Fri. Nov 22nd, 2024

தி.மு.க. ஆட்சியில் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், அ.தி.மு.க. ஆட்சியில் டல் சிட்டியாக மாறிவிட்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளளார்.

அதிமுக ஆட்சியில் ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.

நான்காம் கட்டமாக மேற்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் நாளான இன்று திருப்பூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்,

அ.தி.மு.க. ஆட்சிக்காலமான 10 ஆண்டுகளில் சொல்லப்பட்ட எந்த திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. பொய் சொல்வதில் முதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். ஆட்சி முடியப்போகும் நேரத்தில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் மக்களை ஏமாற்ற இப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர், இன்றைக்கு அதிமுக ஆட்சியில் டல் சிட்டியாக மாறிவிட்டது. அத்திக்கடவு – அவினாசி திட்டம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிய திட்டம் இல்லை. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி. ஊழல் திட்டத்திற்கு மாற்று பெயராக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.