Sun. May 19th, 2024

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற புலம்பல் பொதுமக்களைவிட அரசு பணியாளர்களிடம்தான் அதிகமாக கேட்கிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகழைப் பரப்பும் செய்தித்துறையில் கீழ் நிலையில் உள்ள பணியாளர்களின் கதறல்களை காது கொடுத்து கூட கேட்க முடியவில்லை.

சென்னையில் – தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்தால் நிம்மதி பெருமூச்சுவிடும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பிஆர்ஓ என்று சொல்லப்படும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள், தங்கள் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் என்ற தகவல் வந்தாலே வாய் விட்டே கதறுகிறார்கள்..

அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், வளர்ச்சித் திட்டங்கள் துவக்கி வைத்தல் என பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.. இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தன் உடல் நலன் பற்றி துளியும் கவலைப்படாமலும் சரியான ஓய்வு எடுத்துக் கொள்ளாமலும் அடிக்கடி மாவட்டங்களில் சுற்றுப்பயனங்கள் மேற்கொண்டு வருகிறார்.

முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்த செய்தி முழுமையாக, விரைவாக பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலம் சென்றடைய வேண்டும் என்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் செய்தித்துறை உயரதிகாரிகள் குழுவாக செல்வது வழக்கமான ஒன்றாகும். முந்தைய ஆட்சிக்காலத்திலும் இதுபோன்று செய்தித்துறை உயரதிகாரிகள் குழுவாக சென்றதுண்டு. ஆனால், அப்போது எல்லாம், அந்தந்த மாவட்டத்தைக் கடந்து வெளியே கேட்காத புலம்பல் சத்தம், இப்போது தலைமைச் செயலகம் வரை புகாராக எட்டியிருப்பதுதான் அதிர்ச்சிக்குரிய அம்சமாகும்.

இதன் பின்னணி இதுதான்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிமாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் முனைவர் வி.பி.ஜெயசீலன் ஐஏஎஸ் தலைமையில் கூடுதல் இயக்குநர், புகைப்படப் கலைஞர், வீடியோ கிராபர், வீடியோ கிராபரின் உதவியாளர், முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அலுவலர் என பெருங் குழு எப்போதுமே உடன் செல்கிறது.
முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் இவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்தந்த மாவட்டங்களில் நான்கு கார்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இயக்குனருக்கு அரசு வாகனம் பெரும்பாலும் ஏற்பாடு செய்யப்பட்டுவிடும் சூழலில், மற்றவர்களுக்கு பல நேரங்களில் வாடகைக்குதான் கார்கள் எடுக்கப்படுகின்றன. அதற்கான செலவுத்தொகை பிஆர்ஓ தலையில்தான் விழுகிறதாம்.

மாவட்டத்தில் அரசு நிகழ்வுகள் அனைத்தையும் நிறைவு செய்து முதல்வர் ஒரே நாளில் சென்னை திரும்பினாலும்கூட, செய்தித்துறை அதிகாரிகள், முதல்வரின் பயண நாளுக்கு முதல் நாளே மாவட்டத்திற்குச் சென்று, முதல்வர் சென்னை திரும்பிய மறுநாள் காலையில்தான் சென்னை திரும்புகிறார்கள். ஆக மொத்தமாக இவர்கள் 3 நாள் அந்தந்த மாவட்டங்களிலேயே முகாமிடுவார்கள்.

இப்படி செய்தித்துறை அதிகாரிகள் 3 நாட்கள் முகாமிடும் போது, யானையைக் கட்டி தீனிப் போட வேண்டியிருக்கிறது என்று புலம்புகிறார்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்.

இயக்குநரைத் தவிர்த்து, சுமார் பத்து நபர்களுக்கான தங்குமிடங்களுக்கான கட்டணம், அவரவர் பதவிக்கு ஏற்றவாறு காலை, பகல், இரவு என மூன்று நேரமும் சைவ, அசைவ உணவுகளுக்கான செலவுகள், ஓய்வு நேரத்தில் நொறுக்குத் தீனியாக டிரை புருட்ஸ் என செலவு பல ஆயிரம் ரூபாய் அளவுக்கு எகிறிவிடுகிறது என்கிறார்கள் பிஆர்ஓக்கள்.

இதைவிட கொடுமையாக இரவு நேரத்தில் மதுபானம் அருந்துபவர்களுக்கு அவர்கள் விரும்பும் புதுமையான மது பானங்களை வாங்கி கொடுப்பதற்கும் பிஆர்ஓக்கள்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தேடி ஓட வேண்டியிருக்கிறதாம். போதை தலைக்கு ஏறியவுடன் தாங்கள் வகிக்கும் பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து அவர்கள் பேசும் பேச்சுகள் எழுத்திலேயே அச்சிட முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதும் கீழ்நிலை பணியாளர்களின் வேதனைக் குரல்.

முதல்வரின் சுற்றுப்பயணத்திற்கு என்று பிரத்யேகமாக சிறப்பு நிதி ஒதுக்கப்படாத சூழலில், மாவட்டங்களில் பணியாற்றும் பிஆர்ஓக்கள்தான், ஆளும்கட்சி எம்எல்ஏ, அமைச்சர் அல்லது பிற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் பணத்தை வசூலித்தே செலவு செய்கிறார்கள். அதிகாரிகள் பயணிக்கும் காருக்கான எரிபொருள் செலவையும் சுமக்கும் பிஆர்ஓக்கள், பல நேரங்களில் சென்னை அதிகாரிகளின் கைச் செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்ப வேண்டியிருக்கிறதாம்.

மாவட்டத்திற்கு முதல்வர் வருகிறார் என்றால், செய்தித்துறை அதிகாரிகளுக்கான செலவு மட்டும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்று கூறும் பிஆர்ஓக்கள், ஒரு சில நேரங்களில் சென்னையில் இருந்து வரும் உயர் அதிகாரிகள் அவசரமாக சென்னை திரும்ப வேண்டும் என்று சொல்லும்போது, அந்த நேரத்தில் விமான டிக்கெட்டும் எடுத்து கொடுத்து வழியனுப்பி வைக்க வேண்டும். அவசர கதியில் டிக்கெட் எடுக்க வேண்டியிருப்பதால் விமான கட்டணமே பத்தாயிரம் ரூபாயை தொட்டுவிடும் என்று கதறுகிறார்கள் பிஆர்ஓக்கள்.

இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த மாவட்ட சுற்றுப்பயணங்களின் போது பெரும்பாலும் ஒரே குழுவே பயணம் செய்திருக்கிறது என்று கூறும் தலைமைச் செயலக செய்தித்துறை அதிகாரி ஒருவர், மாவட்ட சுற்றுப்பயணங்களின் போது குதூகலத்திற்கு பஞ்சமிருக்காது என்பதால், முதல்வரின் வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தின் போது செய்தித்துறையில் உள்ள மற்ற அதிகாரிகளை தங்களுடன் அழைத்துச் செல்ல இவர்கள் விரும்புவதே இல்லை என்கிறார்.

செய்தித்துறையில் உள்ள எந்தவொரு அதிகாரியை கேட்டாலும், தாங்கள் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்தான், முதல்வரின் மாவட்ட சுற்றுப்பயணத்தை வைத்து உல்லாச வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள்தான் என்று கூறும் அதே அதிகாரி, பிஆர்ஓ உள்ளிட்ட மாவட்ட அளவிலான செய்தித்துறை அதிகாரிகளுக்கு அதிகளவு செலவு வைத்தால், அவர்களிடம் இவர்களால் கெடுபிடியாக வேலையை வாங்க முடியுமா, அப்படியே மேல் அதிகாரி என்ற பந்தாவைக் காட்டினால், அவர்களுக்கு செலவு செய்த பிஆர்ஓக்கள் எந்த மாதிரியான மரியாதை கொடுப்பார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார் தலைமைச் செயலக செய்தித்துறை அதிகாரி.

முதல்வரின் புகழைப் பரப்ப வேண்டிய செய்தித்துறை அதிகாரிகளே, அவருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால், என்ன சொல்ல?

One thought on “முதல்வர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செய்தித்துறை அதிகாரிகள்… வாரிச் சுருட்டுவதில் வெறித்தனம்…”

Comments are closed.