தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் கெயில் நிறுவனம் மேற்க்கொள்ளும் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிராக விவசாயிகள் 2 தினங்களாக போராடி வருகிறார்கள். நேற்று 12.03.2022ல் கெயில் நிறுவனம் ஊழியர்கள் குழாய் பதிக்க நிலம் அளவீடு செய்ய சென்றபோது அப்பகுதி விவசாயிகள் அதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொள்வதற்கு முயற்சி செய்தனர்.காவல்துறை அதனை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இன்று (13.042022) மாலை 3 மணிக்கு சமாதான கூட்டம் நடத்தி விவசாயிகள் கருத்துக் கேட்டு முடிவெடுக்க அறிவுருத்தி உள்ளார்.
ஆனால் கெயில் நிறுவன அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் இன்று (13.03.2022) மீண்டும் அப்பகுதியில் உள்ள கரியப்பனஅள்ளி கிராமத்திற்கு சென்று நிலம் அளவிடும் பணியை மேற்கொள்ள முயன்ற போது அப்பகுதி விவசாயிகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முயற்சி எடுத்துள்ளனர்.
அக்கிராமத்தை சேர்ந்த கணேசன் வயது 43 என்ற விவசாயிக்கு வீடு ஆழ்குழாய்கிணறு உள்ளடக்கிய 1 ஏக்கர் விளைநிலம் உள்ளது. அது முழுமையும் குழாய் பதிக்க பயன்படுத்த முயற்சிப்பதை ஏற்க மறுத்து நேற்றும், இன்றும் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றிருந்த நிலையில், அவரது விளை நிலத்திலேயே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் உத்திரவையும் மீறி குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டதின் விளைவு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.எனவே கணேசனின் தற்க்கொலைக்கு கெயில் நிறுவனம் முழு பொருப்பேற்க வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குபதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும்.கணேசன் குடும்பத்திற்குகெயில் நிறுவனம் ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்கி பாதுகாக்க வேண்டும்.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு சாலை வழியாகத்தான் குழாய் பதிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிக்கு தடை விதிப்பதுடன், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து விவசாயிகளிடம் நேரில் கருத்து கேட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று தான் அனுமதி வழங்க வேண்டுமே தவிர,ஒப்புதலின்றி குழாய் பதிப்பதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பிஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.