சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் நடைபெற்ற 84-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கிய நிலையில், இந்த விழாவில் பங்கேற்காமல் தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமல், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இருமுறை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆளுநரின் எதோச்சதிகார போக்கை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இதேபோல, பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்களையும் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மௌனம் காத்து வருவதால், ஆளும்கட்சியான திமுகவும் ஆளுநர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.
மேலும், எம்ஜிஆர் மருத்துவக் பல்கலைக் கழகத்திற்கு தேர்வுக்குழு பரிந்துரை கல்வியாளரை துணைவேந்தரை நியமிக்காமல், பணி ஓய்வு பெற்றவருக்கே மேலும் பணி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் உத்தரவிட்டதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் செயல்பாடுகள் மீது திமுக அரசு அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், இன்று காலை சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருடன் விரோதப் போக்கு இல்லை என்று அறிவித்த போதும், இருதரப்புக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்பது என்று சிதம்பரத்தில் நடந்த விழாவில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுருடன் உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றாமல் புறக்கணித்ததால், ஆளுநர் மீதான கோபம் திமுகவுக்கு தணியவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.
இருப்பினும், அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி, இன்று மாலை 4 – 20 மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.