Sat. Jul 2nd, 2022

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

முதல் அமைச்சரின் செயலாளர்களைப் பற்றி நேற்று முன்தினம் எழுதிய கட்டுரைக்கு ஆதியும் அந்தமும் தேடும் முயற்சியில் உளவுத்துறை உயரதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், தலைமைச் செயலாளரை திருப்திபடுத்ததான் நான் எழுதுவதாக எனக்கு மிக நெருக்கமான மூத்த ஊடகவியலாளர்களே பேசுவதை கேட்ட பிறகும்கூட  வருத்தம் கொள்ள முடியவில்லை.

ஆரோக்கியமான விமர்சனங்களை வரவேற்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினே ஆணித்தரமாக சொல்லிவிட்ட பிறகு, அவரது தலைமையிலான அரசில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகளைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எதற்கு தயக்கம் காட்ட வேண்டும்? என்பதுதான் எனது எண்ணம்.

ஊடகவியலாளருக்குரிய கடமையோடு விமர்சனம் செய்வதைப் போலவே, நேர்மையோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் சேவையில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைப் பற்றி பாராட்டியும் எழுதி வருகிறேன். அந்தவகையில்தான் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பற்றியும் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும், அவரை புகழ்வதால் தனிப்பட்ட முறையில் எந்தவொரு நன்மையும் அடைந்துவிட முடியாது என்று. இருப்பினும் இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிற ஐஏஎஸ் அதிகாரிகளில் நேர்மை, உழைப்பு, எளிமை உள்ளிட்ட நற்பண்புகளில் அவரைப் போல ஒன்றிரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அதன்காரணமாகவே வெ.இறையன்பு ஐஎஎஸ்ஸுக்கு எதிராக முன்வைக்கப்படும் சில விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து போகிறேன்.

வெ.இறையன்பு ஐஏஎஸ் உடனான தொடர்பை 2009 ஆம் ஆண்டிலேயே முறித்துக் கொண்டேன் என்பதை என்னுடன் நெருக்கமாக பழகி கொண்டிப்பவர்களே அறியமாட்டார்கள்.  ஏன் அவருக்குக் கூட தெரியாது.

1999 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் ஆட்சியராக அவர் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட தொடர்பு 2009 ஆண்டில் அவர் முதல் அமைச்சரின் செயலாளராக பணியாற்றிய காலம் வரை நீடித்தது.

மிகவும் நெருக்கமான தொடர்பை ஒரேநாளில் முறித்துக் கொண்டேன். அந்த நிலைமை ஏன் உருவானது? எந்த கருத்தியலுக்காக அன்றைக்கு நான் அவரிடம் இருந்து விலகினேனோ அது இன்றைக்கும் கூட பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கிறது.

2009 ஆம் ஆண்டில் சென்னை மந்தைவெளியில் நடிகர் எஸ்.வி.சேகர் இல்லம் அருகே சன் டிவி வாடகை கட்டடத்தில் இயங்கி கொண்டிருந்து. அதன் பணியாளராக பணியாறறிக் கொண்டிருந்த போதே எனது கைபேசியில் வால் பேப்பராக மாவீரர் புகைப்படமே இருந்தது.

ஏப்ரல் மாதம் துவக்கத்தில் இருந்தே இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உக்கிரம் அடைந்திருந்த நிலையில், 27 ஆம் தேதி காலையில் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி முன்னறிவிப்பு இன்றி மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அந்த போராட்டத்தை சன் டிவி தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியது. அப்போது அலுவலகத்தில் இருந்த நான் அந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

கலைஞரின் குடும்ப உறவுகள், மூத்த அமைச்சர்கள் என பலர் அங்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஐஏஎஸ் அதிகாரிகளில் முதல் நபராக  வெ.இறையன்பும் அங்கு வந்தார். (அவரைத் தவிர வேறு யாரும் வந்ததாக எனக்கு நினைவில்லை) அவரின் வருகையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அந்த நிமிடம் வரை அவரின் மீதான மரியாதை, என் இதயத்தில் இமயம் போல உயர்ந்திருந்த நிலையில், ஒருநொடியில் அப்படியே தகர்ந்துப் போனது.

அந்த இடத்திற்கு அவர் வந்த அந்த காட்சி இன்றும்கூட விழிகளில் வியாப்பித்து இருக்கிறது. கலைஞர் உண்ணாவிரதம் இருந்த இடத்தின் பின்பக்கம் இருந்த தூண் மீது கை வைத்தவாறே கலைஞரை நோக்கி முன்னேறி வந்தார்  வெ.இறையன்பு ஐஏஎஸ். அந்த தூணின் மீது கை வைத்தபடியே கலைஞரை உருக்கமாக பல விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு உள்ளார்ந்த உணர்வோடு விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவே இருந்த நான், வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் வருகையை ஜீரணிக்க முடியவில்லை. அந்த ஒரே காரணத்திற்காக,  அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையே அதன் பிறகு எழவில்லை. அப்படியே 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நிமிடம் வரை அவரை நேரில் சந்தித்தது இல்லை.

அன்றைக்கு விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்தேன் என்பதற்கும் சாட்சி இருக்கிறது. சன் டிவியில் அன்றைக்கு பகுத்தறிவு பாசறையில் வளர்ந்திருந்த மா.சா.மதிவாணன் (தற்போது ஒன் இண்டியா) குழுவில் ஒரு அங்கத்தினராக நான் இருந்தேன். ஈழப் போர் குறித்து நேரலையில் பேசுவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சன் டிவி அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் வந்த வன்னி அரசு எங்கள் இருவரையும் பார்த்தவுடன் புன்னகைத்தவாறே, தம்பிமார்கள் எல்லாம் சன் டிவியில் ஐக்கியமாகிவிட்டீர்களா என்று கூறினார்.

அந்தளவிற்கு விடுதலைப் புலிகளின் மீதான பற்று இருந்ததால், அரசியலாக்கப்பட்ட ஒரு உண்ணாவிரதத்தில் அரசு அதிகாரியான வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் வருகையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை.

கால ஓட்டத்தில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் மீண்டும் பணியாற்றும் சூழல் அவருக்கு உருவானது. தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஎஸ், காவல்துறை தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் நியமனம் செய்வது உறுதியான போது ஆளப் போறான் தமிழன் என்ற தலைப்பில் ஒரு செய்திக்கட்டுரை, அவரவர் பதவியேற்புக்கு முன்பே நல்லரசுவில் வெளியானது.

கடந்த ஓராண்டுக்கு மேலான தலைமைச் செயலாளர் பணியில் நான் அறிந்த வரை, கேள்விபட்டவரை வெ.இறையன்பு ஐஏஎஸ் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார் என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்தாகவே உள்ளது. நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 17 மணிநேரத்திற்கு மேலாக உழைக்கிறார் என்பதை தலைமைச் செயலாளர் அலுவலகத்தோடு அடிக்கடி தொடர்பில் இருக்கிற அரசு உயரதிகாரிகளின் வாக்குமூலங்கள் மூலம் உணர்ந்திருக்கிறேன்.

ஆட்சிப் பணியில் சின்ன சின்ன தவறுகள் நடைபெறுவது வழக்கமானதுதான். அதை பூதாகரமாக்கி விமர்சனம் செய்வது என்பது ஊடகத்தர்மமாக இருக்காது. இருந்தாலும்கூட வெ.இறையன்பு ஐஏஎஸ் விமர்ச்னத்திற்கு அப்பாற்பட்டவரா என்றால் இல்லை என்றுதான் அடித்து சொல்வேன்.

அண்மைக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வில் தலைமைச் செயலாளர் நடந்து கொண்ட விதத்தை யாருமே விமர்சனம் செய்த மாதிரி தெரியவில்லை. அவரைப் பற்றி எந்த சூழ்நிலையிலும் விமர்சனம் செய்ய தயங்க மாட்டேன் என்பதற்காகவே, இந்த நிகழ்வை இங்கு பதிவு செய்கிறேன்.  

கலைஞர் மு. கருணாநிதியின் முழு உருவச்சிலையை கடந்த மாதம் 28 ஆம் தேதி குடியரசுத் துணைத்தலைவர் திறந்து வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய அத்தனை பேருமே, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரின் பேச்சும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது. அதே விழாவில் அவர்களைப் போல நன்றியுரை ஆற்றிய அரசு அதிகாரியான தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பேசிய போது ஆங்கிலமும், தமிழும் கலந்து வெளிப்பட்ட  பேச்சில் ஒவ்வொரு வார்த்தைகளும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடாக இருந்தது.

கட்டுப்பாடு மிக்க ஒரு அரசு உயரதிகாரி இந்தளவுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால், வெ.இறையன்பு ஐஏஎஸ், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதை போல, கலைஞர் மீதான பக்தியை முழுமையாக வெளிப்படுத்தினார். அவரின் உணர்ச்சிமிகுந்த பேச்சை, குடியரசுத்துணைத்தலைவர், முதல்வர் ஆகியோர் உன்னிப்பாக கவனித்ததில் இருந்தே, வெ.இறையன்புவின் நன்றியுரையில் உயிர்ப்பு இருந்திருக்கிறது என்பதை உணரலாம். அந்தளவுக்கு முழு சந்திரமுகியாகவே மாறியிருந்தார்.

இதற்கு மேலான விமர்சனமும் இருக்கிறது. 2022 ம் ஆண்டு மே 7 ஆம் தேதி திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறிய நாளில் இருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் அண்டைமாவட்டங்களுக்கு ஆய்வு, திடீர் சோதனை என்ற பெயரில் தலைமைச் செயலாளர் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம், அரசு அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா முதல் அலை தொடங்கியதில் இருந்து இன்று வரை ஞாயிற்றுக்கிழமைகளில்கூட ஓய்வு எடுக்காத அளவுக்கு அரசுப் பணிகள் தொடர்ச்சியாக இருக்கிறது என்று கவலையுடன் கூறும் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளரின் ஆய்வுப் பயணங்களைப் பார்த்து மனம் வெறுத்துப் போய்வுள்ளனர்.

நிறைவாக, உள்துறையை டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எதிர்பார்க்கிறார் என்று கிடைத்த தகவலைப் போல, மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் கிடைத்தது. அந்த தகவலை எழுதி வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு ஆதரவாக வானத்திற்கும் பூமிக்கும் குதித்து இருக்க வேண்டும் நான். ஆனால், மௌனமாக கடந்து போனேன்.

வாசிப்பவர்களையே கொந்தளிக்க வைக்கும் தகவல் அது…

தலைமைச் செயலாளர் பதவியில் வெ.இறையன்பு ஐஏஎஸ் நீடிப்பதை விரும்பாத ஒரு குழு, அவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக்கிவிட்டு, தங்களுக்கு அடிபணிகிற ஒருவரை தலைமைச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்து முதல்வரின் ஒப்புதலை பெற்றுவிடலாம் என்று யோசித்திருக்கிறது.

இப்படி குரூர புத்தியோடு செயல்படுகிற குழுவை விரட்டி விரட்டி வெளுப்பதை தவிர வேறு பணி எதுவும் எனக்கு முக்கியமானதாக படவில்லை.

அச்சம் தவிர்…நெஞ்சம் நிமிர்…

One thought on “விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா, வெ.இறையன்பு ஐஏஎஸ்…”

Leave a Reply

Your email address will not be published.