Sun. Nov 24th, 2024

அரசு பங்களாவில் குடியேற மறுத்து அடம்….

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்து 10 மாதங்கள் நிறைவடைந்த தருவாயிலும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவர், அரசுப் பங்களாவில் குடியேறாமல் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலிலேயே தங்கி, ஆட்சிப் பணி மற்றும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது எத்தனை அவலம்..

அடையாறு அருகே பங்களா அமைப்பிலான வசதி மிகுந்த அமைச்சர்களுக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட இல்லத்தில் குடியேறாமல் தனியார் ஹோட்டலில் இரண்டு அறைகளில் அரசுப் பணியாற்றி வருபவர், திமுக இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவரான துணைப் பொதுச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிதான்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் பேரன்பைப் பெற்றவரும், மிகுந்த நம்பிக்கைக்குரியவரான அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைவர் குடும்பத்து உறவுகளுக்குள் ஏற்படும் மனஸ்தாபங்களை காதும் காதும் வைத்ததைப் போல சத்தமில்லாமல் பேசித் தீர்த்து வைத்தவர்.

கலைஞர் காலத்திலேயே, இன்றைய முதல்வரும் அன்றைய இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்ற தோழராக, அவரது முன்னேற்றத்திற்காக தென் மாவட்ட அரசியலில் அதீத ஈடுபாடு காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி தீரமிக்க திமுக நிர்வாகிகள் அரண் போல காத்து நிற்க அடித்தளம் அமைத்தவர் அமைச்சர் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல் மாவட்ட அரசியலில் மட்டுமின்றி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக குடும்பத்திற்கு விசுவாசமிக்க போர்ப்படைகளை உருவாக்கியவர் என்று பெயரெடுத்தவர் அமைச்சர் ஐ.பெரியசாமி. இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்து வரும் அவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க துறை ஒதுக்காமல், ஜுனியர் அமைச்சர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கூட்டுறவுத்துறை ஒதுக்கியதை கண்டு  ஐ.பெரியசாமி மட்டுமின்றி, உட்கட்சிக்குள்ளேயே உள்ள அவரது எதிரிகள் கூட அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் வெளியான அமைச்சர் பட்டியல் மற்றும் இலாக்கா விவரங்களில், தனக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா மீது அதிருப்தியடைந்த ஐ.பெரியசாமி, யார் யாருக்கு எல்லாம் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதோ, அவர்கள் எல்லாம் அடித்துப்பிடித்துக் கொண்டு முதல்வராக பதவியேற்க தயாராகிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றனர். ஆனால், அன்று இரவு அவரை சந்திக்க துளியும் ஆர்வம் காட்டாமல் அமைதியாக இருந்தார் ஐ.பெரியசாமி.

இந்த தகவல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான சக்கரபாணிக்கு சொல்லப்பட, அரசியலில் குருவான ஐ.பெரியசாமியை சமாதானப்படுத்தி அழைத்து வர சிஷ்யரான சக்கரபாணி மிகவும் மெனக்கெட்டார்.

ஒரு வழியாக சமாதானம் ஆகி அன்றிரவு கடைசி நபராக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார் ஐ.பெரியசாமி. அன்றிலிருந்து இன்று வரை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அதே வருத்தத்தில்தான் இருந்து வருகிறார் என்று கூறும் அவரது விசுவாசிகள், ஜுனியர் அமைச்சருக்கு தர வேண்டிய இலாக்காவை தனக்கு ஒதுக்கியதால் மனம் நொந்து போய் இருந்த நேரத்தில், அமைச்சர்கள் குடியேறும் பங்களாக்களில், கடந்த 2006 – 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை ஒதுக்கும்படி வேண்டுகோள் வைத்தார். ஆனால், அவர் விரும்பி கேட்ட பங்களாவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை.

திமுக தலைமை தொடர்ந்து தன்னை புறக்கணிப்பதாக தனது விசுவாசிகளிடம் மனம் வெறுத்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அரசு ஒதுக்கிய மாற்று பங்களாவில் குடியேற மறுத்துவிட்டு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலான மாரிஸில்தான் கடந்த பத்து மாதமாக தங்கியிருந்து அமைச்சர் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

தனக்கு பிரத்யேகமாக ஒரு அறையும், அமைச்சரை சந்திக்க வரும் விருந்தினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரை சந்திக்க மற்றொரு அறை என இரண்டு அறைகளையும் பயன்படுத்தி வருகிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.

பத்து மாதமாக தனியார் ஹோட்டலில் பிடிவாதமாக தங்கியிருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சமாதானப்படுத்தி, அரசு பங்களாவுக்கு அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் இல்லாமல் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், திமுகவின் இரண்டாம் நிலையில் உள்ள பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு ஆகியோருக்கும் கூடவா நேரம் இல்லை என்கிறார்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அக்கறை காட்டும் திமுக நிர்வாகிகள் சிலர்.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, பொதுமக்களின் குறைகளை கேட்டு ஆட்சியர்கள் நிவர்த்தி செய்வார்கள். அதுபோல, வாரத்தில் ஒருநாளோ, மாதத்தில் ஒருநாளோ ஒதுக்கி அமைச்சர்களுக்கு உள்ள குறைகள், ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கு உள்ள குறைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயன்றால் வரும் 4 ஆண்டுகளிலும் முதல்வருக்கு பணிச்சுமை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள்.