மடாதிபதிகள் நவீன சாதனங்களை பயன்படுத்துவது ஏன்? என்று
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்திற்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்ட இந்த காலகட்டத்தில், இது எங்களது பாரம்பரியமான பழக்கம், அதை ஒருபோதும் கைவிட முடியாது என மடாதிபதி ஒருவர் அறிக்கை வெளியிட்டிருப்பது காலத்திற்கு ஒவ்வாததாகும்.
‘பல்லக்கில் பவனி வருவது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும் கைவிட மாட்டோம்’ எனக் கூறும் மடாதிபதிகள் தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தியிருப்பது ஏன்? குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது ஏன்? தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற மிக நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருளுரை ஆற்றும்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது ஏன்? இவற்றையெல்லாம் பயன்படுத்தும் போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?
மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் தாங்கள் வாழும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை கைவிட்டு உலகத்தோடு ஒட்டிச் செல்லவேண்டும். இல்லையேல் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு பழ.நெடுமாறன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.