Sat. Nov 23rd, 2024

.அதிமுகவிற்கு யார் தலைமை ஏற்பது என்பது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக நான்கு பேருக்கு இடையே நடைபெற்று வரும் கடுமையான போராட்டம் விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 5 மாத திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக அவருக்கு மிக,மிக நெருக்கமான முன்னணி தலைவர்கள் கிசுகிசுத்தனர்.

அதிமுக உட்கட்சிக்குள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அணி திரட்டும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரகசிய திட்டத்தை விரிவாக விவரித்தனர் இபிஎஸ் விசுவாசிகள். அவர்களின் குரல்களிலேயே கேட்போம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மீது மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கே எப்போதுமே முழுமையான நம்பிக்கை இருந்தது கிடையாது. அடுத்து,  அவரின் மறைவுக்குப் பிறகு அவர் தர்மயுத்தம் துவங்கிய போது, வி.கே.சசிகலா கூட்டத்தினர் அவர் மீது அதுவரை வைத்திருந்த நம்பிக்கையை சுத்தமாக துடைத்து எறிந்தனர். பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் காரணமாக, ஓ.பி.எஸ்.ஸை மீண்டும் அதிமுகவோடு இணைத்துக் கொண்ட இபிஎஸ் வகையறாவும் ஓ.பி.எஸ்.மீது எப்போதுமே சந்தேகப் பார்வையோடுதான் இருந்து வந்தது.

நேர்மையான அரசியல்வாதியாக மட்டுமல்ல, துளியளவு கூட நியாயமான மனிதராக கூட தன்னால் நடந்து கொள்ள முடியாது என்பதை  டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்து டீல் பேசிய நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தினார் ஓபிஎஸ்.  அன்றைக்கு இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ்ஸுக்கு சூட்டிய பட்டம்தான், பச்சோந்தி என்பது.

ஓபிஎஸ்ஸின் உண்மையான குணம் அம்பலப்பட்டு போனதையடுத்து, முந்தைய ஆட்சியிலும், கட்சியிலும் அவருக்கு தனிப்பட்ட முறையில் எந்தவொரு முக்கியத்துவத்தையும் அளிக்காமல் தவிர்த்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.

கை காசை செலவழிக்காமல், தொண்டர்களின் ஆதரவு தனக்குதான் இருக்கிறது என்று கூறிக்கொண்டே அதிமுகவின் பொதுச் செயலாளராகி விடலாம் என கணக்கு போட்டு உட்கட்சிக்குள்ளேயே அவர் நடத்திய அனைத்து சித்து விளையாட்டுகளையும் தூள் தூளாகிக்கியவர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்திலேயே ஓபிஎஸ் மேற்கொண்ட அரசியல் வியூகங்களால்தான் அதிமுக இன்றைக்கு எதிர்க்கட்சியாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தனி மனிதர் ஒருவரின் நயவஞ்சக குணத்தால்தான் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைத்து  வரலாற்று சாதனை நிகழ்த்தி மறைந்த அம்மாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் அருமையான வாய்ப்பையும் குட்டிச்சுவராக்கியவர் ஓபிஎஸ் என்பது வடக்கு, மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த அதிமுகவினருக்கு மட்டுமல்ல, மத்திய மற்றும் தென் மாவட்ட அதிமுக தொண்டர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இன்றைய தேதியில், அதிமுக எம்எல்ஏக்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர எஞ்சியவர்கள் அனைவரும் இபிஎஸ் தலைமையைதான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். செயற்குழு, பொதுக்குழு என அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற பொறுப்பாளர்கள் அனைவரும் ஓபிஎஸ்ஸின் தலைமையை ஏற்க தயாராகவே இல்லை. உட்கட்சிக்குள் தனக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், சமுதாயப் பற்றோடு வி.கே.சசிகலாவை ஆதரிக்கும் கபட நாடகத்தை கையில் எடுப்பதை அவரின் தீவிர ஆதரவாளர்களே கடுமையாக எதிர்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அவர்களின் எண்ணத்தை உணர்ந்து கொண்டதால்தான், ஓபிஎஸ்ஸின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர 5 மாத வியூகத்தை கையில் எடுத்துள்ளார் இபிஎஸ்.

அதிமுகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்டதால்தான், எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தில் இருக்கும் அதிமுகவை, வி.கே.சசிகலாவிடம் ஒப்படைக்கும் திட்டத்தோடு ஓபிஎஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் தன்னைப் போலவே அதிமுக முன்னணி நிர்வாகிகளும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே, வி.கே.சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள முன்னணி நிர்வாகிகள் அனைவரிடமும் தனித்தனியாகவும், குழு, குழுவாகவும் மனம் விட்டு பேசி, அதிமுகவின் ஒற்றை தலைமைக்கு தன்னை முன்னிறுத்தும் பணியை துவக்கிவிட்டார், இபிஎஸ்.

மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்ட இபிஎஸ், தென் மாவட்டங்களிலும் தேவர் சமுதாயத்தை தவிர்த்துவிட்டு, நாடார், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிற சமுதாயத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில், அந்தந்த சமுதாயத்தில் உள்ள முன்னணி நிர்வாகிகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் இபிஎஸ்.

தேவர் சமுதாயத்தை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்பது இபிஎஸ்ஸின் திட்டம் கிடையாது. ஆனால், அந்த சமுதாய பின்னணியோடு ஓபிஎஸ்ஸும், வி.கே.சசிகலாவும் அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, சாதியுணர்வோடு செயல்படும் அதிமுக நிர்வாகிகளை புறக்கணிக்க தீர்மானித்துவிட்டார் இபிஎஸ்.

இப்படி இபிஎஸ் வகுத்திருக்கும் வியூகத்தின்படி, தென் மாவட்டங்களில் அவரது தளபதிகள் ஆள்திரட்டும் பணியில் கடந்த பல மாதங்களாக தீவிரமாக களமாடி வருகிறார்கள். அவர்கள் முன்னெடுக்கும் பரப்புரை எல்லாம், அதிமுகவை மீண்டும் மன்னார்குடி கும்பலிடம் அடகு வைக்க பார்க்கிறார் ஓபிஎஸ் என்பதுதான் பிரதானமாக இருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் தர்மயுத்தம் நடத்திய நேரத்தில் ஓபிஎஸ் வைத்த அதே முழக்கத்தைதான் இப்போது இபிஎஸ் ஆதரவுக் கூட்டமும் அழுத்தமான முழக்கமாக வைத்துள்ளது. அது என்னவென்றால், மன்னார்குடி குடும்பத்தினரிடம் அதிமுக சென்று விடக்கூடாது என்பதுதான்.

கடந்த காலங்களில் எல்லாம் விகே சசிகலாவுக்கு ஆதரவாக பொது வெளியில் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கும் ஓபிஎஸ், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் அதே குரலில் பேசாமல் மௌனமாகிவிடுவார். அவரின் இரட்டை வேடத்தால், அவரின் தீவிர விசுவாசிகளே மனம் நொந்து போன தருணங்கள் ஏராளம்.

இப்படிபட்ட நேரத்தில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்ற கதையாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி, அவரால் கொலை குற்றம் சுமத்தப்பட்ட வி.கே.சசிகலாவை நல்லவர், வல்லவர், புனிதமானவர் என்றொல்லாம் நற்சான்றிதழ் கொடுத்தது, ஒட்டுமொத்த இபிஎஸ் கூட்டத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓபிஎஸ்ஸின் சகிகலா ஆதரவு பேச்சு, இபிஎஸ் வகுத்துள்ள திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

ஓபிஎஸ், வி.கே.சசிகலா ஆகியோரை முழுமையாக புறக்கணித்துவிட்டு, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் பதவி யேற்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அடுத்த தேர்தலை சந்திக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுமையாக உள்ளது. அதற்கு முன்பாக,விகே சசிகலாவோடு சேர்த்தே ஓபிஎஸ்ஸையும் தூக்கி எறிந்துவிடுவதில் தீவிரமாக இருக்கிறார் இ.பி.எஸ்.

அதிமுக உட்கட்சிக்குள் நடக்கும் போரில், பாஜக மேலிடம் தலையிட்டு, இபிஎஸ்ஸின் வியூகத்திற்கு முட்டுக்கட்டை போட முயன்றால், பாஜக மேலிடத்தின் வாயை மூடவும் ஒரு திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் இபிஎஸ்.

அதுதான்,இபிஎஸ்ஸின் வியூகத்திலேயே மிகமிக முக்கியமான டிவிஸ்ட்.

2024 ஆம் ஆண்டில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அந்த தேர்தலையொட்டிதான் பாஜக மேலிடம், அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடும். அதற்கு முன்பாக, விகே சசிகலாவோடு சேர்த்து ஓபிஎஸ்ஸின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றுதான் இபிஎஸ் வியூகம் வகுத்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரின் வியூகத்திலேயே எங்களை எல்லாம் கவர்ந்தது, ஓபிஎஸ், விகே சசிகலாவை விலக்கி வைப்பதால், அந்த சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினரிடம் ஏற்படும் கோபத்தை தணிக்க, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவையும் கூட்டணியில் சேர்த்து கொள்ளலாம் என்பதுதான் இபிஎஸ்ஸின் திட்டம். அப்படியொரு முயற்சியில் நேரடியாக ஈடுபடும் போது பாஜக மேலிடமும் தனது வழிக்கு வந்துவிடும் என்று உறுதியான மனநிலைக்கும் வந்துவிட்டார் இபிஎஸ்..

இபிஎஸ்ஸைப் பொறுத்தவரை, விகே சசிகலா எனும் பூச்சாண்டியை காட்டி மிரட்டும் ஓபிஎஸ்ஸின் வஞ்சகவலையில் வீழ்ந்து மேற்கு மற்றும் வடக்கு மண்டல அதிமுக செல்வாக்கு இழந்து விடக்கூடாது என்ற ஒரே சிந்தனைதான். அதை நிறைவேற்ற இரண்டு மண்டலங்களிலும் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள் கைகோர்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது. தென் மாவட்டங்களையும், மத்திய மாவட்டங்களையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் வியூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இபிஎஸ் வெற்றிப் பெற்றுக் கொண்டே வருகிறார் என்பதுதான், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னணி நிர்வாகிகள் அடிக்கடி இபிஎஸ் புகழ் பாடும் பஜனைகள் மூலம் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று ஒரே மூச்சாக கூறி முடித்தார்கள் இபிஎஸ் விசுவாசிகள்.

இபிஎஸ் வீயூகத்தில் வீழ்ந்து விடுவாரா, ஓபிஎஸ்?.. காத்திருப்போம்…