Tue. May 14th, 2024

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமைக்கும் பணிக்காக தமிழ்நாடு முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் இன்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

 ஓசூர் அருகே இயற்கை கொஞ்சம் பகுதியில் காவேரி ஆறு பாய்ந்தோடும் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதுதொடர்பாக தமிழக வனத்துறை, பல ஆய்வுகளை மேற்கொண்டு வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. 
இதனைத்தொடர்ந்து, சுமார் 478 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப்பகுதி யானைகள் வாழ்வதற்கான முக்கிய வாழ்விடமாக விளங்குவதுடன், 35 வகையான பாலூட்டிகளும், 238 வகையான பறவைகளும் இந்த பகுதிகளில் தங்கியிருந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கு ஏற்ற இடமாகவும் இருக்கும். 

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பறவைகள் தங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்காக முதற்கட்டமாக ரூ.15 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. 
ஓசூர் அருகே இயற்கை சூழலில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள வன விலங்குகள் சரணாலயத்தின் மூலம் அந்த பகுதி பிரபலமான சுற்றுலாதலமாக மாறுவதுடன், இயற்கை ஆர்வலர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இடமாக இருப்பதுடன், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படுவதற்கான சூழலையும் உருவாக்கி தந்துள்ள தமிழக அரசுக்கு ஓசூர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  

வனத்துறை மானிய கோரிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம்:

சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.

அடையாறு, கூவம் ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் கரைகளில் பசுமைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை, ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்படும்.

வனப்பகுதிகளில் உள்ள அந்நிய களைத்தாவர இனங்கள் அகற்றப்படும்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சோலைக்காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

கிராமங்கள்தோறும் மரகத பூஞ்சலைகள் ஏற்படுத்தப்படும்.

வனத்துறை கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.32 கோடியில் 258 மின்சார இருசக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

திருப்பூர் நஞ்சராயன்குளம் புதிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்படும்.

வனத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த சந்திப்பின் போது வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹும் உடன் இருந்தார்.