Sat. May 18th, 2024

முன்னாள் பிரதமர் ராஜிக் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை உச்சநீதிமன்ம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

ராஜிக் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, தமிழக ஆளுநர் தரப்பிலும், ஒன்றிய அரசின் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக வாதம் புரிந்தனர்.

கடந்த பல நாட்களாக இடைவெளிவிட்டு நடைபெற்ற சூடான விவாதத்தின் போது, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம், அமைச்சரவை கூடி விடுதலை தொடர்பாக நிநைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியது பொறுப்பற்ற செயல் என்றும், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் என்று காட்டமாக கூறியது.

அதன் பிறகும் கூட, ஒன்றிய அரசு, பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கு தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உச்சநீதிமன்றம் கூடியதும், பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேரறிவாளனின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் கால தாமதப்படுத்தியது தவறு –

கருணை மனுக்கள், சட்டப்பேரவை தீர்மானத்தின் மீதான முடிவுகளை ஆளுநர்கள் எடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், ஆளுநர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில் கூறியுள்ளது.

பேரறிவாளன்அற்புதம்மாள் மகிழ்ச்சி…

எங்களுடைய சட்டப்போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை தங்கை செங்கொடி மரணம்தான்.

உலகத் தமிழர்கள் அனைவரும் என்னை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தனர்.

எதிர்காலம் குறித்து உறவினர்கள், நண்பர்களுடன் ஆலோசித்து முடிவு என்று தீர்ப்பு குறித்து பேரறிவாளன் கருத்து தெரிவித்துள்ளார்.

அற்புதம்மாள்

பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியுள்ளோம்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.

வரவேற்பு – கொண்டாட்டம்..

அதிமுக வரவேற்பு…

பேரறிவாளனின் விடுதலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தளராத சட்டப் போராட்டத்தினால் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்..

எந்த தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்-

தொல் திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…

ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி.

நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள்.

மருத்துவர் ராமதாஸ், நிறுவனர், பாமக…

பேரறிவாளன் விடுதலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரின் விடுதலைக்கான ஆணையை உச்ச நீதிமன்றத்திலிருந்து தமிழக அரசே பெற முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

களை கட்டும் சமூக ஊடகங்கள்…

பேரறிவாளன் விடுதலை உத்தரவையடுத்து, சமூக ஊடகங்களில் தமிழ் தேசிய உணர்வாளர்கள், மனித உரிமை கழக நிர்வாகிகள், ஜனநாயகவாதிகள், மிகுந்த எழுச்சியுடன் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

.