Sat. Nov 23rd, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்..

திருப்பூரில் நண்பரின் மனைவி தண்ணீர் லாரியில் அடிபட்டு மரணமெய்திய நிலையில் அவர் அணிந்திருந்த தங்கத்திலான தாலிக்கொடி திருடப்பட்டதை பற்றியும் அந்த கொடூர நிகழ்வை ஊடக நண்பர்கள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததைப் பற்றியும் எனது முகநூலில் பகிர்ந்தது மட்டுமின்றி வாட்ஸ்அப் பிலும் பகிர்ந்திருந்தேன்.

கடந்த புதன்கிழமை (ஜுன் 8) இரவு விபத்து நடந்த நிலையில் மறுநாள் காலை தகவலை பகிர்ந்த சில விநாடிகளில் பிரபலமானவரும் குமுதம் குழுமத்தின் ஆஸ்தான ஜோதிடருமான ஷெல்லி வாட்ஸ்அப் காலில் அழைத்து திருப்பூரில் உள்ள தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவ சொல்கிறேன் என்றது மிகுந்த ஆறுதலை தந்தது..

அவருடன் பேசிக்கொண்டிருந்த போது கலைஞர் தொலைக்காட்சியின் மூத்த ஊடகவியாளரும் 20 ஆண்டுக்கு மேலான நண்பருமான ஜி. முருகன் என்னை அழைத்து விபத்து குறித்து எல்லா விவரங்களையும் கேட்டு கோவை டிஐஜி முத்துசாமி சாரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசி தகவலை பகிர்ந்து விட்டதாக கூறியதுடன் என்னிடம் ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.. அவரின் அன்பான, ஆறுதலான வார்த்தைகளை கேட்டு வருத்தப்பட்டேன்..

அதற்கு காரணம், சென்னையிலேயே தங்கியிருந்த போதும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நேரில் சந்திக்கும் சூழலை நான் உருவாக்கி கொள்ளவில்லை. அதேபோல கைபேசியிலும் பேசவில்லை.. ஆனால் கடந்த ஒருமாதமாக அடிக்கடி பேசும் நிலை ஏற்பட்ட போது நேரில் சந்திப்போம் என்ற அவரது அழைப்பையும் தள்ளி போட்டுக் கொண்டே வந்தேன்.. அன்று இரவுக்குள் ஒன்றிரண்டு முறை அழைத்து திருப்பூரில் பிரசினை இல்லையே என ஜி. முருகன் கேட்டவாறே இருந்தார்..

அன்றைய நாள் ( ஜுன் 9 ) முழுவதும் திருப்பூர் விபத்து குறித்த தகவல்கள்தான் என்னை ஆக்கிரமித்து இருந்தது. உடன்பிறவா சகோதரர்களான புதிய தலைமுறை டிவியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், நியூஸ் 7 டிவி நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் ஆகியோர் தங்கள் தொலைக்காட்சியில் திருப்பூர் விபத்து குறித்த செய்தி ஒளிப்பரப்பு ஆகும் தகவலை வாட்ஸ் அப்பில் தெரிவித்தனர்..தந்தி டிவி செய்திப் பிரிவுக்கு தலைமை ஏற்றிருக்கும் தம்பி ராஜாவும் ஒளிப்பரப்பான செய்தி விவரத்தை வாட்ஸ்அப் பில் அனுப்பி வைத்தார்..

மறுநாள் ( 10 ம் தேதி. விபத்து நடந்த 3 ம் நாள்) மீண்டும் ஜி. முருகன் அழைத்து திருப்பூர் நிலவரம் பற்றி கேட்டார்..இறுதிச்சடங்கு முடிந்திருக்கிறது..மனைவியை இழந்த சோகத்தில் இருக்கும் நண்பரிடம் விரிவாக பேச முடியவில்லை..போலீஸ் நடவடிக்கைகள் குறித்து தகவல் வந்தவுடன் அழைக்கிறேன் என்றேன்..அந்தநேரத்தில் விபத்து நடந்த பகுதியை உள்ளடக்கிய காவல் நிலைய பெயர், கைபேசி எண் உள்ளிட்டவற்றை வாங்கி தாருங்கள்.நான் விசாரிக்கிறேன் என்றார்..அவரைப் போலவே அக்கறையோடு தம்பி தியாகச்செம்மல் வாட்ஸ் அப்பில் திருடப்பட்ட நகை கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அன்றைய தினமும் அது தொடர்பான செய்தியை திருப்பூர் செய்தியாளர் மூலம் சேகரித்து செய்தி வெளியிடுவதாக தெரிவித்தார்..

சென்னை ஊடக நண்பர்கள் பத்துக் கும் மேற்பட்டவர்களின் முழு ஈடுபட்டால் திருப்பூர் விபத்து+ தாலி திருட்டு செய்தி தமிழகம் முழுவதும் பரவியது..

இதன் பிறகும் கூட மனைவியை இழந்த நண்பரும் உறவினர்களும் அமைதி யடையவில்லை.. தங்கத்திலான தாலி+ அதில் கோர்க்கப்பட்ட இதர ஆபரணங்கள் பரம்பரையாக உள்ளவை.. அவை கண்டிப்பாக திரும்ப வேண்டும் என்று சொல்ல, திருப்பூர் போலீசாரோ தாலிக்கொடி காணாமல் போனது என்ற பொருளில் எஃப் ஐ ஆரில் பதிவு செய்திருக்க திருப்பூரில் இருந்து வரும் அழைப்புகளில் கோபம் தலை காட்டியது.. அதை உள்வாங்கிய நேரத்தில் தான் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. A. G. பாபு ஐபிஎஸ் சாரை நேரில் சந்தித்து முறையிடுவது என்று முடிவுக்கு வந்து நானே அதற்கான புகார் மனுவை தயாரித்து திருப்பூருக்கு அனுப்பி வைத்தேன்..

கமிஷனர் சாரை சிரமம் இல்லாமல் சந்திக்கும் வகையில் அனுமதியை பெற்று தருவதற்காக ஒருநாள் விடாமல் விசாரித்து கொண்டிருந்த ஜி. முருகனிடம் தகவல் தெரிவித்தேன். நண்பரின் உறவினர்கள் திருமுருகன் பூண்டி காவல் நிலையம் புறநகரில் உள்ளது என்று தவறான தகவலை கூறிவிட கோவை டிஐஜி முத்துசாமி சாரை முதலில் தொடர்பு கொள்ள வேண்டியதாகிவிட்ட்து..அதன் பிறகே ஜி. முருகனும் உடனே கமிஷனர் சாரிடம் பேசி அனுமதியை பெற்று தந்தார்..

மாலைமலர் மூத்த ஊடகவியலாளர் வி. ரவிக்குமார்…

அவரைப் போலவே மாலை மலருடன் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மூத்த ஊடகவியலாளர் வி. ரவிக்குமாரும் (சென்னை) உதவினார்.. இதையும் கடந்து கமிஷனர் சார் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இணை ஆணையராக பணியாற்றி இருந்ததால் சென்னை பெருநகர காவல்துறை முன்னாள் ஆணையர் திரு ஏ. கே. விஸ்வநாதன் ஐபிஎஸ் சார் மூலம் திருப்பூர் கமிஷனர் சாருக்கு மூத்த ஊடகவியலாளர் மூலம் தகவல் அனுப்பி வைத்தேன்..

இவ்வளவு தகவல்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் A. G. Babu சாரை சென்றடைந்து விட்டது என்பதை உறுதி செய்து கொண்ட நேரத்தில் திருப்பூர் நண்பர் மற்றும் உறவினர்கள், திருமுருகன் பூண்டி காவல் நிலைய ஆய்வாளருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்.. இரண்டொரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறார். காத்திருப்போம் என்று கூறி அமைதியாகி விட்டார்கள். ஆனால் சென்னையிலோ கொதிநிலை.. காலை மாலை என பாராமல் அடிக்கடி அழைத்து எஃப் ஐ ஆர் காப்பி அனுப்பி வையுங்கள். இன்ஸ்பெக்டர் பெயர் + கைபேசி விவரம் அனுப்புங்கள் என்று மிகுந்த அக்கறையோடு விசாரித்து கொண்டே இருந்தார் ஜி. முருகன்…

நண்பரின் துக்கத்தில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் ரத்தாகி, புதன்கிழமை செல்ல திட்டமிட்டு இருந்தேன்.. அதனை தினசரி அழைப்புகள் மூலம் அறிந்திருந்த ஜி. முருகன் செவ்வாய் இரவு அழைத்து திருப்பூர் கமிஷனர் சாரிடம் தாலி சென்டிமென்ட் வரை விவரமாக கூறி விட்டேன்.. சாரும் திருமுருகன் பூண்டி போலீசாரை விரட்டி கொண்டு இருக்கிறார் என்று கூறினார்..
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இல்லை என்ற போதும் திருப்பூருக்கு புதன்கிழமையன்று (15) பகல் 2 மணியளவில் சென்றேன்.. என்னுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வருவதற்காக வந்த நண்பருடன் வழக்கறிஞரும் இருந்தார்.. திக்கென்று இருந்தது.. பலமுனை பரிந்துரைகளோடு கமிஷனர் சாரை பார்க்கும் போது வழக்கறிஞர் உடன் இருந்தால் நன்றாக இருக்காதே என்று கவைப்பட்டேன்.. ஆய்வுக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததால் வரவேற்பறையில் காத்திருந்தோம். மாலை 3 மணிக்கு அனுமதி கிடைத்தது.. திரு. A. G. Babu சாரை சந்தித்து சென்னையில் இருந்து வந்திருக்கிறேன்.. ஜி. முருகனின் நண்பர் என்ற அறிமுகத்தோடு நான் அமைதியானேன்.. மனைவியை இழந்த துயரம், பரம்பரை தங்க தாலி திருட்டு, உள்ளூர் போலீஸ் அலட்சியம், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்+ பிரேத பரிசோதனை ஊழியரின் பொறுப்பற்ற பதில் என 45 நிமிடத்திற்கு மேல் நண்பர் விரிவாக கூறினார்.. அனைத்தையும் மிகுந்த பொறுமையோடு ஆழந்த அக்கறையோடு கேட்டு கொண்டிருந்தார் கமிஷனர். இடையிடையே காவல் உதவி ஆணையரை அழைத்து நண்பர் கூறியவற்றை குறிப்பிட்டு விசாரணை விவரத்தை கேட்டு பதிலளித்தார்.. தேநீர் கொடுத்து உபஙரித்தார்.

முழு விவரங்களையும் கேட்ட பிறகு மீண்டும் ஏ. சி. யை அழைத்து விபத்து நடந்த இடம் முதல் உடற்கூராய்வு நடந்த இடம் வரை மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார் கமிஷனர் A. G. Babu. சார். அதன் பிறகு நான், சென்னை காவல்துறையுடனான எனது தொடர்பை பற்றி கூறினேன்.. பொறுமையாக கேட்டு கொண்டார்.. காலத்தின் அருமை கருதியும் காத்திருக்கும் காவல் துறை அதிகாரிகளின் நிலைமையை உணர்ந்தும் கமிஷனர் மதிய உணவு எடுத்து கொள்ளாமல் இருக்கிறார் என்ற வரவேற்பு அறை காவலரின் அக்கறையான பதிலையும் கருத்தில் கொண்டு விடைபெற்ற நேரத்தில், நிறைவாக பேசிய கமிஷனர், விபத்து நடந்த நாள் அன்று தான் திருப்பூரில் இல்லை என்றும் சென்னையில் உள்ள காவல்துறை உயரதிகாரிகளிடம் இருந்தும் ஊடக நண்பர்களிடம் இருந்தும் தகவல்கள் வந்தவுடனேயே தனிக் கவனம் செலுத்தி காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்..

தாலி உள்ளிட்ட தங்க நகைகளை விரைவாக மீட்க முடியாமல் தாமதம் ஏற்படுவதற்கு, விபத்து நேரிட்ட பகுதியில் எங்கேயும் கண்காணிப்பு கேமிரா பதிவு கிடைக்காதது தான் காரணம் என்றும் கடமையுணர்வுடன்தான் காவல்துறை பணியாற்றி வருகிறது என்றவர்.. எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்க வரலாம் என்று கூறி தனது இரண்டு கைபேசி எண்களையும் கொடுத்தார்.. அவருடனான சந்திப்பு விவரிக்க முடியாத அளவிற்கான உணர்வை ஏற்படுத்திட அவரின் அனுமதி பெற்று கமிஷனர் சாருடன்புகைப்படம் எடுத்து கொண்டேன்..

திருப்பூர் கமிஷனருடனான சந்திப்பின் போது சுவாரஸ்யமான இரண்டு நிகழ்வுகளும் நடந்தன…..

*காவல்துறை ஆணையர் திரு A G Babu சாரை சந்திப்பதற்காக காத்திருந்த நேரத்தில் ஜோதிடர் ஷெல்லியை கைபேசியில் அழைத்து மனைவியை இழந்த நண்பருக்கு ஆறுதல் கூறிட உதவினேன்.. அப்போது ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரியும் தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியனின் கணவர் திரு. சந்திரசேகர் சார் திருப்பூர் கமிஷனரிடம் பரிந்துரை செய்த தகவலையும் தெரிவித்தார்…

*கமிஷனர் அலுவலக வரவேற்பாளர் இரண்டு பேர் மட்டும் செல்லுங்கள் என்றதால் கமிஷனருடனான சந்திப்பின் போது வழக்கறிஞர் மிஸ்ஸானார்.. எனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை தீர்த்து வைத்தார் என்பதற்காக கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் போது கமிஷனரின் வரவேற்பாளருக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்தேன்..

விபத்து நடந்த இடம்.. திருமுருகன் பூண்டி…

தொடர்ந்து நேற்று மாலையே விபத்து நடந்த இடத்தையும் பார்த்தேன்.. வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தால் விபத்து தவிர்க்க பட்டிருக்கும் என்று திருமுருகன் பூண்டி வாசிகள் தகவல் தெரிவித்தனர்..திருப்பூரில் இருந்து புறப்பட்ட போது நண்பர் நெகிழ்ந்து கமிஷனர் சாரை சந்தித்த பிறகு மனதில் இருந்த பாரத்தை எல்லாம் இறங்கி வைத்துவிட்ட மாதிரி இருக்கிறது என்கிறார்.. மறுமொழி கூற வார்த்தை இன்றி கண்கள் ஓரம் துளிர்த்த கண்ணீரோடு விடை பெற்றேன்..

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நண்பரின் தந்தை, ஈரோட்டில் குடியேறி தொழில் துவங்கி வளர்ச்சியை சுவைத்த நேரத்தில் காலமானார்.. அப்போது நண்பருக்கு வயது 12. அவரது தம்பிக்கு 10..தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.. தனக்கு ஏற்பட்ட வாழ்நாள் சோகம் போல அதே வயதிலான தனது இரண்டு குழந்தைகளுக்கும் தாய் இல்லையே என்று கலங்கிய நண்பரின் குரல் சென்னை திரும்பிய பிறகும் ஒலித்து கொண்டே இருக்கிறது…

தாலி திருட்டு என்ற குரலுக்காவா நான் கலங்கி நிற்கிறேன்.. இந்த துயர நிகழ்வோடு பின்னி பிணைந்த ஒரு சோகமும் உண்டு..

கூனி குறுகி நின்ற நாள்…
( நாளை)

20 ஆண்டுகளுக்கு முன்பு ஜி. முருகனுடன் பழக்கம் ஏற்பட்டது.. ராஜ் டிவி செய்தியாளராக பணியாற்றிய காலத்தில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் ஸ்டிரைக்கிங் போர்ஸ்ஸுக்கு IPS விஜயகுமார் நியமிக்கப்பட்டதாக அறிவித்தார். அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அவரின் பேட்டியை எடுத்து தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்.. இதேபோல தற்போதைய டிஜிபி திரு. சைலேந்திர பாபு ஐபிஎஸ் சார் அதே படைக்குநியமிக்கப்பட்டபோதும் முதல் நபராக அவரின் பேட்டியை எடுத்துவரும் அவரே.. நண்பரிடம் அன்று காணப்பட்ட அதே ஆர்வம் இன்றும் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தேன் …

One thought on “நல்ல உள்ளங்களை மீண்டும் ஒருமுறை அடையாளப்படுத்திய திருப்பூர் விபத்து…”
  1. விபத்தில் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Comments are closed.