Tue. Apr 30th, 2024

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல் அமைச்சராக நான் பதவியேற்றப் பிறகு 3 வது முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.

பிரதமரை சந்திப்பதற்காக நேரம் கேட்டபோது உடனடியாக நேரம் ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரை சந்தித்து 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன்.

கவனமுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார், சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக் கொண்டிருக்கக் கூடிய இலங்கை தமிழகர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். அதேசமயம் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அவர்களுக்கு வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

மேலும், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமையையும் அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்தும் வலியுறுத்தியிருக்கிறேன்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் உக்ரன் மீதான போரினால் மருத்துவக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழக மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.

நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது; அது குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை, அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன்.

அமைச்சர்கள் அனைவருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோரைச் சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை வழங்கி, உடனடியாக மத்திய அரசு உதவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.