Sun. Nov 24th, 2024

அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர், தர்மயுத்த நாயகர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அதிமுகவில் எந்தளவுக்கு மரியாதை இருக்கிறது என்பதற்கு பன்ருட்டி அதிமுக கவுன்சிலர்களாடனான சந்திப்பு நிகழ்வே போதுமானதாக இருக்கும் என்று கூறி கலகலவென சிரிக்கிறார்கள் கடலூர் அதிமுக நிர்வாகிகள்.

தேனி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தலைவர் தேர்தலில் கட்சி மாறி திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்களை, தேடி தேடி கண்டுபிடித்து தலைவர் தேர்தல் முடிந்த 24 மணிநேரத்திற்குள்ளாகவே 50க்கும் மேற்பட்டவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார்கள் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும்.

இதே போலதான், கடலூர் மாவட்டம் பன்ருட்டியிலும் நகராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர், திமுக நிர்வாகி வெற்றி பெற வாக்களித்தனர். இப்படி கட்சிக்கு துரோகம் செய்த 7 பேரை ஏன் நீக்கவில்லை என்று பன்ருட்டி அதிமுக நிர்வாகிகள் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்வியை, நல்லரசு ஏற்கெனவே பதிவு செய்துள்ளது.

கட்சி மாறி வாக்களித்த 7 பேரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதாலும், சம்பத், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் நிழலில் தஞ்சமடைந்திருப்பவர் என்பதாலும், பன்ருட்டியைச் சேர்ந்த அதிமுக நகராட்சி கவுன்சிலர்கள் 7 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ்.ஸால் வலியுறுத்தகூட முடியவில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக அவர் இருந்தாலும்கூட, இ.பி.எஸ்.ஸின் அதிகாரத்திற்கு முன்பு அவர் செல்லாக்காசாக தான் இருக்கிறார் என்று பன்ருட்டி அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக குற்றம் சுமத்துகின்றனர்.

பலவீனமானவராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பதால்தான், துளியளவும்அச்சமின்றியும், அதிமுகவுக்கு இழைத்த துரோகத்தை துடைத்து எறிந்துவிட்டும் திமுகவுக்கு வாக்களித்த 7 அதிமுக கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்திடமே சென்று, அவரிடம் ஆசிர்வாதம் பெற வைத்திருக்கிறார் எம்.சி.சம்பத் என்று புகைப்பட ஆதாரத்தை காட்டி மனம் நொந்து பேசுகிறார்கள் பன்ருட்டி அதிமுக நிர்வாகிகள்.

தர்மயுத்த நாயகரே….

ஒற்றை தலைமைக்கான போட்டிக்கு நீங்கள் தகுதியானவர்தானா?