Sun. Nov 24th, 2024

கொங்கு மண்டலத்தை காவி மயமாக்காமல் விடமாட்டார் போல…

தாரை இளமதி. சிறப்புச் செய்தியாளர்..

ஈரோடு தங்கராஜ், பாஜக தலைவர் கே.அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துவிட்டார்.

புகைப்படத்துடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஊடக நண்பர் ஒருவர் எனக்கு தகவல் அனுப்பி வைத்தார்.

அப்பாடா.. என்றிருந்தது.

2015 ம் ஆண்டில் சென்னையில் அறிமுகமானவர் ஈரோடு தங்கராஜ்.. அப்போது நான் ஜெயா தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் மாலைப்பொழுதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஊடக நண்பர் கைபேசியில் அழைத்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பெயரைச் சொல்லி, சென்னை வந்திருக்கிறோம். வாருங்கள் என்றார். இரவை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில், நான் குடியிருந்த  சைதாப்பேட்டை இல்லத்தில்  இருந்து அங்கு செல்வதற்கு 30 நிமிட பயண நேரம்தான் என்றாலும் கூட காலையில் சந்திக்கலாமே என்றேன். ஆனால், உடனடியாக சந்திக்க வேண்டும். உங்களுக்கு ஒரு நல்ல நண்பரை அறிமுகப்படுத்தி வைக்க விரும்புகிறேன். உடனே வாருங்கள் என்றார்.

அவரின் அன்பு கட்டளையை மீற முடியாமல், இருசக்கர வாகனத்தில் மாலை 6 மணியளவில் அந்த நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று நண்பர் சொல்லியிருந்த அறை வாசலில் நின்று அழைப்பு மணியை அழைத்தேன். கதவு திறந்தது. நண்பருக்கு பதிலாக ஆறடிக்கு மேல் உயரம் கொண்ட, நல்ல கொழு கொழுப்பான உடல்வாகு கொண்டவர் கதவைத் திறந்து சிரித்த முகத்தோடு வரவேற்றார்.

அதுவொரு சொகுசு அறை. சூட் என்று சொல்லுகிற வகையில், முதலில் வரவேற்பு அறை. அதை கடந்தால் படுக்கை அறை என சொகுசு படுக்கை அறையில் அவர் தங்கியிருந்தார். சில நிமிடங்களில் நண்பர் வந்தார். அறிமுகம் ஆனது.

ஒவ்வொரு வார்த்தையிலும் கொங்கு பூமிக்கே உரிய அண்ணே என்ற வார்த்தையோடு பேசினார். அவரது உடல்வாகுகிற்கும் அவரது குரலுக்கும் துளியும் சம்பந்தமே இல்லை. குழந்தைத்தனமாக இருந்தது. பல வருடங்கள் பழகியதைப் போல அன்பு பாராட்டினார். ஒரு மணிநேரத்திற்கு மேலாக அவர்களோடு பேசிவிட்டு இல்லத்திற்கு புறப்பட எத்தனித்தேன்.

ஊடக நண்பரும், கொங்கு நண்பரும் இரவு உணவை தங்களுடன்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். எனது குழந்தைகளுக்கு இரவு உணவு வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்ததால், இல்லத்திற்கு சென்றுவிட்டு இரவு  9 மணியளவில் வருகிறேன் என்று கூறினேன். விருப்பம் இல்லாமல் அனுப்பி வைத்தார்கள்.

இல்லத்திற்கு திரும்பிய நான் இரவு உணவை முடித்து படுக்கைக்குச் செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டேன். இரவு 8.30 மணியில் இருந்து கைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஊடகவியலாளரும், புதிய நண்பரும் மாறி மாறி அழைத்தனர். காலையில் வருகிறேன் என்ற சொல்லியபோது, நீங்கள் வந்தால்தான் நாங்கள் இரவு உணவை எடுத்துக் கொள்வோம் என்று பிடிவாதம் காட்ட, அதன் பிறகு ஹோட்டலுக்குச் சென்று அவர்களுடன்  இரவு உணவை உட்கொண்டுவிட்டு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலை இல்லத்திற்கு திரும்பினேன்.

2015 ஆம் ஆண்டில் அறிமுகமான அந்த கொங்கு நண்பரின் நட்பு 2020 ஆம் ஆண்டு வரை மனதிற்கு மிகவும் உற்சாகம் தரும் வகையில்தான் அமைந்திருந்தது. சென்னை வரும் போதெல்லாம் என்னை சந்திக்காமல் அவர் ஊருக்கு திரும்பியதில்லை. அதேபோல, ஈரோட்டிற்கு நான் செல்ல நேரிட்டால், அவரது விருந்தோம்பல் இல்லாமல் நானும் ஊருக்கு திரும்பியது இல்லை என்றே சொல்லலாம்.

என்னை விட வயதில் இளையவர். செல்வாக்கு, பொருளாதாரத்தில் கொங்கு மண்டலத்தில் பிரபலமானவர். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் குடும்பம் துவங்கி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை கொங்கு சமுதாய பிரபலங்களோடு குடும்ப உறவு தொடர்பு சங்கிலியில் பிணைந்திருப்பவர்.

இதையெல்லாம் கடந்து மன்னார்குடி குடும்பத்தின் மீது அதீத பக்தி கொண்டவர் என்பதுதான் ஆச்சரியமான அம்சமாக எனக்கு இருந்தது.

வி.கே. சசிகலா குடும்பத்தின் உறவுகளில் ஒருவரான முன்னாள் செய்தி தொடர்பு துறை அதிகாரி தஞ்சாவூர் கண்ணதாசனுடன் தனிப்பட்ட முறையில் மிக,மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். சென்னைக்கு கண்ணதாசன் வருகிறார் என்றால், ஈரோட்டில் இருந்து கோவைக்கு காரில் பயணித்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி, கண்ணதாசன் தஞ்சாவூருக்கு திரும்புகிற வரையில் சென்னையிலேயே தங்கியிருப்பார்.

ஈரோடு தங்கராஜின் அழைப்பை தவிர்க்க முடியாமல், சென்னையில் கண்ணதாசன் தங்கியிருந்த பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் பலவற்றுக்கு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். சுயநலத்துடன்தான் பழகுகிறாரா என்றால் அதுவும் இல்லை. அந்த காலத்தில் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. ஐஏஎஸ் உயரதிகாரிகள் சிலருடன் எனக்கு இருக்கும் நட்பையும் அவர் அறிந்து வைத்திருந்தார். ஆனால் ஒருமுறை கூட அரசு ரீதியிலான எந்தவொரு காரியத்திற்கும் அவர் கண்ணதாசனிடமோ, என்னிடமோ உதவி கேட்டதே இல்லை.

திடீரென்று கைபேசி அழைப்பு வரும். சென்னை வருகிறேன் என்பார். என்ன விஷயம் என்றால், கண்ணதாசன் அண்ணன் சென்னை வந்திருக்கிறார் என்பார். உங்களுக்கு ஏதாவது சென்னையில் வேலை இருக்கிறதா என்பேன். ஒன்றுமே இல்லை.  கண்ணதாசன் அழைப்பை ஏற்று சென்னை வருகிறேன் என்றுதான் ஒவ்வொரு முறையும் என்னிடம் சொல்வார். சென்னை வந்து ஊர் திரும்புவதற்கு குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் செலவழிப்பார்.

அதைவிட வியப்பை ஏற்படுத்திய விஷயம், கண்ணதாசனை கடந்து வி.கே.சசிகலா குடும்ப உறவுகளிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஆதாயங்கள் அடைய வேண்டும் என்ற சிந்தனை துளி கூட இல்லாதவராக இருந்ததுதான்.

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கொடி உயர பறந்த போதும், கண்ணதாசன், வி.கே.சசிகலா குடும்பத்தின் விசுவாசியாகவே அவர் தன்னை காட்டிக் கொண்டார்.

2018 ஆம் ஆண்டில் திடீரென்று ஒருநாள் கைபேசியில் அழைத்து அமமுகவில் சேரப் போகிறேன் என்றார். அதுவரை அவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக கூட இருந்ததில்லை என்று அறிந்திருந்தேன். நான் கோபமாக, என்ன உங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது. உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர், முதல் அமைச்சராக இருக்கிறார். மற்றவர்கள் செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்தநேரத்தில் நீங்கள் அமமுகவில் சேரப் போகிறேன் என்கிறீர்களே? என்று கேட்டேன்.

அதற்கு சிரித்துக் கொண்டே, சின்னம்மா குடும்பத்திற்கு விசுவாசியாக இருப்பதுதான் பெருமையாக இருக்கிறது. அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை. அவர்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் தொடர்பில் இருந்துவிட்டேன். அவர்களுடனேயே அரசியல் பயணத்தையும் தொடர விரும்புகிறேன் என்று உறுதியமான மனநிலையிலேயே கூறினார். அதன்படியே, டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் சேர்ந்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், அவருக்கு ஒதுக்கிய  தொகுதியில் உண்மையான விசுவாசியாக வேலை பார்த்தார். கட்சி மேலிடத்தில் இருந்து செலவுக்கு கொடுத்த பணத்தை முறையாக செலவிட்டார். மிஞ்சிய தொகையை கணக்கு வழக்கோடு, கோவையைச் சேர்ந்த மண்டல பொறுப்பாளராக இருந்த ஒருவரிடம் ஒப்படைத்தார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் தகவல் தெரிவித்தனர்.

அந்த தேர்தலில்தான், அவரது சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் பண விவகாரத்தில் எவ்வளவு கேவலமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை மனம் நொந்து என்னிடம் கூறினார். டிடிவி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை, மக்களிடம் கொண்டு சேர்க்காமல், அவரவர் பதவிக்குரிய அந்தஸ்தோடு பிரித்துக் கொண்டதை  வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.

அதன்பிறகு, ஈரோடு மாநகர மாவட்ட அமமுக செயலாளராக, தொடர்ந்து அக்கட்சியிலேயே நீடித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி வி.கே.சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய வரவேற்பு நிகழ்வின் போதும் சரி, அதன் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அமமுகவுக்கும் மன்னார்குடி குடும்பத்திற்குமே விசுவாசமாக இருந்தார்.

களப் பணி போராளி என்றோ, பொதுமக்களை ஈர்க்கும் வசீகரம் படைத்தவர் என்றோ அவரை மதிப்பிட்டு விட முடியாது என்றாலும், அவரது சமுதாயத்தில், குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும், தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் மாமா என்றோ, மாப்பிள்ளை என்றோ உறவுமுறையோடு அழைத்து நட்பை ஆழப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தொடர்புச் சங்கிலியை அமைத்துக் கொண்டிருப்பவர் அவர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கூட, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அதிமுகவுக்கு வந்து சேருங்கள் என்று அழைப்பு வந்தபோதும், அதை புறக்கணித்துவிட்டு அமமுகவிலேயே நீடித்தார். கசப்பான நிகழ்வுகளை எதிர்கொண்ட போதும் கூட, மன்னார்குடி குடும்ப விசுவாசி என்பதை துறக்க அவர் விரும்பியதே இல்லை. அதைவிட முக்கியமாக, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அமமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் பலரை, அமமுகவிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தடுப்பு நடவடிக்கைகளிலும் முனைப்பு காட்டியவர் ஈரோடு தங்கராஜ்.

இப்படிபட்ட சிந்தனை கொண்டரைதான் பாஜகவுக்கு தட்டி தூக்கியிருக்கிறார் கே.அண்ணாமலை. திமுகவோ, அதிமுகவோ, அமமுகவோ, தங்களை நாடி வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று பண்ணையார்தன சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஊர் ஊராக யார் யாரெல்லாம் செல்வாக்கு மிக்கவர்கள், மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை  கேள்விப்பட்டு, துளியும் ஈகோ பார்க்காமல், தொலைபேசியில் நேரடியாக அழைத்து, பாஜகவில் சேர்க்கும் பணியில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை என்பது ஈரோடு தங்கராஜ் போன்ற பிரபலங்களை அரவணைப்பதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தங்களை மாமன்னர்கள் போல நினைத்து மமதையில் இருந்து கொண்டிருக்கும் இந்தநேரத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அரசியல் பாணியை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் கே.அண்ணாமலை.

அமைச்சருக்கு கரூர், கோவை என இரண்டு மாவட்டங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அரசுப் பணிகள்  சுமையாக இருப்பதாலும், கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்றும் பணிக்கு  அமைச்சருக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை.

இரண்டு திராவிட கட்சிகளிடம் காணப்படும் இத்தகைய மனப்போக்கை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கொங்கு மண்டலத்தை காவி மயமாக்கும் பணியில், சாம, தான,பேத, தண்டத்துடன் அசகாய சூரராக கொங்கு மண்டலத்தில் அலைந்து கொண்டிருக்கிறார் கே.அண்ணாமலை..