தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் 4 நாள் அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை விமானநிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டுச் சென்றார். அவரை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
இரவு 9 மணியளவில் துபாய் விமானநிலையம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு துபாய் அரசு ராஜ மரியாதை வழங்கியது. ஐக்கிய அமிரகத்திற்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி மற்றும் துபாய் அரசு உயர் அதிகாரிகள் இசா அப்துல்லா அல்கோரர், ஸ்காலித் ஜமால் அல்ஹை உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், விமான நிலையத்தில் இருந்து முதல்வர் தங்கவுள்ள ஹோட்டலுக்கு புறப்பட்டு செல்வதற்காக துபாய் அரசு, பிஎம்டபுள்யூ காரை வழங்கி கௌரவித்துள்ளது.
விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், விமான நிலையத்தில் உள்ள விருந்தினர்கள் ஓய்வு அறையில் இந்திய தூதரக அதிகாரி மற்றும் துபாய் அரசு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் பிஎம்டபுள்யூ காரில் முதல்வர், ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை துபாய் வாழ் தமிழ் தொழிலதிபர்கள், தமிழ்ச்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான வர்த்தகம், பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
துபாயில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ளும் முதல் அமைச்சர், அங்கு தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுகிறார். முதல்வருடன் தொழில்துறைஅமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.