Sun. Nov 24th, 2024

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனிநபர்கள் வழக்குகள் தாக்கல் செய்தனர். அதன் மீது பல கட்ட விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நேற்று தகவல் வெளியானது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியானது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள்தான் 7.5 சதவீத இடஒதுக்கீடும் வருகிறது என்று தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.