Sun. Nov 24th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்..

மணிக்கணக்காக அலைந்து திரிந்தாலும் சிறப்பான புலனாய்வுச் செய்தியை வாசகர்களின் பார்வைக்கு எளிதாக படைத்து விட முடியாது. ஆனால், இந்த செய்திக்கான தலைப்புக்கு உரிய சிறு பொறி கிடைத்தவுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஒரு சுற்று வலம் வந்தோம். வழக்கமாக புன்சிரிப்போடு நட்பு பாராட்டும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் சிலர், இருண்ட முகத்தோடு கடந்து போனார்கள். பேயறைந்த மாதிரி நடந்துக் கொண்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்களில் நல்லரசுக்கு அறிமுகமான ஒரு அலுவலரை கெஞ்சி கூத்தாடி பேச வைத்தேன்.  

நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்தார் அவர். தலைமைச் செயலாளரின் விஸ்வரூபம் கண் முன்னே விரிந்து, வியர்த்துக் கொட்டியது.

தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5 ஆம் தேதி)  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஆய்வுக் கூட்டத்தை கூட்டியுள்ளார் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், இயக்குனர் ஜெயசீலன் ஐஏஎஸ், கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் என பலர் கலந்து கொண்ட கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள மானிய கோரிக்கை அம்சங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார் தலைமைச் செயலாளர். அப்போது துறை சார்பாக முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை கேட்டு, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் தலைமைச் செயலாளர்.

அவரின் இயல்பான குணத்தையும் மீறி அவரிடம் இருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அக்னி நட்சத்திரம் போல எங்களைச் சுட்டெரித்தது. துவக்கம் முதல் கூட்டம் நிறைவு பெறும் வரை தலைமைச் செயலாளர் கோபத்துடன்தான் பேசினார்.

“செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மானிய கோரிக்கைக்காக தயாரிக்கப்பட்டிருந்த ஒன்றிரண்டு கோரிக்கைகளைத் தவிர, 20க்கும் மேற்பட்ட அம்சங்கள், அரசு நிதியை விரையமாக்கும் வகையில்தான் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன” என்று கர்ஜித்த தலைமைச் செயலாளரைப் பார்த்து ஒட்டுமொத்த கூட்டத்தின் சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விட்டது. தொடர்ந்து தலைமைச் செயலாளரிடம் இருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் எச்சரிக்கை மணிதான்..

“அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனம் வாங்க நிதி ஒதுக்கீடு, துறை அலுவலர்களுக்கான புதிய கட்டடங்கள் என பொதுமக்களுக்கு பயனளிக்காத திட்டங்கள் தான் மானியக் கோரிக்கையில் இடம் பெற்று இருக்கின்றன. மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய ஒரு திட்டத்தைக் கூட உங்களால் ( செய்தித்துறை அலுவலர்கள்) சிந்திக்க முடியவில்லையா?

கடந்த 11 மாத காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய சிந்தனையோடு ஒரு திட்டத்தையாவது செய்தி மக்கள் தொடர்புத்துறையால் செயல்படுத்த முடிந்ததா? அரசு ஊழியர்களாக நாம் பெறும் ஊதியம், மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் பெறுகிறோம் என்ற நினைப்பு இருக்கிறதா? அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டிய துறைதான், செய்தி மக்கள் தொடர்புத்துறை. கடந்த 11 மாத காலம் இந்த துறை மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் நன்மையளிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறதா?

செய்தி மக்கள் தொடர்புத்துறை என்பதுதான் இந்த துறையின் பெயர். ஆனால், இந்த துறையில் பணியாற்றக் கூடிய கீழ்நிலை அலுவலர் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் வரை, மக்களோடு நெருங்கி பழகி இருக்கிறீர்களா? மாவட்டங்களில் பணியாற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள், முதல்வரின் சாதனைகள், தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று இருக்கிறார்களா? மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்..

மாவட்டங்களில் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்யும் நேரத்தில்  அவர்களோடு சுற்றுகிறார்கள் பிஆர்ஓக்கள். ஆளும்கட்சி பிரமுகர்களோடு வலம் வருகிறார்கள். இதைத் தவிர்த்து தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்களா? மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது, அரசு அறிவிக்கும் திட்டங்களை மக்களிடம் பிரபலமாக்குவது என எந்தவொரு பணியையும் மனத்திருப்தியோடு மாவட்டங்களில் பணியாற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (பிஆர்ஓ) செய்வதில்லை என்ற புகார்கள் ஏராளமாக வந்துள்ளன.

கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை திமுக ஆதரவு அதிகாரிகள், அதிமுக ஆதரவு அதிகாரிகள் என்று குழுவாக பிரிந்து நின்று கொண்டு சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்.

சராசரியாக ஒவ்வொரு அதிகாரியும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறீர்கள். அவரவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ப, சமூக ஊடகங்களான டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் தனித்தனியாக கணக்கு வைத்து, முதல்வரின் சாதனைகளை, அரசின் திட்டங்களை பதிவு செய்து மக்கள் பார்வைக்கு கொண்டு சென்று இருக்கிறீர்களா? இன்றைக்கு சமூக ஊடகங்களை பள்ளி மாணவர்கள் கூட எளிதாக கையாள்கிறார்கள். ஆனால், அரசு சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மாவட்டங்களில் பிஆர்ஓக்களே ஒழுங்காக பணியாற்றுவதில்லை. இப்படிபட்ட நிலையில் அவர்களை கண்காணிக்க, மண்டல இணை இயக்குனர் எனும் பெயரில் புதிதாக பதவியை உருவாக்கி, ஆறு ஏழு மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு அதிகாரியை நியமித்து இருக்கிறீர்கள். ஆனால், ஒரு நன்மையும் இதனால் அரசாங்கத்திற்கு இல்லை. புதிய பதவிகளுக்கு அலுவலக கட்டடம், புதிய வாகனங்கள், அலுவலக பொருட்கள் என தேவையற்ற செலவுகளைதான் அரசாங்கத்திற்கு வைக்கிறீர்கள்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.. புதிய சிந்தனை, புதிய செயல்திட்டம், சமூக ஊடகம் வளர்ந்து வரும் வேகத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை கையாளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சிந்தனையில்லாமல், வழக்கம் போல சோம்பேறித்தனத்துடன் நடந்து கொண்டால், செய்தி மக்கள் தொடர்புத்துறையை கலைப்பது குறித்தோ, வேறு துறையுடன் இணைப்பது குறித்தோ முடிவு எடுக்க வேண்டியிருக்கும்.

 உரிய காலத்திற்கு முன்பாக பதவி உயர்வு கேட்பது, புதிய பணியாளர்களை நியமிப்பது, பணி நீட்டிப்பு கேட்பது போன்ற எந்தவொரு செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன். துறையில் எனக்கு தெரியாமல் ஏதாவது செய்துவிட்டு என்னை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தால், என்ன நடவடிக்கை எடுப்பேன் என்பதை சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். செயலில்தான் காட்டுவேன்”

இப்படி ஒரு மணிநேரத்திற்கு மேலாக நெற்றிக்கண்ணை திறந்து ஆவேசமாக பேசிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்களை முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறோம்.

பனிமலை எரிமலையாக மாறி வெடித்தால் எப்படி இருக்கும்..சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால் பொறுமையின், கனிவின் சிகரமான தலைமைச் செயலாளர் உதடுகள் துடிதுடிக்க பேசியதைக் கேட்டு, அமைச்சரால் கூட வாய் திறந்து ஒரு வார்த்தைக்கூட சமாதானம் பேச முடியவில்லை. தலைமைச் செயலாளர் அறையில் இருந்து வெளியே வந்த பிறகு ஒரு அதிகாரி கூட மற்றொரு அதிகாரியின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்காமல், அவரவர் இருக்கைக்கு திரும்பி விட்டோம்.

தலைமைச் செயலாளர் சாட்டையை சுழற்றிய அந்த நிமிடத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடம்பே நடுங்குகிறது” என்று கூறியவாறே மௌனமாக நடந்துச் சென்றார் அந்த செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி.

ஆற்றுப்படுத்துவதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை நமக்கு..

3 thoughts on “வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் இன்னொரு முகம்… மூச்சடைந்து கிடக்கும் செய்தித்துறை….”
  1. தாரை இளமதி சார், உங்கள் கட்டுரையைத் தான் இறையன்பு அவர்கள் படித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

  2. ????????????????????????
    நேர்மை/உண்மை/வாய்மை..இந்த 3 மனச்சாட்சி கடவுள்கள்..குடி கொண்டுள்ள தலைமைச் செயலாளர்..இந்த அரசாங்கத்திற்கு ஒரு வரம்/யோகம்..!

    ஊழல் பெருச்சாளி ஒழிய..இப்படி ஒரு கண்டிப்பு/எச்சரிக்கை மணி தேவை தான்..!

    எல்லா அதிகாரிகளும்..இப்படி இருந்தால்..தமிழ் நாட்டிற்கு..ஜ*பொற்காலம் தான்..!

Comments are closed.