Sat. Nov 23rd, 2024

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித்தரத்தையும் புகழ்மிக்க தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல்வேறு புதிய புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். ஆனால் அமைச்சரின் உன்னதமான நோக்கம் நிறைவேறாமல் தடுக்கும் வகையில் சுயநலமிக்க, பேராசை பிடித்த தலைமை ஆசிரியர்கள் பலர் முட்டுக்கட்டை போட்டுவருவதாக மனம் நொந்து பேசுகிறார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்.

நல்லரசுவிடம் அவர்களே முன்வந்து கொட்டிய குமறல்கள்தான் இது….

“கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், பள்ளிகளையும் விட்டு வைக்காத அதிமுக நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று, அரசியல் செய்ததால், பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் ரொம்பவே குளிர் விட்டு போய்விட்டது.

கடந்த பத்தாண்டு காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மளமளவென குறைந்துவிட்ட நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை துரிதமாக மீட்டு வருகிறார்.

அரசுப் பள்ளிகளை புகழ்மிக்க தனியார் பள்ளிகளின் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் இலட்சியத்தினை விரைவாக நிறைவேற்றும் வகையில் அமைச்சருடன் கரம் கோர்த்துள்ள பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா ஐஏஎஸ், பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார் ஐஏஎஸ் ஆகியோரும் புதிய யுக்திகளை கையாண்டு, தனியார் பள்ளி மோகத்தில் உள்ள பெற்றோர்களை அரசுப் பள்ளியை நோக்கி திரும்ப வைத்துள்ளனர்.

அரசுப்பள்ளியில் படிப்பதே நம் பெருமை என்று பெற்றோரும் மாணவர்களும் மனமுவந்து சொல்ல வேண்டும் என உறுதிப்பூண்டுள்ள அமைச்சர் தலைமையிலான மூவர் குழு, மார்ச் மாத துவக்கத்தில் ( 8 ஆம் தேதி) அறிமுகப்படுத்திய புரட்சிக்கரமான திட்டம்தான் நம் பள்ளி, நம் பெருமை என்பது.

சென்னையில் மார்ச் 8 ஆம் தேதி  முதன்மை கல்வி அலுவலர்களை திரட்டி நடைபெற்ற இதன் தொடக்கவிழாவே ஆடல், பாடல், காணொளி வாயிலான முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோள் என அமர்க்களமாக இருந்தது.  

அரசுப் பள்ளிகள் நம் பள்ளிகள்,அதன் வளர்ச்சி நமது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்கும். பள்ளியில் என்ன நடக்கிறது, குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்பது பெற்றோருக்கு தெரிய வேண்டும். குழந்தைகளின் குடும்பச் சூழல் என்ன, அவர்களின் உடல், மனம், அறிவு வளர்ச்சிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது ஆசிரியர்களுக்கும் தெரியவேண்டும். இதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தையின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டியது அவசியம் என்பதை முழக்கமாக கொண்டு புதிய விடியலை தேடுகிறது நம் பள்ளி, நம் பெருமை இயக்கம்

அமைச்சரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயலாற்றி வரும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா ஐஏஎஸ், பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் ஐஏஎஸ் ஆகியோர், மாவட்டந்தோறும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித்தரத்தையும், மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக கல்வி பயிலவும் தொடர் நடவடிக்கைகளை எடுக்குமாறும் நம் பள்ளி நம் பெருமை இயக்கத்தை தொய்வின்றி நடத்தவும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழக அரசின் நோக்கத்தை புரிந்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரும்பான்மையானோர், பள்ளி மேலாண்மைக்குழுவில், பள்ளி மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்ட பெற்றோர்களையும் ஒரு சேர வரவழைத்து, கடந்த 20 ஆம் தேதி பள்ளி தோறும் கூட்டம் போட்டு, பெற்றோர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அதற்கேற்ப பள்ளியில் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப வசதிகளை உருவாக்குவதற்கும்  கற்பிக்கும் முறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் எல்லாவற்றையும் விரைவாக  நடைமுறைப்படுத்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால்,  40 சதவீதத்திற்கு மேலான பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவின் துவக்க கூட்டத்திலேயே கேள்வி கேட்ட பெற்றோர்களை மிரட்டும் வகையில் பேசியதுடன், அவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைக்க, அதிர்ந்து போனோம்.

பள்ளியில் குடிநீர், கழிப்பிடம், வகுப்பறைகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு தேவைக்கு மேல் நிதிகளை ஒதுக்கீடு செய்த போதும்கூட, உள்ளூர் மக்களும் ஆர்வமாக முன்வந்து நிதிஉதவி செய்கிறார்கள். பொது மக்களின் பங்களிப்பு முழுமையாக பள்ளியின் வளர்ச்சிக்கும், குழந்தைகளுக்கு வசதிகளை உருவாக்கி தருவதற்கும் பயன்பட வேண்டுமே தவிர, அரசு நிதியிலும் பொதுமக்களின் பங்களிப்பிலும் கடந்த பத்தாண்டு காலங்களில் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டதைப் போல, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட குளிர் காயும் வகையில் தலைமை ஆசிரியர்களும் நடந்து கொள்கிறார்கள் என்பதை கேட்கிற போது, ஆசிரியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என்று சொல்லி கொள்வதற்கே வெட்கப்படுகிறோம்.  

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற பள்ளி கல்வி மேலாண்மைக் குழு கூட்டத்தில், பெற்றோர்கள் ஆர்வமாக கலந்து கொண்ட போதும் கூட அவர்களை முழுமையாக பேச விடாமல், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

சேலம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கிராமங்கள், பேரூராட்சி அளவிலான அரசு பள்ளிகளில் பெயரளவுக்குதான் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டமே நடைபெற்றிருக்கிறது. இதுபோன்ற ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களின் வாயிலாக அவர்களது பெற்றோர்களுக்கு தகவலை தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்திற்காக துண்டு பிரசுரம் அடித்து மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவையும் காற்றில் வீசிட்டு, பத்து பதினைந்து பெற்றோர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவித்துவிட்டு துண்டு பிரசுரம் அச்சடிப்பு செலவிலும் கொள்ளையடித்துள்ளதாக புகார்களும் வந்துள்ளன.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசை ஆசையாக இந்த திட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிற போது, பெற்றோர்களின் பங்களிப்பு முழுமையாக இருந்தால்தான் அரசு மற்றும் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் தலைமைச் ஆசிரியர்களின் பேராசைக்கு சாவுமணி அடிக்க முடியும் என்பதே ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வேண்டுகோள்” என்று ஒரே மூச்சில் கொட்டி தீர்த்தார்கள்.

அரசு முன்னெடுக்கும் புதுபுது திட்டங்களில் கூட கொள்ளை அடிக்கும் மனோபாவத்துடன் செயல்படும் தலைமை ஆசிரியர்களை அடையாளம் கண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரட்டி விரட்டி வெளுக்க வேண்டும். நம் பள்ளி நம் பெருமை எனும் முழக்கம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனங்களில் இருந்து உண்மையாக ஒலிக்க, இனிவரும் காலங்களில் பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு காட்ட வேண்டும் என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார்கள் ஆசிரியர் சங்க நிர்வாகிகள்..

லட்சங்களில் ஊதியம் வாங்கும் தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் பொதுமக்களின் நிதியிலும் கையை வைக்கிறார்கள் என்று ஆசிரியர் சங்க பிரதிநிதிகளே குற்றச்சாட்டை முக்வைக்கும் வேளையில், இனியும் பொறுமை காட்டாமல் சாட்டையை சுழற்றுவாரா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

One thought on “அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களை விரட்டி விரட்டி வெளுப்பாரா அன்பில் மகேஷ் பொய்யாமொழி?”
  1. சாட்டை எவ்வாறு சுழலவேண்டுமென்றால்.. அந்த குற்றச்சாட்டுக்குள்ளான தலைமையாசிரியர் இரண்டு நிலை பணியிறக்கம் செய்யப்பட்டு, சாதாரண ஆசிரியராக்கப்பட வேண்டும். அஃதோடுமட்டுமல்லாமல், சாதாரண ஆசிரியருக்கு நிகராக சம்பளமும் குறைக்கப்படவேண்டும்..

Comments are closed.