Sat. Nov 23rd, 2024

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவிற்காக நிறுத்தப்படுகிறபோது, தரமற்ற உணவுகளை சாப்பிட வேண்டியிருப்பதாகவும், உணவுகளின் விலையையும் அநியாயமாக இருப்பதாகவும் பயணிகளிடம் இருந்து தமிழக அரசுக்கு எண்ணற்ற புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தொலைதூரப் பயணத்தின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக உணவு நேரத்தின் போது பேருந்துகளை நிறுத்துவதற்காக உரிமம் கோரி விண்ணபிக்கும் உணவகங்களுக்கு புதிய நிபந்தனைககள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் இதோ…

அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியீடு:

ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள்

உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.

பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.

உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்போழுதும் இருக்கவேண்டும். கழிவறையை கம்பரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் மேலும் பயோ-கழிவறை இருக்க வேண்டும்.

உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்க்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்கிரீட் (Concrete) தளமாக அல்லது Pavar Block போட்டிருக்க வேண்டும்.

உணவகம் கட்டாயம் சாலையின் இடது புறமாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.

பேருந்துகள் உணவகத்தில் உள்ளே சென்று வெளியே வருவதற்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது.

பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாக தெரியும்படி உணவகத்தின் இட அமைப்பு இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமிராக்கள் முக்கியம்

உணவகத்திற்கு மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்.

உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பகுதிகளிலும் CCTV பொருத்தியிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

உணவகத்தில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலைபட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.

மேலும் உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் M.R.P., விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்/ M.R.P., விலையை விட அதிகமாக உணவு பொருட்கள் விற்க்கப்பட்டால் உரிமம் இரத்து செய்யப்படும்.

புகார் பெட்டி வைக்க வேண்டும்.

உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு எந்தவொரு இடையூறு தரும் செயல் (அ) புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.

பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கும் மற்றும் உணவகத்தில் வாங்கும் பொருட்களுக்கும் கணணி மூலம் இரசீது (Computerised Bill / Cash Bill) கொடுக்கப்பட வேண்டும்.

உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.