முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகர் விஜயும் இன்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு, நலம் விசாரித்துக் கொண்டனர்.
திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமின் மகள் ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் ராம் ரத்தன் ராயின் மகன் ராகுல் ராய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார். அவருக்கு முன்பாகவே மணமக்களை வாழ்த்த வருகை தந்திருந்த நடிகர் விஜய், முதல்வர் வருகையை அறிந்து புன்முகத்துடன் இருகரம் கூப்பி முதல்வரை வரவேற்றார்.
திருமண வரவேற்பு நிகழ்வில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜயை சந்திக்க நேரிட்டதால், மலர்ச்சியான முகத்துடன் விஜய்க்கு வணக்கம் தெரிவித்த முதல்வர், அவரிடம் நலம் விசாரித்ததுடன், தயாரிப்பில் உள்ள அவரது அடுத்த திரைப்படம் குறித்து ஆர்வமாக கேட்டறிந்தார்.
முதல்வரும் நடிகர் விஜயும் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்ட நிகழ்வு, வரவேற்பு நிகழ்வுக்கு வந்திருந்த பிரபலங்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சில நிமிட நேர சந்திப்பு என்றாலும் கூட, இருவர் மீதும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனமும் இருந்தது.
பின்னர், மணமக்களை வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்செடிகளை திருமண பரிசாக வழங்கினார். அவரது மகனும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர் விஜய்க்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகவே அமைந்துவிட்டது.
காலையில் விஜய் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள புதிய திரைப்படத்திற்கான துவக்க விழா நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், படத்தின் துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
சுல்தான் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ராஷ்மிகா, தனது கனவு நாயகரான விஜய் உடன் ஜோடி சேர்ந்துள்ளார். விஜயை மிக நெருக்கமாக பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்ட ராஷ்மிகா, நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர் எனக் கூறி, திருஷ்டி கழிக்கும் விதமாக தனது கைகளை உயர்த்தி சுற்றிப் போட்டார். மேடையில் விஜய் உடன் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு நிமிடத்தையும் அணுஅணுவாக ரசித்துக் கொண்டாடினார் ராஷ்மிகா. அவரின் உற்சாகம் அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது.
தளபதி 66 என்ற பெயரில் நடைபெற்ற பூஜை நிகழ்வில் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.