Mon. Apr 29th, 2024

சென்னை சென்டரலில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து சிகிச்சைச் பெற்றுச் செல்லும் இந்த மருத்துவமனை வளாகத்தில் முகப்பு பகுதியில் 3 பிரம்மாண்டமான கட்டடங்கள் உள்ளன. அதன் பின்பக்கம் உள்ள பழைய கட்டடத்தின் கீழ்தளத்தின் ஒருபகுதியில் உள்ள கிடங்கில் மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்கிலிருந்து இன்று காலை 10,30 மணியளவில் திடீரென்று கரும்புகை வெளியானது.

இதுபற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவர்கள், பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து அதே கட்டடத்தின் அருகில் உள்ள நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 நோயாளிகளை பத்திரமாக மீட்டு அதே பகுதியில் உள்ள மற்ற சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அதேநேரத்தில் புகை வந்த தளத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நீரழிவால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட நோயாளிகள் ஏணிகள் மூலம் இறக்கி வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே, நிகழ்வு இடத்திற்கு 8 தீயணைப்பபு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், கிடங்கு பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைந்து முழுமையாக கட்டுப்படுத்தினர். அப்போது கிடங்கில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.
மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், தொடர்ந்து நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தனர். கிடங்கில் இருந்து பல மணிநேரம் தொடர்ந்து கரும்புகை வெளியே வந்ததால், அந்த பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

ஊடகவியாளர்களின் மனிதநேய செயல்….

தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்கவும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கவும் நிகழ்விடத்திற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள், நோயாளிகள் அனைவரையும் முதல் தளத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கி கொண்டு வருவதற்கு மருத்துவமனை பணியாளர்கள் சிரமமப்பட்டபோது, மனிதநேயத்துடன் தங்கள் ஊடக கடமையை தள்ளிவைத்துவிட்டு, நோயாளிகளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து ஆறுதல் கூறியதைப் பார்த்து அங்கிருந்து பொதுமக்கள் ஊடகவியலாளர்களை மனதார பாராட்டினார்கள்.