Mon. May 6th, 2024

ரூ.14,400 கோடியில் நிறைவேற்றப்படவுள்ள காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறுகாவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை, விராலிமலை அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி இன்று (பிப்.21) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் பாசன வசதிக்காவும், பொதுமக்களின் குடிநீர் வசதிக்காவும் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை ரூ.14,400 கோடி செலவில் நிறைவேற்ற தமிழக அரசு கொளகை அளவில் அறிவிப்பு வெளியிட்டது.

அந்த திட்டத்தை செயலாக்கும் விதமாக, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் தொடக்க விழா, புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் இன்று காலை நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த முதல்வரையும், துணை முதல்வரையும் டிராக்டரில் அமர வைத்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டிராக்ட்ரை ஓட்டிக் கொண்டு விழா இடத்திற்கு அழைத்து வந்தார்.

விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விவரித்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு செயலர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள், நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு, விரைவாக பயன்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.

அதன்படி, இந்தக் கால்வாயில் இருந்து விநாடிக்கு 6,360 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

3 கட்டப் பணிகள்…

3 கட்டமாக இந்த திட்டப் பணி நிறைவேற்றப்படவுள்ளது.

முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை ரூ.6,941 கோடியில் 118 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெறும்.

இதற்காக நிலம் கையகப்படுத்தி பணிகள் தொடங்க ரூ.700 கோடியை தமிழக அரசு ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது.

கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் நூற்றாண்டு கனவ இது.

இந்த திட்டம் முழுமைப் பெற்றால், 6 மாவட்டங்களில் உள்ள 69 ஆயிரத்து 962 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுவதுடன், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் மேம்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என புவியியல் வல்லுநர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். நள்ளிரவில்கூட விழா நடைபெறும் இடத்திற்குச் சென்று விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.