பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநரே முடிவெடுத்து இருக்கலாம் என்றும் இந்த வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தின் நேரத்தை ஒன்றிய அரசை வீணடித்து வருவதாக உச்சநீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று நடைபெற்றது.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது, 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த தீர்மானத்தின் மீது உடனடியாக முடிவெடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. மேலும், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் மே 10 ஆம் தேதிக்கு மேல் இந்த வழக்கில் உச்சநீதிமன்றமே உத்தரவிடும் என்றும் அறிவுறுத்தி வழக்கை மே 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு மீதான விசாரணை மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஒன்றிய அரசுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
ஆளுநருக்காக ஒன்றிய அரசு வாதிடுவது ஏன்? பேரறிவாளன் விடுதலை தீர்மானத்தை எந்த விதியின் கீழ் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார் ? எந்த விதியின் கீழ் மாநில அரசுக்காக நீங்கள் (மத்திய அரசு வழக்கறிஞர்) வாதிடுகிறீர்கள்?
ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு இல்லை.
ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.
ஒன்றிய அரசு சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே எம் நட்ராஜ், மாநில அரசின் முடிவு அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரக இருக்கும் போது ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் முறையிடலாம். பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, ஒன்றிய அரசுக்கே உள்ளது; இவ்விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார். சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரித்துள்ளதால் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை எடுத்து, அதுதொடர்பான தகவலை மத்திய அரசிடம் பகிர்ந்துகொண்டது.அதற்குப் பிறகுதான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி தலையிட்டது, அதன்பின்னரே அனைத்து குழப்பங்கள் தொடங்கின உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், மத்திய அரசின் வாதமும் வேறு வேறாக உள்ளது, நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவாக பதிலளிக்கவில்லை என கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் கே எம் நட்ராஜ், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கான கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், அப்படியானால், 70 ஆண்டுகளாக ஆளுநர்கள் அளித்த தண்டனை குறைப்பு உள்ளிட்டவை அரசியலமைப்புக்கு எதிரானதா?
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலை வழக்குகளின் தண்டனை மீதும் கருணை காட்டும் முடிவை எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே சென்று விட்டால், ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161 என்ற பிரிவு எதற்கு, அது அரசியலமைப்பில் தேவையில்லயா? என்றும் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பும்போது, அதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஆளுநர் செலுத்த முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற வாதத்தை முன்வைத்தார்.
மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர், கட்டுப்பட்டவர் தானே? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், IPCயின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவகாரத்தில், சட்டவிதிகளை மீறி அமைச்சரவையின் முடிவு இருந்தால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு வழக்கறிஞர் கே எம் நட்ராஜ் தெரிவித்தார்.
இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி மத்திய மற்றும் மாநில அரசு இரண்டிற்கும் இதில் அதிகாரம் உண்டு-
தண்டனை மீது கருணை காட்டும் முடிவை எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே சென்றுவிட்டால் ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161 என்ற பிரிவு எதற்கு? அது அரசியலமைப்பில் தேவையில்லயா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
அமைச்சரவையின் முடிவு சட்டவிதிகளை மீறி இருக்கும் பட்சத்தில் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு வழக்கறிஞர் கே எம் நட்ராஜ் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநரே இவ்விவகரத்தில் கையெழுத்திட்டு முடிவு எடுத்திருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளோம் எனக்கூறி குடியரசுத் தலைவரையும் இவ்வழக்கின் உள்ளே இழுத்து விட்டார். பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்ததோடு, இதில் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் சாசன பிழை. இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது. சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே, மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது என்று தெரிவித்தார்.
பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் ஆளுநருக்கு உள்ள அதிகாரிகள் குறித்து விரிவான வாதத்தை முன்வைத்தார். அதனை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
பேரறிவாளனை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்ட நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.