Fri. Apr 26th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த தடையில்லை என சம்மட்டி அடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

அப்பப்பா.. கடந்த 23 ஆம் தேதியில் இருந்து என்னவெல்லாம் கூப்பாடு போட்டார்கள்?

ஒற்றை தலைமையை தேர்வு செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை..

அதிமுகவை துவக்கிய மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளை மாற்ற முடியாது?

பொதுச் செயலாளர் என்றால் அம்மாதான்..அந்த இடத்தில் வேறு யாரையும் அமர்த்த முடியாது..

அவைத்தலைவரை நியமிக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை..

இப்படி வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் தொலைக்காட்சி விவாதங்களில் நரம்பு புடைக்க கத்திய ஊடகவியலாளர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

புகழேந்தி..புகழேந்தின்னு ஒரு டூபாக்கூர்..

பெங்களூரில் நாலு வீதி சுற்றி வந்தால் கூட பிச்சைக்காரர்கள் கூட கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஆனால், டிவி விவாதங்களில் நாள்தோறும் அதிமுக பை லாவை எம்ஜிஆர் எழுதியபோது கூடவே இருந்து பார்த்தது மாதிரி கூவியது இருக்கே… பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது.

ஒற்றை தலைமையை நோக்கி அதிமுக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று ஓபிஎஸ்ஸுக்கு தெரியவே தெரியாதா என்ன? கட்சியில் எடப்பாடி கை ஓங்கிவிட்டது. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது என்று தெரிநதிருந்தும் கூட, கடந்த 20 நாட்களுக்கு மேலாக அதிமுகவுக்கு அவப்பெயரைத் தேடித் தந்து, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் எதிரியாகிவிட்டார் ஓபிஎஸ்.

அதிமுகவின் உட்கட்சிக்குள் விவாதிக்கப்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தை பூதாகரமாக்கி,  எந்த வழியிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொதுச் செயலாளர் ஆகி விடக் கூடாது என்ற தீய எண்ணத்தில் அக்கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காட்டிய அனைத்து பூச்சாண்டிகளும் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவால் புஸ்வாணமாகிவிட்டது.

கடந்த ஜுன் 16 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்பே ஒற்றை தலைமை விவகாரம் அக்கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விரிவாக விவாதிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கீழ் மட்டத்தில் இருந்து தலைமைக் கழகம் வரை ஆதரவு திரப்பட்டுவிட்டது. கிட்டதட்ட 99 சதவீதம் நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய தயாராகிவிட்டனர் என்பதை நன்கு அறிந்தும் கூட, மாபெரும் செல்வாக்குமிக்க தலைவர் தான்தான் என்ற நினைப்பில் ஓ.பன்னீர்செல்வம், தனக்குப் பின்னால் மத்தியில் உள்ள ஆளும்கட்சியான பாஜகவும், மாநிலத்தில் உள்ள ஆளும்கட்சியான திமுகவும் உள்ளதாக ஒரு கற்பனையான பிம்பத்தை ஏற்படுத்தி, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தார்.

ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்ததைப் போல, 5 சதவீதத்திற்கு குறைவான ஆதரவுக் கூட்டத்தை வைத்துக் கொண்டு வானத்திற்கும் பூமிக்கும் குதித்தால் எப்படி? என்று ஓபிஎஸ்ஸின் மானத்தை கப்பலேற்றியதைப் போல, அதிமுகவின் தலைமைக் கழகம் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலத்தை நன்கு அறிந்து வைத்திருப்பதால்தான் அவரை ஆதரிப்பதற்காக எந்தவொரு மாவட்டத்தில் இருந்தும் அணி, அணியாக தொண்டர்கள் சென்னைக்கு திரண்டு வரவில்லை.

இன்னும் சொல்லப்போனால், கடந்த 23 ஆம் தேதிக்கு மறுநாளில் இருந்தே பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

அதிமுக தொண்டர்களிடம் தனக்கு அமோக செல்வாக்கு இருப்பதாக கூறிக் கொள்ளும் ஓபிஎஸ், கடந்த பத்து நாட்களில் எந்த மாவட்டத்திற்கு சென்று பொதுக்குழுவில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு குரல் எழுப்பினார்.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன், வி.கே.சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலை ஒட்டுமொத்த அதிமுகவும் ஒதுங்கி வைத்த பிறகும் அவர்களுக்கு ஆதரவான மனநிலையிலேயே இருந்து வருகிறார் ஓபிஎஸ் என்பதுதான் இபிஎஸ் தலைமையிலான ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கோபம். அந்த கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில்தான் ஓபிஎஸ்ஸின் சகோதரர் பகிரங்கமாகவே வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததடன் அவரது தலைமையை ஏற்க வேண்டும் என்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதும் இபிஎஸ் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.

எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவதைப் போல, ஆளும் திமுக தலைமையோடு ஓபிஎஸ்ஸும் அவரது மகனான ரவிந்திரநாத் எம்பியும் மிக மிக நெருக்கமாக இருந்து வருகிறார்கள் என்பதை ஒன்றிரண்டு நிகழ்வுகள் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பிறகுதான், அதிமுகவின் தலைமைப் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்வதை இனிமேலும் அனுமதிப்பது மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கு செய்யும் துரோகம் என்று தலைமைக் கழக நிர்வாகிகள் ஆவேசப்பட, அந்த கோபம் தான் இபிஎஸ்ஸை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தை துரிதப்படுத்தியது.

அதற்காக கூட்டப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தை (ஜுன் 23) தடுத்து நிறுத்த வேண்டும் என கட்சி விரோக நடவடிக்கை என்று தெரிந்திருந்த போதும் நீதிமன்றத்தை துணிந்தே நாடினார் ஓபிஎஸ். கீழமை நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியும் நியாயத்தின் பக்கமும் தர்மத்தின் பக்கமும் நின்று தீர்ப்பு வழங்கினார்கள். அப்போதுகூட தனது தனது அதிகார வேட்கையை நிறுத்திக் கொள்ளாமல் நள்ளிரவில் உயர்மன்றத்தின் அமர்வில் முறையிட்டார்.

23 தீர்மானங்கள் மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 22 ஆம் தேதி விடியற்காலையில் உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய உத்தரவு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, மூத்த ஊடகவியலாளர்கள் சத்யாலயா ராமகிருஷ்ணன், குபேந்திரன், யூ டியூபர் சவுக்கு சங்கர் உள்ளிட்ட சிலர்தான், உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய உத்தரவை விமர்சனம் செய்தனர்.

அதிமுக பொதுக்குழுவே நடக்கக் கூடாது என்ற தீய எண்ணத்தோடு தடை உத்தரவு கேட்ட ஓபிஎஸ்ஸை தங்க தம்பாளத்தில் வைத்த பொதுக்குழு உறுப்பினர்கள் வரவேற்பார்கள். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் தனக்கு எதிராக நிற்கிறார்கள் என்பதை அறிந்த பிறகு ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவுக்கு சென்றதே கலகத்தை ஏற்படுத்த தானே? 2 ஆயிரம் பேர் கலந்துகொண்ட பொதுக்குழுவில் ஆவேசம் அடங்காத ஒரு உறுப்பினர் வீசிய தண்ணீர் பாட்டிலையே பெட்ரோல் வெடிகுண்டு வீசியது போல சொந்த கட்சி நிர்வாகிகள் மீதே அவதூறு பரப்பிய ஓபிஎஸ் மீதும் அவரது கைத்தடிகள் மீதும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்காமல் இன்னும் நீக்காமல் விட்டு வைத்திருக்கிறார்களே என்று அவர்கள் நிம்மதிபட்டு கொள்ள வேண்டும்.

கடந்த ஜுன் மாதம் 16 ஆம் தேதியில் இருந்து தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒற்றை தலைமை விவகாரத்தில் பங்கேற்று பேசிய மூத்த ஊடகவியலாளர்கள், எடப்பாடி பழனிசாமி கோடி கோடியாக செலவழித்து மாவட்டச் செயலாளர்களை, பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று பொங்கினார்கள்.

பாவம் ஓபிஎஸ்.. நாள்தோறும் பிச்சையெடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல, டிடிவி தினகரனும், வி.கே.சசிகலாவும் கூலி வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை வைத்து தான் பொது சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த மூன்று பேருக்கும் துரோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது.

கொள்ளையடித்து குவித்து வைத்துள்ள பணத்தை கோடி கோடியாக கொட்டினாலும் இவர்களை நம்பி வருவதற்கு அதிமுகவில் ஒருவர் கூட இல்லை என்பதுதான் இன்றைய கள யதார்த்தம்.

மூத்த ஊடகவியலாளர்களில் பலர், எடப்பாடி பழனிசாமியை கொடுங்கோலன் போலவே சித்தரித்து  பேசிய பேசிய பேச்சை எல்லாம் வைத்து பார்த்தால், வரும் 11 ஆம்தேதிக்குப் பிறகு அதிமுகவே காணாமல் போய்விடும் என்ற அளவுக்குதான் இருக்கிறது.

அதிமுகவிற்கு யார் தலைமை ஏற்க வேண்டும் என்பதை அக்கட்சி தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இப்படிபட்ட கருத்து ஏற்படையதுதான். ஒற்றை தலைமை முழக்கம் தொண்டர்களிடையே பெருவாரியாக எழுந்ததையடுத்துதானே பொதுக்குழு உறுப்பினர்கள் அந்த முடிவை நோக்கி நகர்ந்து இருக்கிறார்கள்.

உட்கட்சி ஜனநாயகத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முயன்ற ஓபிஎஸ்ஸுக்கும் அவரது எடுபிடிகளுக்கும் வரும் 11 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தில் சரியான பாடம் கற்பிக்கப்படும் என்றே எதிர்பார்க்கலாம்.