Mon. Apr 29th, 2024

மதுபான விற்பனை மூலம் கடந்த ஆண்டு 36,013 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றும் திமுக ஆட்சி அமைந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது அதிமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சியின் போது செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளில் 45 கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 5,350 டாஸ்மாக் கடைகள் மட்டுமே உள்ளது. திமுக ஆட்சியில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று எந்தவொரு வாக்குறுதியும் வழங்கப்படவில்லை. மதுபான விற்பனை மூலம் கடந்த ஆண்டு 36 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தில் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

முதல்வரிடம் வாழ்த்து….

முன்னதாக, மானியக் கோரிக்கை தாக்கலையொட்டி, தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின்துறை செயலாளர், வாரியத் தலைவர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.