Sun. May 19th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…

இன்றைய காலைப் பொழுது இவ்வளவு மகிழ்ச்சிக்கரமாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

நாள்தோறும் குறைகளைக் கண்டுபிடித்து விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருக்கும் மனதிற்கு, பாராட்டுவதற்கும் கருப்பொருள் கிடைத்திருக்கிறது.

சமஸ்…

சென்னையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை..

இந்து தமிழ் நாளிதழின் முன்னாள் நடுப்பக்க ஆசிரியர். தற்போது அருஞ்சொல் இணைய தள ஊடகத்தின் நிறுவன ஆசிரியர். நேரடியாகவே, தொடர்புகளின் மூலமோ அறிமுகம் கிடையாது.

ஆனால், தினமணி நாளிதழின் திருச்சி ஊடகவியலாளர் நண்பர்கள்  மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவரது முகநூல் (ஃபேஸ் புக்) பக்கத்தில் நேற்று காலை வெளியிட்டிருந்த “திமுக எதிர்கொள்ளும் தார்மீக சவால்”எனும் தலைப்பிலான கட்டுரையை நானும் வாசித்தேன்.

எனது சொந்த ஊரான தாரமங்கலத்தில் தரம் உயர்த்தப்பட்ட 2 ஆம் நிலை நகராட்சி மன்றத்திற்கான வார்டு தேர்தல்களில் போட்டியிட்ட அரசியல் முன்னணி நிர்வாகிகள் ஒரு வாக்குக்கு 2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்தது எல்லாம் நினைவுக்கு வந்து மறைந்து போனது.

கும்பகோணத்தின் உள்ளாட்சி நிர்வாகி உலகெங்கும் உள்ள ஒரு மேயக்குரிய தகுதியையும் அதிகாரத்தையும் பெற வேண்டும். இதை உண்டாக்குவது அரசின் பொறுப்பு..

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தம்முடைய மேயர்களுக்கு எத்தகைய நிதிச் சுதந்திரத்தையும் அதிகாரங்களையும் வழங்கியிருக்கின்றன. ஐரோப்பாவின் வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகங்களின் பங்கு என்பதைக் கவனித்தால் அங்கிருந்து தமிழகம் இதற்கான இந்திய முன்மாதிரியை உருவாக்க முடியும்.”

இப்படி கட்டுரை முழுவதும் உயர்ந்த சிந்தனைகள் விதைக்கப்பட்டிருந்ததை வாசித்த போது வியப்புதான் ஏற்பட்டது.

அவரின் முகநூல் பக்கத்தில் மீண்டும் இரவு 7.51 மணியளவில் மற்றொரு பதிவு, பகிரப்பட்டிருக்கிறது.  

தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த பதிவில், நேற்று காலை பகிரப்பட்ட திமுக எதிர்கொள்ளும் தார்மீக சவால் எனும் தலைப்பிலான கட்டுரையை வாசித்த தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ், அருஞ்சொல் ஆசிரியரை தொலைபேசியில் அழைத்து விவாதித்திருக்கிறார் என்ற தகவலை தாங்கியிருந்தது.

அவரின் பதிவை அப்படியே பகிர்கிறேன்….

தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு

சற்றுமுன் ஒரு அழைப்பு. தலைமைச் செயலகத்திலிருந்து பேசுவதாக சொன்ன ஊழியர் தலைமைச் செயலர் பேச விரும்புவதாகக் கூறி, அழைப்பை இணைத்தார்.

தலைமைச் செயலர் திரு. இறையன்பு பேசினார். சமீபத்தில் Arunchol அருஞ்சொல் இதழில் வெளியான ‘திராவிட மாதிரி எதிர்கொள்ளும் சவால்!’ தலையங்கத்தையும், ‘தமிழ்நாட்டின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?’ கட்டுரையையும் அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டதாகக் கூறியவர், இன்று நடந்த அரசு செயலர்கள் கூட்டத்தில் அதை மையமாகக் கொண்டு விவாதித்ததாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் சில மாவட்டங்கள் ஆப்பிரிக்கா, உபி, பிஹார் சூழலுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு மோசமாக இருப்பதையும், பிராந்தியரீதியாக தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வையும் விரிவாகச் சுட்டிக்காட்டும் தலையங்கம், கட்டுரை அவை.

இந்த ஏற்றத்தாழ்வைப் போக்கும் வகையில் அரசின் கொள்கைகள் நடவடிக்கைகள் அமையும் என்று கூறிய அவர் துறைவாரியாக இது சம்பந்தமான நடவடிக்கைகள் அமையும் என்றும் தெரிவித்தார்.

சொற்கள் காரியங்கள் ஆகும் நாளில், தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பெரும் நடவடிக்கைகளில் ஒன்றுக்கான அடிக்கல்லாக இன்றைய கூட்டம் அமையும் என்று எண்ணுகிறேன்.

தொடர்ந்து ‘அருஞ்சொல்’ சுட்டும் விஷயங்களுக்கு அரசு உரிய கவனம் அளிப்பதும், தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உவகை தருகிறது. விமர்சனங்களுக்குத் திறந்த மனதுடன் காது கொடுக்கும் தமிழக அரசின் இத்தகு அணுகுமுறை தொடர வேண்டும்.

தமிழக முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் இது சார்ந்த நடவடிக்கைகளோடு தொடர்புடைய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

மிக முக்கியமான ஒரு பிரச்சினையைப் புள்ளிவிவரங்களுடன் அணுகிய கட்டுரையாளர் மூர்க்குமாவுக்கு வாழ்த்துகள். கட்டுரைகளை வாசிக்க சுட்டி கீழே!

இந்த பதிவை இன்று காலை வாசித்து முடித்த நேரத்தில், உடல், மனம் செயலாற்றுப் போனது போன்று சில நிமிடங்கள் கரைந்துப் போனது.

முகநூலில் அல்லது அருஞ்சொல் இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை வாசிப்பதற்கு நேரம் கிடைப்பதே கடினம். ஆனால், கட்டுரையை வாசித்துவிட்டு, அதில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை, அரசு நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. அதனால், அதை செயல்படுத்த ஆலோசிப்போம், முயற்சிப்போம், அமல்படுத்துவோம் என்று துணிந்து கூறுகிற மனஉறுதி கொண்ட தலைமைச் செயலாளர்,  தமிழகத்திற்கு கிடைத்திருப்பது 8 கோடி தமிழக மக்கள் செய்த புண்ணியம்.

இதே உணர்ச்சியோடு முகநூலில் தொடர்ந்து மேய்ந்ததில் இன்னொரு பதிவும் கண்ணில் பட்டது.

அது மற்றொரு முகநூல் நண்பர் செல்வ முரளி என்பவருடையது.

இவருடனும் நேரடியாகவோ, தொடர்பு மூலமாகவோ அறிமுகம் கிடையாது. இருப்பினும், அவரின் பதிவுகள் மூலம் அவ்வப்போது உணர்ந்து கொண்டது, நாட்டிற்கும், இளம் தலைமுறை மேம்பாட்டிற்கும் கணினி தொழில்நுட்பம், இயற்கை விவசாயம் போன்ற துறைகளில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து கொண்டிருப்பதை அவரது முகநூல் பக்க பதிவுகள் அடிக்கடி பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

அவரும் தலைமைச் செயலாளர் பற்றிய தகவலைதான் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரின் பதிவையும் நகலெடுத்து பகிர்கிறேன்…

இன்று மாலை ஒரு சிறப்பான செய்தி வந்து.சேர்ந்தது, அப்பாவிற்க்கு டயாலிசஸ் செய்யும்போது அங்கே உள்ள சிக்கல் பற்றி எழுதியிருந்தேன்

அதை எனது பேஸ்புக் நண்பர் தலைமை செயலர் திரு இறையன்பு அவர்கள் கவனத்திற்க்கு கொண்டு சென்றபோது அந்தத் துறை குறித்த அறிக்கையை எனது பேஸ்புக் நண்பரிடம் அனுப்பியிருக்கிறார்கள்

தமிழகம் முழுதும் புதியதாக 40 டயாலிசஸ் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன, அதில் நான்கு தர்மபுரிக்கு என்று குறிப்பிட்டு அந்த செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார்,

அந்நண்பருக்கு மனமார்ந்த நன்றி

கூடவே டயாலிசஸ் இருக்கும் எல்லா மருத்துவமனைகளிலும் சிறுநீரக சிறப்பு மருத்துவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்

டயாலிசஸ் செய்யும் இடத்திலே அட்மிஷன் டோக்கனை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிச்சயம் தலைமை செயலரிடம் சொல்லி மீண்டும் நல்ல செய்தியோடு வருவதாகச் சொல்லியிருக்கிறார்

மிக்க நன்றி!

இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு விரோதமாக ஊழியர்களை பணிபுரிய நிர்ப்பந்திக்கும் நிறுவனங்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவன் என்றபோதும், காலை 9 மணிக்கு தலைமைச் செயலகம் வந்து இரவு 9 மணிக்கு மேல் இல்லம் செல்கிறார் தலைமைச் செயலாளர் என்ற தகவல் கிடைக்கிற போதெல்லாம், தனி நபரின் முன்னேற்றத்திற்காக இல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கான உழைப்பு என்றால், தலைமைச் செயலாளருக்கு தீனி போடுவது என்பது கடினமான ஒன்றுதான் என்று நினைத்துக் கொள்வேன்.

அப்படி நேரம் காலம் பார்க்காமல் அரசு கோப்புகளை ஆய்ந்து, ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுத்து அதை செயல்படுத்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிற வேளையிலும் கூட முகநூலில் வரும் கட்டுரைகளை, தகவல்களை பார்த்து அதன் மீது உண்மையான அக்கறை காட்டி, நிறைவேற்றி வைக்கிற மனம் இருக்கிறதே, அந்த நல்ல மனிதரின் மக்கள்சேவையை பகிராமல், பாராட்டாமல் கடந்து போனால், ஊடகவியலாளர் என்ற தர்மத்திற்கு துரோகம் இழைப்பது போலாகிவிடும்.

நடையாய் நடந்து அரசு அலுவலகங்களில் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது பல்லாண்டுகள் கடந்தாலும் தீர்வு காண துளியும் அக்கறை செலுத்தாமல் ஈவு இரக்கமற்ற அரசு அதிகாரிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குவதற்கும், பொதுமக்களுக்கு, நாட்டுக்கு ஒரு நல்லது என்றால் அதை தேடித் தேடி உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காகவும் தன் அதிகாரத்தை, ஆயுளை செலுத்திக் கொண்டிருக்கும் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் போல தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் மூத்த, இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் செயல் வீரர்களாக மாறினால், தமிழகம் விடியலைக் காண ஐந்தாண்டு காலம் கூட தேவைப்படாது…