Sun. Nov 24th, 2024

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்ட ஆளுநர் என். ரவி, இன்று மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறைக்கு காரி வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கருப்பு கொடியோடு திரண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காததை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பிரிவினர், ஆளுநர் வாகன அணிவகுப்பில் கலந்துகொண்ட கார் மீது கருப்புக் கொடிகளை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

காவல்துறை மீது குற்றச்சாட்டு

ஆளுநர் வருகையையொட்டி முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்யவில்லை என்று பாஜக தலைவர் கே.அண்ணாமலை, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.

ஏடிஜிபி விளக்கம்.

ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டினை மறுத்து சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை வீசினர். ஆளுநரின் கான்வாய் சென்ற பின்பு காவல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன.

பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி ஆர்பாட்டக்காரர்களை கைது செய்தனர்;

அவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

இவ்வாறு காவல்துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

கே.அண்ணாமலை கடிதம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

அரசியலமைப்புக்கு எதிரான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆளுநரின் செயல் அல்ல.

ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள்,அதை தடுக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுநருக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்புக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை என்று கே.அண்ணாமலை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதினம் நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு..

தனக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் ஒருபுறம் நடக்க, அதை பற்றி கவலைப்படாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனம் மடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவின் விரிவான மறுமலர்ச்சிக்கும்,ஆன்மீக ஊற்றுக்கண்ணின் மையமாக தமிழகம் திகழ்கிறது என்றார். தொடர்ந்து, ஞான ரத யாத்திரையையும் கொடியசைத்து ஆளுநர் துவக்கி வைத்தார்.