Sun. Nov 24th, 2024

மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான நிருவாகப் பயிற்சி முகாம் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்.13) நடைபெற்றது.

விழாவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தலைமை வகித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு பேரூரையாற்றினார்.

விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:


நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சராக ஏற்கெனவே பணியாற்றியவர்தான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலி.ன இந்த துறையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் நன்கு அறிந்தவர். அவரின் அறிவுரையை ஏற்றுதான் இந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மிகுந்த அவையடக்கத்தோடு சொன்னார். நான் புதியவன் என்று கூறினார். அப்படியில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் பிரசாரம் செய்து அனைவரையும் வெற்றிப் பெறச் செய்திருக்கிறீர்கள். உங்களைப் பற்றி சட்டமன்றத்தில் சொல்கிறபோது, ஒவ்வொரு அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய வெற்றிக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றியவர் உதயநிதி ஸ்டாலின். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி தமிழகம் முழுவதும் தலைவர் போகாத இடங்களுக்கு எல்லாம் சென்று பிரசாரம் செய்து அனைவரையும் வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள். இங்கு வந்திருக்கிற பல பேர், உங்களின் பிரசாரத்தினால்தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆர்.எஸ்.பாரதி எம்பி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் என பலர் விரிவாக தங்கள் அனுபவங்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளையும் எடுத்து கூறியிருக்கிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

விழாவில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பேசியதாவது:

மேலாண்மையில் ஒரு பழமொழி உண்டு. ஒரு புலியை தொடர்ந்து பூனையாகவே நினைத்துக் கொண்டிருந்தால் அது பூனையாக மாறிவிடும் என்பார்கள், அதைப்போல நம்முடைய ஆற்றலை நாம் எவ்வாறு யூகிக்கிறமோ அப்படிதான் வாழ்க்கையில் நம் முன்னேற்றம் இருக்கும். கல்லாக இருக்கிற போது வைரம் தெரிவதில்லை. அதை பட்டை தீட்டுகிற போது பளபளக்க ஆரம்பித்து விடுகிறது. அதைப்போல பயிற்சியின் மூலம் நாம் இன்னும் மேம்பட முடியும் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.

திருவள்ளூவர் இரண்டு குறட்பாக்காளை ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தில் எழுதியிருக்கிறார். முதலாவதாக சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு என்ற குறளையும், பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின் என்கிற குறளையும் ஒரே அதிகாரத்தில் வைத்திருக்கிறார்.

பெரிய உருவமாக இருந்தாலும் ஒரு புலி பாய்கிற போது அந்த யானை சற்று அச்சமுறும் என்று ஒரு குறளிலும் போர்க்களத்தில் எவ்வளவு அம்புகள் வந்து பாய்ந்தாலும் சிறிதும் தளராமல் முன்னேறிச் செல்லும் களிறு என்று இன்னொரு குறளையும் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். ஊக்கம் உடைமைக்கும் ஒரு குறள், அதில் யானையைதான் குறிப்பிடுகிறார். ஊக்கம் இன்மைக்கும் ஒரு குறள். அதிலும் யானையைதான் குறிப்பிடுகிறார். அப்படியென்றால் யானைக்கு ஊக்கம் இருக்கிறதா..இல்லையா..என்ற கேள்வி நமக்கு வரும்.

வனத்திலே இருக்கிற யானை தன்னுடைய பலத்தை உணராத காரணத்தினால் அது புலியை கண்டு பயப்படுகிறது. ஆனால் போர்க்களத்தில் இருக்கிற யானை, பயிற்சி தந்த காரணத்தினால் தன் வலிமையை உணர்ந்ததால் அது எவ்வளவு அம்புகள் பாய்ந்தாலும் நமக்கு ஆற்றல் இருக்கிறது என்று முன்னேறிச் செல்கிறது என்பதுதான் இந்த குறட்பாக்களின் விளக்கம். எனவே, பயிற்சி ஒரு மனிதனை பண்படுத்தும். இன்று காலையில் இருந்து நகராட்சி நிர்வாகத்திலே நீங்கள் எப்படிபட்ட அதிகாரங்களையும் பொறுப்புகளையும் வகிக்க போகிறீர்கள் என்பது தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிகாரம் என்ற ஒன்று இல்லை. ஏனென்றால் அதிகாரம் என்பது தவறாக உபயோகிக்கும்போதுதான்அது அதிகாரம். சரியாக பயன்படுத்துகிற போது அது பொறுப்பாக தான் இருக்கும்.  பொறுப்புள்ள ஒரு பணியில் மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன பல நாட்கள் கழித்து நம்முடைய நகராட்சியில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் நீர் தேங்காத சாலை, வழிந்தோடுகிற கால்வாய்கள், எப்போதும் செப்பணிட தேவையில்லாத பளபளக்கிற சாலை, தங்கள் குடியிருப்பு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள். இவற்றை தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய இருத்தலுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாத ஒரு வாழ்க்கையை தான் மனிதர்கள் விரும்புகிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள், உன்னதமான வாழ்க்கை என்பது யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் வாழ்வதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே, பொறுப்புள்ளவர்கள் இன்னும் தீவிரமாகவும் உழைப்பை சிந்தித்து அந்த மக்களுக்கு தேவையானஅடிப்படை வசதிகளை எல்லாம் தங்களுடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தங்கள் நகராட்சிதான் ஒப்பற்ற நகராட்சி, தங்கள் மாநகராட்சி தான் சிறந்த மாநகராட்சி என்கிற பெயரை பெறுகிற அளவுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த பயிற்சி இங்கே அளிக்கப்படுகிறது.

இங்கே சரி பாதியாக பெண்கள் இருக்கிறார்கள். இங்கே பேசுகிற போது சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் கூட பெண்கள் சரி பாதி வந்திருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். லாவோ சூ என்கிற சீன அறிஞர் ஒரு கருத்தை குறிப்பிடுகிறார். நீர் பெண் தன்மை வாய்ந்தது. பாறை ஆண் தன்மை வாய்ந்தது. பாறை ஆரம்பத்திலே கடினமானதாக தெரிந்தாலும் பலம் வாய்ந்ததாக தெரிந்தாலும் தொடர்ந்து நீர் பாய்ந்து, பாய்ந்து அது வழுவழுப்பாக மாறிவிடுகிறது. நீர் அந்த பாறையை கூட இலக செய்துவிடுகிறது அதைபோல தலைமைப் பண்புக்கு உதாரணமாக இருப்பவர்கள் பெண்கள். அதனால்தான் மார்கன் தொடக்கத்திலே தாய்வழிச் சமுதாயம் இருந்தது என்று குறிப்பிடுகிறார். குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலே எங்கெல்ஸ் என்பவர் பெண் வழிச் சமுதாயம் இருந்தது என்று கூறுகிறார். ராகுல் சாங்கிருத்யாயன் தன்னுடைய வால்காவில் இருந்து கங்கை வரை என்கிற நூலில் பெண்கள்தான் குடும்பத் தலைவிகளாக இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.

எனவே, நீங்கள் இந்த தலைமைப் பண்பை யாரையும் துணை கொள்ளாமல் உங்களுக்குதான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு முடிவுகளை எடுங்கள். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக முதல் அமைச்சர் சமூக நலத்துறை என்று இருந்ததை பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற துறையாக மாற்றி அமைத்திருக்கிறார் என்பதை மனதிலே கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். இந்த பயிற்சி ஒரு தொடக்கம்தான். எப்போதுமே ஒரு பயிற்சியில் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிற பயிற்சியாக இருக்க முடியாது. ஆனால், பணியே ஒரு பயிற்சிதான்.

பணியிலே சேர்ந்த பிறகு நாம் அனைவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களைச் சார்ந்திருக்கிற அதிகாரிகளிடம் இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள். இன்னொன்றையும் நான் சொல்கிறேன். ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் இருப்பார்கள். அவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மிகச் சிறந்த நகராட்சி நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தமிழகத்தில் அமைந்தால் அது எல்லா உள்ளாட்சிகளிலும் தன்னிறைவு ஏற்படுத்தும். அனைத்து திட்டங்களும் சிந்தாமல் சிதறாமல் மக்களை போய் சேருவதற்கு இந்த மாநகராட்சிகளும், நகராட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமிழகம் 50 சதவீதத்திற்கு மேல் நகர்மயமாகிக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்களின் செயல்பாடுகளால்தான் தமிழகம் ஒளி மிகுந்த மாநிலமாக மாற முடியும் என்பதை மனதில் நிறுத்தி பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்தார்.

வெ.இறையன்பு ஐஏஎஸ் உரையாற்றிய 15 நிமிடங்களுக்கு உள்ளாக திருவள்ளுவர்,குறள், தந்தை பெரியார், லாவோ சூ, மார்கன், எங்கெல்ஸ், ராகுல் சாங்கிருத்யாயன் ஆகிய சான்றோர்களின் பொன்மொழிகளை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தினார்.

One thought on “குறள், தந்தை பெரியார், லாவோ சூ, மார்கன், எங்கெல்ஸ், ராகுல் சாங்கிருத்யாயன்… வெ.இறையன்பு ஐஏஎஸ் அசத்தல் பேச்சு!”

Comments are closed.