Mon. Nov 25th, 2024

கொள்ளிடம் கதவணை திட்டங்கள் கைவிட்டுள்ளதை மறுபரிசீலனை செய்திடுக என்று பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டங்கள் குறித்து போடப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜரான பின் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து ஓஎன்ஜிசி கச்சா, இயற்கை எரிவாயு,மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய தமிழக அரசு போராட்டம் நடத்திய விவசாயிகள் அமைப்புகள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. தற்போது திமுக தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு பொய் வழக்குகளை திரும்பப் பெற்றது.

சட்டத்திற்கு உட்பட்ட ஒரு சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதனை காரணம் காட்டி எனக்கு (பி.ஆர்.பாண்டியன்) மத்திய அரசு பாஸ்போர்ட் வழங்க மறுத்து வருகிறது. மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளை பிரிவினைவாதிகள் போல் பார்க்கும் நடவடிக்கையை கைவிட்டு பாஸ்போர்ட் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுமையிலும் குடிமராமத்து திட்டம் இரண்டு வகையில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. விவசாயிகள் இலவசமாக மண்ணை எடுத்து தனது விளைநிலங்களை சமன்படுத்தி கொள்வதற்கும், நீர்நிலைகள் தூர்வாருவதற்கும் அனுமதிக்கப்பட்டது.

அதேபோல விவசாயிகள் 10 சதவீத பங்களிப்போடு பாசன வடிகால்களை தூர் வாருவதற்கு விவசாயிகள் கொண்ட பாசனதாரர்கள் சபைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் குடிமராமத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் விவசாயிக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதை கருத்தில்கொண்டு உடனடியாக குடிமராமத்து திட்டத்தைத் செயல்படுத்த நீர்பாசனத்துறை மானிய கோரிக்கையில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கொள்ளிடத்தில் வாய்ப்புள்ள இடங்களில் கதவணைகளை அமைத்து பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவதோடு, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரியும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. முந்தைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரியலூர்,கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 3 கதவணைகள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அது தற்போது நிதி சுமையை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டு உள்ளதாக வந்திருக்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது, எனவே அதனை மறுபரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

திமுக தனது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அடிப்படையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500/- விலை நிர்ணயம் செய்து நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுளளார்.