Mon. May 6th, 2024

புதுடெல்லியில் நாடாளுமன்றக் கட்டடத்தின் மையப்பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நண்பகல் 1 மணியளவில் சந்தித்து தமிழக நலன் சார்ந்த திட்டங்கள், கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசின் நிதியுதவியை கோரினார். தொடர்ந்து நிலுவையில் உள்ள நிதிகளையும் தமிழகத்திற்கு விரைந்து வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது, மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமருடான சந்திப்பின் போது வலியுறுத்திய முதலமைச்சர், கோரிக்கை மனுவையும் வழங்கினார்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து இருவரும் பேசிக் கொள்வது தொடர்பான புகைப்படங்கள்தான் தமிழக ஊடகங்களில் உடனடியாக வெளியாகின. பிரதமருடனான சந்திப்பு குறித்தோ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டவர்களுடான சந்திப்பு குறித்தோ முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் உடனடியாக புகைப்படங்களோ, செய்தி தொடர்பாகவோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், முதல்வரை முந்திக்கொண்டு பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்தித்தது தொடர்பான இரண்டு புகைப்படங்களை உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும், மழை வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் வழங்கினார். அதன் விவரம் இதோ:

DIPR-P.R.No_.502-Honble-CM-Press-Release-Memorandum-to-Honble-PM-Date-31.3.2022-1

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் முதல்வரை வரவேற்றார். தொடர்ந்து பிற கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.