Sun. Nov 24th, 2024

அந்தமான் தீவின் தலைநகரான போர்ட் பிளேயரில் உள்ள நகராட்சி மன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், பாஜகவும், காங்கிரஸும் தலா 10 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஆதரவோடு, நகராட்சி மன்றத் தலைவர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது.

அந்தமான் நிகோபர் தீவில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், தலைநகரான போர்ட் பிளேயரில் உள்ள நகராட்சி மன்றத்திற்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக மேலிடத்தின் உத்தரவின் பேரில் அங்க போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அங்கு சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். 5 இடங்களில் போட்டியிட்ட திமுக ஒரு இடத்திலும், அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பரிதாபமாக தோல்வியை தழுவியது.
தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸுக்கும் இடையே நகராட்சித் தலைவர் பதவியை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், நேற்றைய தினம், தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற இரண்டு கவுன்சிலர்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்ததையடுத்து, போர்ட் பிளேயர் நகராட்சி மன்றப் பதவியை பாஜக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. போர்ட் பிளேயர் நகராட்சி மன்றத்திற்குட்பட்ட மொத்த வார்டுகளான 24 லும் அங்குள்ள தமிழர்களே பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

வெற்றிவேல், காங்கிரஸ்

காங்கிரஸ் சார்பில் அமர் தேவி, லட்சுமி கணேசன், வெற்றிவேல், மங்கையர்கரசி, வசந்தா உள்ளிட்டோர் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட பாண்டிச் செல்வி, பத்மநாபன், செல்வி ராணி, ராஜேஷ் ராம், ஆர்.கருணாநிதி, கவிதா ஆகிய தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பாண்டிச் செல்வி, பாஜக
கவிதா, பாஜக

இவர்களைத் தவிர, திமுகவைச் சேர்ந்த வி.ரவிச்சந்திரன், சுயேட்டையாக களம் இறங்கிய ராதிகா ஆகியோரும் தமிழர்கள் ஆவார்கள்.
தெலுங்கு தேசம் சார்பில் சாகுல் ஹமீதும், செல்வியும், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போர்ட் பிளேயர் நகராட்சி மன்றத்திற்கு தமிழர் ஒருவர்தான் தலைவராக பதவியேற்பார் என்று கூறப்பட்டு வரும நிலையில், பாஜக கவுன்சிலர் கருணாநிதி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.


அந்தமான் தீவை பொறுத்தவரை தமிழகர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்தாலும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாஜக ஆகிய இரு கட்சிகளை தான் அனைத்து தரப்பு மக்களும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். காங்கிரஸை விட அதிகமான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு அந்தமான் சென்று பிரசாரம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, அந்தமானில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டதுடன், அவரது பிரசாரத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்ததாகவும் அந்தமானில் உள்ள பாஜக நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.


மேலும், போர்ட் பிளேயர் நகராட்சி மன்றத்தின் ஆயுட் காலம் 5 ஆண்டுகள் என்றாலும், அதன் தலைவராக பதவி ஏற்பவர் ஓராண்டுக்கு மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்றி முறையில் தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக தலைவர்கள் பதவியேற்பார்கள் என்றும் அந்தமான் வாழ் தமிழர்கள் கூறுகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் செல்விக்கு போர்ட் பிளேயர் நகராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக, பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தெலுங்கு தேச கவுன்சிலரான செல்விக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

பொதுச்சேவை, அரசியல் பணி ஆகியவற்றில் சுயநலமின்றி பாடுபட்டு வருவதால் போர்ட் பிளேயர் முழுவதும் செல்வி பிரபலமாக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் நகராட்சி மன்றத்தை பாஜக கைப்பற்றும் சூழல் உள்ளதால், எழுதபடாத ஒப்பந்தத்தின்படி, 5 ஆண்டுகளில் சுழற்சி முறையில் ஓராண்டு தெலுங்கு தேசம் கட்சிக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும். அந்த அடிப்படையில், துவக்கத்திலேயே அந்த வாய்ப்பை தெலுங்கு தேசம் கட்சிக்கு கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாஜக, தெலுங்கு தேசம் தலைவர்களிடையே மிகவும் ரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்தமானில் பிரபலமான செல்விக்கு காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி வாகை சூடிய இருக்கிறார்..

சாகுல் ஹமீத்தெலுங்கு தேச கவுன்சிலர்.

எப்படியிருப்பினும், போர்ட் பிளேயரில் வெற்றிப் பெற்றுள்ள 12 தமிழர்களில் ஒருவர்தான், நகராட்சி மன்றத்தின் த லைவர் பதவியை அலங்கரிக்கப்போகிறார்கள் என்கிறார்கள், அந்தமான் சமூக நல ஆர்வலர்கள்.

அந்தமானில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை…