2011 முதல் 2016 வரையிலான முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் (2013 முதல்) அடக்கி வாசித்த அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் அமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சியிலும் அடித்த கொள்ளைக்கு அளவே இல்லை என்று கூறி வருகிறார்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள்.
மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணி நியமனம், பணி மாறுதல், மருத்துவக் கருவிகள் கொள்முதல், அதற்கான கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மருத்துவர் விஜயபாஸ்கர் செய்த முறைகேடு அளவுக்கு, இதற்கு முன்பு அந்த துறையின் அமைச்சராக இருந்த இரண்டு திராவிட கட்சிகளைச் சேர்ந்த எந்தவொரு அமைச்சரும் பகல் கொள்ளையர்கள் போல செயல்பட்டதில்லை என்கிறார்கள், சுகாதாரத் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.
கோடிக்கணக்கான ரூபாய் தொடர்புடைய திட்டங்களில் மட்டுமல்லாமல் சில லட்சங்கள் மட்டுமே மாமூலமாக கிடைக்கும் பிரிவுகளை கூட விட்டு வைக்காமல் கொள்ளையடிக்க துணிந்ததன் மூலம் “தான்” ஈவு இரக்கமற்றவர் என்பதை புதுக்கோட்டை மாவட்டத்தை கடந்து மாநிலம் முழுவதும் உள்ள அதிமுகவினரே உணர்ந்து கொள்ள வைத்தவர் மருத்துவர் விஜயபாஸ்கர்.
அவரின் உச்சப்பட்ட கொடூரம் என்னவென்றால், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வரையிலான ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனையாளர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளை உள்ளடக்கி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அப்போது, தனது பினாமி பெயரிலான நிறுவனங்கள் மூலம் பணி நியமனம் வழங்கிய அப்போதைய அமைச்சர் மருத்துவர் விஜயபாஸ்கர், அந்த நிறுவனங்கள் வழியாகவே பணியாளர்கள் சம்பளம் பெறும் வகையில், உத்தரவுகளை பிறப்பித்தார். தற்காலிக பணிகளில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ஆண்டு தோறும் அந்த தனியார் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஊழியரும் 5000 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாமூல் வழங்கி வந்ததுடன், மாதந்தோறும் பெற்ற சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு மாமூலாக பினாமி நிறுவனங்கள் மூலமாக வசூலித்து வந்தார்.
மனசாட்சியே இல்லாமல் பகல் கொள்ளையனைப் போல செயல்பட்ட மருத்துவர் விஜயபாஸ்கரை எதிர்த்து, அப்போதே தற்காலிக பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆண்டுதோறும் பணியை புதுப்பித்து கொள்ள பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி, பினாமி நிறுவனமான நட்சத்திரத்திற்கு ஆங்கில பெயரைக் கொண்ட நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது, அப்போதே தமிழக அரசு நிர்வாகத்தில் அதிர்வலையை உருவாக்கியது.
மருத்துவர் விஜயபாஸ்கரின் அராஜக செயல்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலவீனமாக திகழ்ந்த கொள்ளை ஆட்சியான அதிமுகவை வீட்டுக்கு அனுப்பிய மக்கள், திமுகவை அரியணையில் அமர்த்தினர்.
ஆட்சி மாறிய பிறகும் கூட, ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் நிகழ்வுகள் தலை காட்ட துவங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மனம் நொந்து பேசும் சமூக ஆர்வலர்கள், அத்தகைய கொடூர செயல் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தில்தான் நடைபெறுகிறது என்று அதிர்ச்சி விலகாமல் கூறுகின்றனர்.
இதன் பின்னணி என்ன-?…
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்ற (டாஸ்மாக்) பெயரில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனத்தின் மூலம் அரசு மதுபானக் கடைகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைகளையொட்டி பார் (மது அருந்தும் இடம்) நடத்துவதற்கு உரிமம் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை, சென்னையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் இல்லத்தின் முன்பே நடைபெற்ற ஆர்ப்பாட்டம், திமுக ஆட்சிக்கு அவப்பெயரை தேடித்தரும் வகையில் அமைந்துவிட்டதாக திமுக முன்னணி நிர்வாகிகளே முணுமுணுத்தனர்.
இந்த அவப்பெயரை துடைத்தெறிவதற்கு முன்பாகவே, தற்போது ஏழை கூலி தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் மக்கள் விரோத போக்கிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி இறங்கி விட்டார் என பதைபதைக்க கூறுகிறார்கள் டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளுக்க விநியோகிக்கப்படும் மதுபானங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. நாள்தோறும் கோடிக்கணக்கில் தனியார் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்கள், டாஸ்மாக்கிற்கு சொந்தமான 33 சரக்கு கிடங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து மதுபானக் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 33 சரக்கு கிடங்குகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள். தொழிற்சாலைகள் அனுப்பி வைக்கும் மதுபானப் பெட்டிகளை இறக்கி வைப்பதற்கு உண்டான இறக்கு கூலியை, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
மதுபானக் கடைகளுக்கு தேவையான மதுபான பெட்டிகளை லாரிகளில் ஏற்றுவதற்கு உண்டான ஏற்றுக் கூலியை, ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் லாரிகளின் உரிமையாளர்கள் வழங்கி வருகிறார்கள்.
இப்படி இரண்டு விதமாக வழங்கப்பட்டு வரும் இறக்கு கூலி மற்றும் ஏற்றுக் கூலியை இந்த நிமிடம் வரை எந்தவொரு இடைத்தரகர்களும் இன்றி தொழிலாளர்கள் நேரிடையாக பெற்று வருகின்றனர். இப்படி வழங்கப்பட்டு வரும் தினக்கூலி முறையில்தான் கை வைக்க துணிந்துவிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று கூறும் டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பின்பற்றிய அதே பினாமி நிறுவனத்தை களமிறங்கும் தில்லாலங்கடி வேலையைதான் கையாள்கிறார் என்பதுதான் அதிர்ச்சியை தந்து விட்டது என்று அவர்கள் பொங்குகிறார்கள்.
இறக்கு மற்றும் ஏற்றுக் கூலியை பெறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, பினாமி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, இந்த நிறுவனத்தின் மூலமே கூலியை பெற வேண்டும் என்ற திட்டத்தோடு அதற்கான வேலைகளில் அமைச்சருக்கு மிகமிக வேண்டிய கரூர் பிரமுகர்கள் களத்தில் குதித்து இருக்கிறார்கள் என்று கூறும் தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றில் அடிக்கும் கொடூர செயல்களுக்கு அமைச்சர் பெயரையே பயன்படுத்தி வருவது தொடர்பாக, துறை அமைச்சரான வி.செந்தில்பாலாஜியின் உத்தரவின் பேரில்தான் நடக்கிறதா? என்று தெரியாமல் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு தவித்து வருகிறோம் என்கிறார்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள்.
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்த வார்த்தைகளின் வெப்பம் இன்னும் கூட தணியவில்லை..
முதல்வரின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்துகிறாரா. அமைச்சர் செந்தில் பாலாஜி ?..