Fri. Apr 26th, 2024

அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி இந்த கூட்டத்தில் எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்து கலந்து பேச, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்தக் கூட்டத்திற்கு வருகைத் தந்த ஒருங்கிணைப்பாளர்களை வரவேற்பதற்காக குவித்த மகளிர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று முழக்கமிட அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது தலைமையை ஏற்க வேண்டும் என முழக்கமிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், ஒற்றை தலைமைதான் அதிமுகவின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். பாஜக தலைவர் கே.அண்ணாமலை நாள்தோறும் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகளால்,, அக்கட்சிதான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுததி வருகிறது. எனவே, சட்டப்பேரவையிலும், மாநிலத்திலும் அதிக செல்வாக்கோடு இருக்கும் அதிமுக., பிரதான எதிர்க்கட்சியாக மாற வேண்டும் என்றால், இபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபோட வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால், அதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய இபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி..கே.சசிகலாவுக்கு அதிமுகவில் செல்வாக்கு இல்லை என்று தெரிந்திருந்த போதும், தேவையில்லாத கருத்துகளை கூறி அதிமுகவுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியவர் ஓ.பி.எஸ். கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வராக பதவியேற்ற ஓ.பி.எஸ், 2017 ஆம் ஆண்டு வி.கே.சசிகலாவை எதிர்த்துதான் தர்மயுத்தம் நடத்தினார். அவரின் பாதையில்தான் இன்றைக்கு அதிமுக சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், அதிமுக மிகுந்த வலிமையான கட்சியாக மாறி விடக் கூடாது என்ற எண்ணத்திலேயே வி.கே.சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார்.

அவருக்கு எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா கட்டிக்காப்பாற்றிய அதிமுக ஒற்றுமையுடன்,பலமுடன் இருப்பது பிடிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க தயங்கும் ஓபிஎஸ், வி.கே.சசிகலாவை அதிமுகவுக்குள் சேர்த்து அவரது தலைமையை திணிக்க பார்க்கிறார். இன்றைக்கு அதிமுகவில் உள் பெரும்பான்மையான நிர்வாகிகள், வி.கே.சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதை விரும்பவில்லை. எனவே, வி.கே.சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள ஒட்டுமொத்த தொண்டர்களின் பிரதிநிதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று வலியுறுத்தினர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என கட்சியின் அனைத்து வகையான நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும் என ஒருமித்த குரலில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தனக்கு தலைமை பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் வி.கே.சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் கோரிக்கையை முன்வைத்து அதிமுகவிற்குள் பிளவை ஏற்படுத்த ஓபிஎஸ் சதித்திட்டம் தீட்டி வருகிறார். பொதுக்குழுவில் தனது ஆதரவாளர்கள் மூலம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி அதிமுகவுக்குள் பிளவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள ஓபிஎஸ்ஸின் சதிச் செயலை நிச்சயம் முறியடிப்போம் என உறுதிபட கூறுகிறார்கள் இபிஎஸ் ஆதரவாளர்கள்.

பொதுக்குழுவில் எந்தவிதமான சச்சரவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மொத்த பொதுக்குழு உறுப்பினர்களான 2645 பேருக்கும் அடையாள அட்டை வழங்குவது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் யாருக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற மாவட்டச் செயலாளர்களின் கோரிக்கையையும் கட்சி தலைமை ஏற்றுக் கொண்டது.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்ற குறிக்கோளோடு அக்கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் இயங்கி வரும் நிலையில், வரும் 23 ஆம் தேதி நடைபெறும பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று ஓபிஎஸ் செயல்பட்டால், அதிமுகவில் அவரின் அரசியல் பயணமும் மரியாதைக்குரியதாக இருக்கும். அதை விடுத்து குறுக்கு புத்தியுடன் செயல்பட்டால் ஓபிஎஸ்ஸின் அரசியல் பயணம் அஸ்தமனமாகிவிடும் என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் எச்சரிக்கின்றனர்.