாராருக்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் ஏற்பட்டிருக்குமானால் அந்த அச்சத்தை போக்குகிற வகையில் இறுதி தீர்ப்பின் போது நிவாரணம் தரும் வகையில் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கலாம். முன்கூட்டியே ஒரு தரப்பினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வது மாதிரி மற்றொரு தரப்புக்கு எதிரான தீர்ப்பு கூறுவது நீதித்துறையின் மாண்பிற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் ஆவேசமாகிறார்கள்.

ஆக மொத்தத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு, பொதுஜன எதிர்பார்ப்பிற்கு எதிராக வழக்கை எதிர்கொண்டதை விடவும், பிறப்பித்த உத்தரவும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. .

அதிமுக விவகாரத்தில் அரசியல் ஆதாயத்தை அடைந்திருக்க வேண்டிய ஆளும்கட்சியான திமுகவே ஜனநாயக மாண்போடு நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தாவது நீதிமன்றங்கள் இனிமேலாவது பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

இரண்டாவது… ஆளும்கட்சியான திமுகவின் பெருந்தன்மை….

ஒற்றைத் தலைமை குறித்த விவாதத்தை கிளப்பிய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல் அதற்கடுத்த ஒவ்வொரு நாளும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல்களின் போதே தலையிட்டு, எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆளும்தரப்பு நெருக்கடிகளை கொடுத்திருக்க முடியும்.

அளவுக்கு அதிகமான போலீசாரை குவித்து அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தி ஆவேசப்படுத்தி சட்டம் ஓழுங்கை சீர்குலைக்க வைத்து கைது நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால், அதிமுக அலுவலகத்திற்குள்ளே நடந்த எந்தவொரு நிகழ்விலும் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதுதான், இன்றைய தேதியில் அரசியல் கட்சியினருக்கு பாடமாக இருக்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை லாபம் என்ற குறுகிய மனப்பான்மை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லாதது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்கிறார்கள் அதிமுகவில் உள்ள எம்ஜிஆர் காலத்து நிர்வாகிகள்.

அதற்கும் மேலாக, நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று, காவல்துறை பாதுகாப்பு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் ஆலோசனை என்ற பெயரில் தேவையற்று காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஆவடி மாநகர காவல்துறை ஆணையரகம் அறிவிப்பை வெளியிட்டதிலும், திமுக அரசின் நேர்மையை பாராட்டுகிறார்கள்.  

பொதுக்குழு கூடுவதற்கு முதல்நாள் திருமண மண்டபத்தை  ஒட்டி வைக்கப்பட்ட வரவேற்பு பதாகைகளை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டதை போல, ஏற்கெனவே அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி , அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி போன்றவர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் வன்முறையை கட்டவிழித்து விட பெட்ரோல் குண்டு வீச வாய்ப்பு இருக்கிறது என்று பகிரங்கமாக கூறியதற்கு ஏற்ப, அசம்பாவித சம்பவங்களை ஊதி பெரிதாக்கும்  வகையில்  ஒருபக்கம் பதாகைகளுக்கு தீ வைப்பது போன்ற நிகழ்வுகளுக்கு வழியமைத்துவிட்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது என்று கூறி பொதுக்குழுக் கூட்டம் நடத்த முடியாத அளவுக்குகூட தடையுத்தரவை ஆளும்தரப்பு பிறப்பித்திருக்க முடியும். ஆனால், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவது ஜனநாயக மரபாக இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு, மிகுந்த ராஜதந்திரம் என்ற பாராட்டை அவருக்குப் பெற்று தந்துள்ளது.

இத்தனைக்கும் திமுகவுக்கு எப்போதுமே பாதிப்பை ஏற்படுத்த முடியாத தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் பலவீனமடைவதை திமுக தலைமை தடுத்து நிறுத்தி, திமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் பலமாக உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தை, அவரது அரசியல் பின்புலத்தை சிதைக்கவும், தனக்கு இணையான தலைவராக தலையெடுக்க விடாமல் இபிஎஸ்ஸை முடக்கி போடுவதற்கும் எல்லா விதத்திலும் சாதகமான சூழல் அமைந்த போதும், அரசியல் களத்தில் இபிஎஸ்ஸை வீழ்த்துவதுதான் போர்ப்படைத் தளபதிக்கு அழகு என்ற லட்சிய உறுதியோடு, குறுக்கு வழியில் இபிஎஸ்ஸை வீழ்த்தும் எந்தவொரு வியூகத்தையும் கையில் எடுக்காத முதல்வர் மு.க.ஸ்டாலினின் மேன்மை மிகுந்த பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

தேர்தல் களத்தில் திமுகவை வீழ்த்த துடிக்கும் இபிஎஸ்ஸும் இந்த மனப்பான்மையை அதிகரித்துக் கொள்வது  அவருக்கு மேலும் மேலும் செல்வாக்கை அதிகப்படுத்தி தரும்.

இபிஎஸ் தரப்புக்கான பாடம்…

கடந்த பல மாதங்களாக போட்டு வைத்த திட்டம் விடியற்காலை உத்தரவால் தவிடி பொடியாகிவிட, இபிஎஸ் ஆதரவாளர் கூட்டம் அடைந்த அதிர்ச்சி, பொதுக்குழுக் கூட்ட நிகழ்வில் வெட்ட வெளிச்சமானது.

சட்டரீதியான போராட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை சரி செய்து கொள்ள போதிய நேரம் கிடைக்காத போதும், இபிஎஸ்தான் அதிமுகவின் எதிர்கால தலைவர் என்பதை பகிரங்கப்படுத்தும் வகையில், இபிஎஸ்ஸுக்கு கொடுக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், ஒபிஎஸ்ஸை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் புறக்கணித்து அவமானப்படுத்தியதிலும், இபிஎஸ் ஆதரவுக் கூட்டம் தங்களின் ஆற்றாமையை தீர்த்துக் கொண்டது.

பொதுக்குழு நிகழ்ச்சி நிரலை, மிகுந்த நிதானத்தோடு கையாண்டிருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே 23 கோரிக்கைகளையும் நிராகரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை ஆவேசமாக சி.வி.சண்முகம் அறிவித்ததற்குப் பதிலாக, ஐந்து ஐந்து தீர்மானங்களின் தலைப்புகளை வரிசையாக வாசித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை மேடைக்கு வரவழைத்து அவர்கள் மூலம் நிராகரிக்கப்படுகிறது என்று அறிவிக்க வைத்திந்தால், பொதுக்குழுவில் அனைவருக்கும் சரிசமமான பங்களிப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மார்தட்டிக் கொண்டிருக்கலாம்.

அடுத்து, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வழங்கப்பட்ட அடுத்த பொதுக்குழுக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு குறித்த கோரிக்கை மனுவை சி.வி. சண்முகம் வழங்கியதற்குப் பதிலாக தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ், ஆர்.பி.உதயகுமார், கடலூர் ராஜு போன்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம்.

எல்லாவற்றையும் விட முத்தாய்ப்பாக, அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு மாறாக, பொதுக்குழுக் கூட்டத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை தேடித் தரும் சட்டப்போராட்டத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்ஸின் அரசியல் காய் நகர்த்தல்கள்,  தவறான முன்னுதாரணம் என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்த, அனுபவம் வாயந்த பொதுக்குழு உறுப்பினர்களை பேச அழைத்திருக்கலாம். 

நிறைவாக, முதல் சுற்று சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ், திமுகவிடம் விலை போய்விட்டார் என்பதற்கான ஆதாரங்களையும், அவரது எம்பி மகன் ரவீந்திரநாத், ஆளும்கட்சியின் முதன்மை குடும்பத்து வாரிசுகளுடன் கொண்டிருக்கும் நெருக்கமான நட்புகளையும் பொதுக்குழுவில் அம்பலப்படுத்தி, அரவணைக்க வேண்டியவர் அல்ல, அகற்றப்பட வேண்டியவர் ஓபிஎஸ்தான் என்பதை பொதுக்குழு மூலம் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களுக்கும் பகிரங்கமாகவே கூறியிருக்கலாம்.

கூடவே, வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் பிடிக்குள் மீண்டும் அதிமுக சிக்கும் வகையில் முன்னெடுத்து வரும் காய் நகர்த்தல்களையும் குற்றச்சாட்டுகளாக அடுக்கி, அதிமுக தொண்டர்களை நோக்கியும் ஓபிஎஸ் செல்ல முடியாமல் பொதுக்குழு வாயிலாக தடுத்து நிறுத்தியிருந்தால்,  பொதுச் செயலாளர் என்ற கிரீடத்தை சூடிக் கொள்வது தள்ளி போயிருந்தாலும் ஓபிஎஸ்ஸின் சட்டப்போராட்டத்தை கூட தவிடி பொடியாக்கியிருக்கலாம். அதேபோல, அதிமுக உட்கட்சி பிரச்னைகளுக்கு பாஜக மேலிட தலைவர்களின் பஞ்சாயத்தை நாடும் ஓபிஎஸ்ஸின் நரி தந்திரத்திற்கும் சாவுமணி அடித்து, ஒரே கல்லிலில் இபிஎஸ் பல காய்களை அடித்திருக்க முடியும்.

ஜுன் 23 ல் (நேற்று )நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் இபிஎஸ்ஸுக்கு சோதனை ஓட்டமாக அமைந்துவிட்டது. அடுத்து வரும் பொதுக்குழுக் கூட்டம்தான் வாகை சூடுவதற்கான உண்மையான களம்..

ஜுலை 11 க்கு முன்பாக ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களையும் தன் வசப்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பு இபிஎஸ்ஸுக்கு இருக்கிறது.

சாதிப்பாரா ? சறுக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்….

Leave a Reply

Your email address will not be published.