அந்தமான் தீவின் தலைநகரான போர்ட் பிளேயரில் உள்ள நகராட்சி மன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 24 இடங்களில் காங்கிரஸ் பத்து இடங்களிலும் பாஜக பத்து இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற 2 கவுன்சிலர்களும் பாஜகவுக்கு ஆதரவு தர முன்வந்தனர்.
அப்போது அவர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட நிபந்தனை, தெலுங்கு தேசம் கட்சிக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜகவின் முக்கிய பிரமுகரான உதயக்குமார், தனது மனைவி கவிதாவை நகர்மன்றத் தலைவராக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார். இவர்தான், தமிழகத்தில் இருந்து அந்தமானுக்கு வந்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் அனைத்து பரப்புரை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்தவர். இதன் காரணமாக, பாஜக சார்பில் வெற்றி பெற்ற பெரும்பான்மை கவுன்சிலர்கள், உதயக்குமாரின் மனைவி கவிதாவை ஆதரிக்க தயாராகினர்.
பாஜக அணியில் தலைவர் தேர்தல் தொடர்பாக ஒருமித்த முடிவு எட்டப்படாததால், காங்கிரஸ் தரப்பில் தலைவர் பதவியை கைப்பற்ற வியூகம் வகுப்பட்டது. அந்தமான் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகளும் களத்தில் குதித்து காங்கிரஸுக்கு தேவையான ஆதரவு கவுன்சிலர்களை திரட்டும் பணியில் தீவிரம் காட்டினர். திமுக கவுன்சிலர் ஆதரவுடன் 11 பேர் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவை திரட்ட குதிரை பேரத்தில் குதித்தனர்.
தலைவர் பதவியை குறிவைத்து காங்கிரஸும் மல்லுக்கு நின்றதால், 2 தெலுங்கு தேச கவுன்சிலர்கள், சுயேட்சை கவுன்சிலரை உள்ளடக்கி பாஜக கவுன்சிலர்களின் 10 பேருடன் சேர்த்து மொத்தம் 13 கவுன்சிலர்களையும் ஒட்டுமொத்தமாக அழைத்துக் கொண்டு போர்ட் பிளேயரையொட்டியுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கூவத்தூர் மாடலில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன.
இதேபோல, காங்கிரஸ் கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக மற்றொரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இரண்டு தரப்பைச் சேர்ந்த கவுன்சிலர்களின் கைபேசிகளையும், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் தலைமை வாங்கி வைத்துக் கொண்டது. கவுன்சிலர்களின் உறவினர்கள் கூட அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் கடந்த சில நாட்களாக தவித்து வந்தனர்.
நகர்மன்றத் தலைவர் பதவியை குறி வைத்து பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இறுதி வெற்றி பாஜகவுக்கு கிடைத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர் கவிதாவை நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்க 13 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 24 கவுன்சிலர்களும் இன்று மாலை 3.30 மணியளவில் போர்ட் பிளேயரில் உள்ள நகர்மன்ற அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தெலுங்கு தேசம், சுயேட்சை மற்றும் பாஜக கவுன்சிலர்களின் ஆதரவுடன் பாஜக பிரமுகர் உதயக்குமாரின் மனைவி கவிதா, போர்ட் பிளேயர் நகர் மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை, நகர்மன்றத்தின் ஆணையர் கவிதாவிடம் வழங்கினார்.
போர்ட் பிளேயர் நகர் மன்றத் தலைவர் பதவியை பாஜக கைப்பற்றியதையடுத்து, புதிய தலைவர் கவிதாவுக்கும், பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாஜகவின் வெற்றி கொண்டாட்டம் போர்ட் பிளேயரில் களைகட்டியுள்ளது.