Fri. Apr 26th, 2024

செம்பரம்பாக்கம் ஏரி… இந்த பெயரைக் கேட்டாலே சென்னை மக்களுக்கு திக் என்றே இருக்கும்.

கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னறிவிப்பு இன்றி விநாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடபட்டதில், சென்னை மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மாநகரின் மையப்பகுதிகளுக்குள் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர்.

கடந்த 7 ஆண்டுகளில் அந்த அச்சவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போன நிலையிலும், மழைக்காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியைப் பற்றி வெளியாகும் செய்திகள், சென்னை மாநகர மக்களுக்கு பழைய நினைவுகளை மலர வைப்பது உண்டு.

அந்தளவுக்கு அச்சமூட்டும் ஏரியா அது என்றால், இல்லை என்றே செம்பரம்பாக்கம் வாசிகள் கூறுகின்றனர். கடல் போல காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, இயற்கை கொடுத்த பொக்கிஷம் என்பது உள்ளூர் மக்களின் ஆனந்த கூற்றாகும்.

சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும், பூந்தமல்லியில் இருந்து நான்கு கி.மீ. தூர பயணத்தின் முடிவிலும் செம்பரபாக்கம் ஏரி கண் முன்னே விரியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த ஏரி, சென்னை மாநகர மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்கும் முதன்மையான ஏரியாகும்.

ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 அடி ஆகும்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பூண்டி ஏரியை கடந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகிறது.
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஏரி என்றும் சோழர் காலத்தின் நீர்த்தேக்கத் திட்டத்தின் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி என்று கதைப்போரும் உண்டு.

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஏரியில் இருந்து செல்கிறது. ஏரிக்கரையில் உள்ள பழமை வாய்ந்த கோபுரம், நீரை அளவிடுவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ஏரி அருகே பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் அழகையும், அதன் மறுபுறத்தில் உள்ள இயற்கை சூழ் குடியிருப்புகளின் அழகையையும் கண்டு ரசிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் உள்ள பார்வையாளர் மாடங்களும் உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கும் வரப்பிரசாதம்.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட செம்பரபாக்கம் ஏரியின் இன்றைய நிலை, உள்ளுர் மக்களை, சுற்றுலா பயணிகளை ரத்தக் கண்ணீர் சிந்த வைக்கிறது.

ஏரிக்கரையில் உள்ள பாதையும் பார்வையாளர் மாடத்திற்கு செல்லும் பாதையும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக இங்கு நாள்தோறும் காலையில் நடைப்பயிற்சி செல்வோர் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மாலை நேரத்தில் பொழுதுபோக்க வரும் பெண்கள் உள்ளிட்டோருக்கு கடும் அச்சத்தை தரும் வகையில் குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள அதிகரித்து கொண்டே வருகிறது.

இருள் சூழ்வதற்கு முன்பாகவே ஏரிக்கரை பாதையில் அமர்ந்து மதுபானங்களை குடிப்போர், போதையில் செய்யும் அத்துமீறல்களைக் கண்டு பெண்கள், குழந்தைகள் மீண்டும் ஒருமுறை ஏரிக்கு வருவதே கிடையாது. போதையில் மதுபாட்டில்களை ஏரிக்கரையில் வீசி எறிவதால், அவை உடைந்து நடைபாதையில் கண்ணாடி துகள்கள் கொட்டி கிடக்கின்றன.

மேலும், பரந்து விரிந்து ஏரி இருப்பதால், அதன் கரையோருமும் பார்வையாளர் மாடங்களிலும் அமர்ந்து காதலர்கள் செய்யும் சில்மிஷங்கள் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட சிறுவர் சிறுமிகளை தவறான பழக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றன என்று பெற்றோர்கள் ரத்தக் கண்ணீர் சிந்துகிறார்கள்.
வயது முதிர்ந்தவர்கள் மாலைநேரங்களில் இயற்கை காற்றை சுவாசிக்க, ஏரிக்கரைக்கு வந்தால், மது குடிப்போர், காதலர்கள் செய்யும் நாகரிகமற்ற செயல்களால் நிம்மதியே போய்விடுகிறது என்று புலம்புகிறார்கள்.

பார்வையாளர் மாடங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுபவையாகவும் இருக்கிறது. மின்விளக்குகள் இன்றியும், பார்வையார் மாடத்தின் மேற்கூரை, தரைதளம் உள்ளிட்டவை சிதிலமடைந்து காணப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் உள்ள மின்மாற்றிகள் உயிர் பயத்தை ஏற்படுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக கலாச்சாரச் சீரழிவு மையமாக இன்றைக்கு மாறியிருக்கிறது செம்பரபாக்கம் ஏரி என்பதுதான் பெரும்பாலான உள்ளூர்வாசிகளின் குற்றச்சாட்டாக இருந்து கொண்டிருக்கிறது.

போலீசார் அராஜகம்

கள்ளக்காதலர்களின் அநாகரி செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினர், அவர்களை மிரட்டி பணம் பறிப்பதில்தான் அதிக கவனம் செலுத்துவதாக ஆவேசப்படும் சமூக ஆர்வலர்கள், உண்மையான காதலர்களையும் கூட மிரட்டி பணம் பறிப்பதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, மதுபோதையில் அத்துமீறும் குடிமகன்களை கண்டு கொள்ளவதே இல்லை என்பதுதான் மனவேதனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்கிறார்கள்.

பாரம்பரியமிக்க செம்பரபாக்கம் ஏரியின் புனிதத்தை காப்பாற்றுவதற்கு வாட்ச்மேன் (பாதுகாவலர்) ஒருவரை தமிழக அரசு உடனடியாக நியமித்து, சட்டவிரோதச் செயல்களை தடுக்க வேண்டும் என்பது உள்ளூர்வாசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

உயிர்ப்பலி கேட்கும் ஆபத்து…

பெற்றோர்கள் துணையின்றி ஏரிக்கு வரும் சிறுவர்கள், ஆபத்தை உணராமல் ஏரியில் குதித்து விளையாடுகிறார்கள். ஏரியின் ஆழம் மற்றும் புதர் மண்டி கிடப்பதை பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட ஏரியில் அதிக நேரம் குளித்து விளையாடுகிறார்கள். தப்பித்தவறி ஆழமான பகுதிக்கு சென்று விடும் நிலை ஏற்பட்டால், அதில் இருந்து விரைவாக மேற்பகுதிக்கு வருவது கடினம் என்று கூறும் உள்ளூர்வாசிகள், புதரில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் உயிரை இழக்க வேண்டிய ஆபத்தும் உள்ளதாக அச்சத்துடன் கூறுகிறார்கள்.

மேலும் ஏரியின் கரைகள் பல இடங்களில் சிதிலமடைந்து உள்ளதுடன், கரைகள் தூர்ந்து போய் இருப்பதால் கரையோரம் விளையாடும் சிறுவர், சிறுமியர்களுக்கு பாதுகாப்பற்றதாக அப்பகுதி உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

ஏரிக்கு வரும் அனைத்து வழித்தடங்களும் தூர்ந்து போய் இருப்பதால் நடந்து வருபவர்களுக்கு மட்டுமல்ல இருசக்கர வாகனங்களில் வருபவர்களும் அவதிப்பட்டு வருவதாகவும் உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


மேலும், சிதிலமடைந்துள்ள ஏரிக்கரை பாதை, மின்மோட்டார் இயங்கும் அறை, பராமரிப்பு இன்றி இருக்கும் பூங்கா உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளையும் போர்க்கால அடிப்படையில் களைந்து செம்பரபாக்கம் ஏரியை மீண்டும் பழைய வரலாற்று பெருமைகளை பேசும் வகையில் புனரமைக்க வேண்டும் என்பதே செம்பரபாக்கம் ஏரி பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

பொதுமக்களின் குமறல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ்நாடு அரசு?