கோடநாடு வழக்கு தொடர்பாக விகே சசிகலாவிடம் கோவை காவல்துறையினரின் மேற்கொண்டு வந்த விசாரணை மாலையில் நிறைவு அடைந்தது. இரண்டாவது நாளாக நாளையும் விகே சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குத் தொடர்பாக மறுவிசாரணையை கோவை மாவட்ட போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ள கோவை காவல்துறையினர், இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான விகே சசிகலாவிடமும் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது.
இதனையடுத்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி கோவையில் இருந்து சென்னை வந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் இன்று காலை தியாகராயநகரில் உள்ள சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகளுக்கு சொந்தமான வீட்டிற்கு சென்றர். அங்கு தங்கியிருக்கும் விகே சசிகலாவிடம் கோட நாடு பங்களாவில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை குறித்தும், கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
உணவு இடைவேளைக்காக விசாரணையை சிறிது நேரம் ஒத்தி வைத்த போலீசார், பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். காலையில் துவங்கிய விசாரணை மாலையில் நிறைவடைந்ததை அடுத்து போலீஸ் ஐஜி சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாலை 5 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். மொத்தமாக கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் ஓட்டுநர் கனகராஜ் போயஸில் பணியாற்றினாரா?ஜெயலலிதா, உங்கள் அறையில் இருந்த ஆவணங்கள் என்ன? கோடநாடு பங்களா சாவி யாரிடம் இருக்கும்? பங்களா பொறுப்பு யாரிடம் இருந்தது? கொலை, கொள்ளை நிகழ்விற்கு பிறகு கோடநாடு பங்களாவுக்கு நேரில் சென்று பார்த்திர்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு விகே சசிகலா தெரிவித்த பதில்களை, வீடியோ ஆதாரமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது நாளாக நாளையும் விகே சசிகலாவிடம் கோவை மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.