தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…
பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து, அதற்கான குழு உறுப்பினர்களாக அரசு உயரதிகாரிகள், பத்திரிகை உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு அதற்கான அரசாணையை கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.
தமிழகத்தில், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது அச்சு ஊடகம் உள்ளிட்ட அனைத்து வகை ஊடகங்களிலும் பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான ஊடகவியலாளர்களின் பல்லாண்டு கோரிக்கை இது.
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், இதே கோரிக்கையை முன்வைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் பல்வேறு விதமான போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளன.
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் நேரிலேயே கோரிக்கை மனுக்களை வழங்கி பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இருப்பினும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், பத்திரிகையாளர்களின் நலனை பாதுகாப்பதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே காலக்கட்டத்தில் தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழகத்தை தவிர, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைந்தவுடன், ஊடகவியலாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பேரவையிலேயே வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வாரியத்தின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்காகவும், பயனாளிகளை தேர்வு செய்வதற்காகவும் அமைக்கப்பட்ட குழுவில், அரசு உயர் அதிகாரிகளைத் தவிர்த்து, பத்திரிகையாளர்கள் தரப்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து, பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் தங்கள் அதிருப்தியை அப்போதே வெளியிட்டன.
பத்திரிகையாளர்களின் நலனை பேணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாரியத்தில், முழுமையாக பத்திரிகையாளர்களுக்கு இடம் அளிக்காமல் தினத்தந்தி குழும அதிபர்களில் ஒருவரான சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், தினகரன் நாளிதழ் வெளியீட்டாளரும் ஆசிரியருமான ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோரை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதை தமிழக அரசு தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக ஊடகவியலாளர்களையே குழு உறுப்பினர்களராக நியமித்து இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இந்தவொரு விஷயத்தில் இன்றளவிலும் கூட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களிடம் மனவருத்தம் இருந்து வருகிறது.
அதற்கு காரணமாக பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்வைக்கும் வாதம் இதுதான்: தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில் பணிபுரிந்து விட்டு மாற்று ஊடகங்களுக்குச் சென்றவர்களில் ஒரு சிலர் மீதாவது அந்தந்த நிர்வாகங்களுக்கு கோபம் இருக்கலாம். அப்படிபட்ட நேரத்தில், அந்த இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள் ஊடகவியலாளர்கள் அரசின் நலத்திட்டத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, குழுவில் நிர்வாகம் தரப்பில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்கள் அந்த கோரிக்கை மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க கூடும் என்பதுதான் அவர்களின் சந்தேகமாக இருந்து வருகிறது.
குழுவின் மற்ற உறுப்பினர்களாக 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே களத்தில் இருந்து வரும் இந்து ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியர் பி.கோலப்பன், தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், த வீக் ஆங்கில இதழின் முதன்மை சிறப்புச் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் எம். ரமேஷ் ஆகியோர் நியமிககப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், நல வாரியத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வடிவமைப்பதற்காகவும், குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதற்காகவும், தினத்தந்தி அதிபர் முதல் ரமேஷ் முருகேசன் வரை ஒருங்கிணைக்கும் பணியை கோலப்பன் பகவதி முன்னெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதிக்குப் பிறகு தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் தவிர்த்து, ஆர்எம்ஆர் ரமேஷ் உள்ளிட்ட 4 குழு உறுப்பினர்களையும் கோலப்பன் பகவதி தொடர்பு கொண்டு கருத்துகளை பரிமாற்றம் செய்து கொள்ள முடிந்துள்ளதாகவும், தினத்தந்தி அதிபரை மட்டும் கடந்த ஒரு மாதமாக வாட்ஸ் அப், இணைய வழி அஞ்சல், எஸ்எம்எஸ் என்று சொல்லப்படும் கைபேசி குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவித்தும் தினத்தந்தி அதிபரிடம் இருந்தோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ ஒரு தகவலும் கோலப்பன் பகவதிக்கு கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதில் மிகவும் துயரமான செய்தி என்னவென்றால், பிப்ரவரி மாதம் 23 ஆம் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு அதற்காக குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவுப் பெறுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பத்திரிகையாளர்களின் நலனை பாதுகாக்க, நல வாரியம் அமைத்து உத்தரவுப் பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த குழு சார்பில் (ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய குழு) இதுவரை நன்றி தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதுதான்.
பாவப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஒரு அரசாங்கம் நல்லது செய்யலாம் என்று நினைப்பதற்கே பெரிய மனது வேண்டும். அப்படிபட்ட பெரிய மனதோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைத்துள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க கூட, தினத்தந்தி அதிபர் கடந்த ஒரு மாதத்தில் ஒரு மணிநேரம் கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு அவரது தொழிலில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் என்றால், வாரத்திற்கு ஒருமுறையோ, மாதத்திற்கு இருமுறையோ பத்திரிகையாளர்கள் நல வாரியம் கூடி பல மணிநேரம் ஆலோசனை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானால், தினத்தந்தி அதிபரால் நேரம் ஒதுக்கி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமா? என்ற சந்தேகத்தை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் எழுப்பி வருகின்றனர்.
பல ஆயிரம் ஊடகவியலாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய ஒரு நல வாரியத்தில் தமிழகத்தில் நாளிதழ் விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் தினத்தந்தி இடம் பெற வேண்டும் என்று தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, தினத்தந்தி குழுமத்தின் சார்பில் பணிச்சுமை இல்லாத மூத்த ஊடகவியலாளர் ஒருவரையோ அல்லது நிர்வாகத் தரப்பில் இருந்தோ ஒருவரை கூட தமிழக அரசு தேர்வு செய்திருக்கலாம்.
சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியனால் ஒரு மாத காலத்தில் ஒரு சில மணிநேரம் கூட ஒதுக்கி, பத்திரிகையாளர் நல வாரிய குழு உறுப்பினர்களோடு கலந்துரையாட முடியாத நிலையில் இருக்கிறார் என்றால், பத்திரிகையாளர் நல வாரியம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்? அதன் எதிர்கால செயல்பாடுகள் எப்படியிருக்கும்? என்று நினைத்துப் பார்த்தாலே மனதில் பயம் எழுகிறது. ..
இந்தநேரத்தில், கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கடமையுணர்வை உணர்ந்து, தமிழக அரசு தங்களுக்கு அளித்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், விருதாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்ற தகவலையும் நினைவுக்கூர்ந்து பார்த்தால், பல்லாயிரக்கணக்கான ஊடகவியலாளாகளின் எதிர்காலம் ஒருவரால் பாதிக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சம், கடந்த பல நாட்களாக தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது…