Sat. May 4th, 2024

சென்னை கலைஞர் அரங்கில் இன்று காலை நாதஸ்வரச் சக்கரவர்த்தி திரு. டி.என். ராஜரத்தினத்தின் கொள்ளுப் பெயரனும் – ஜெயந்தி சரவணன் – சரவணன் இணையரின் மகனுமாகிய கருணா ரத்தினம் – காவ்யா ஆகியோரின் மணவிழாவைத் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் – தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு :-

முதலில் என்னுடைய துணைவியாருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.

இரவு 12 மணிக்கே சொல்லிவிட்டேன். இருந்தாலும் எல்லோரும் மேடையில் சொன்னார்களே, நீங்கள் மட்டும் சொல்லவில்லையே என்று வீட்டிற்குச் சென்ற பிறகு கேட்டுவிடக்கூடாது. பயந்து அல்ல, எல்லோரும் வாழ்த்திய அந்த அடிப்படையில் இன்றைக்கு 63-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் என்னுடைய துணைவியாருக்கு உங்களோடு சேர்ந்து நானும் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய கொள்ளுப் பெயரனும், .சுப்பிரமணியம் – வனஜா சுப்ரமணியன் மற்றும் நினைவில் வாழும் திருவெண்காடு, என்னுடைய மாமனார் ஜெயராமன் – சுசீலா ஜெயராமன் பெயரனும், அருமைச் சகோதரர் சரவணன் – ஜெயந்தி சரவணன் அவர்களுடைய அருமை மகன் கருணாரத்தினம் என்கிற மணமகனுக்கும் – நினைவில் வாழும் வரலட்சுமி அவர்களுடைய கொள்ளுப் பெயர்த்தியும், நினைவில் வாழும் ஏ.வி.பாலசுப்பிரமணியன் – வசந்தா பாலசுப்பிரமணியன் அவர்களுடைய பெயர்த்தியும், மனோகரன் – ராஜேஸ்வரி மனோகரன் அவர்களுடைய மகளும் ஆகிய திருவளர்செல்வி காவ்யா அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துக்களோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

இது மிகப்பெரிய பாரம்பரியம் கொண்டிருக்கும், மிகப்பெரிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு குடும்பம்.

எல்லோரும் பேசுகிறபோது, தளபதி வீட்டுத் திருமணம், நம்முடைய வீட்டுத் திருமணம் என்று அவர்களுக்குரிய வகையில் தம்முடைய வாழ்த்துரையைச் சொல்லுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இது கழகக் குடும்பத்தின் திருமணம். அதே நேரத்தில் ஒரு பாரம்பரியத்தைப் பெற்றிருக்கும் ஒரு குடும்பத்தில் நடைபெறும் திருமணம்.

அப்படிப்பட்ட இந்தத் திருமண விழாவிற்குத் தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்து அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கலையரங்கம் திறப்பு விழாவில், சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே இருக்கும் அந்த அரங்கத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அந்த கலையரங்கத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் கலைஞர் அவர்கள் பேசுகிறபோது, நம்முடைய டி.என்.ஆர் அவர்களைப் பற்றி – அவருடைய பெருமையைப் பற்றி – அவருடைய தனித்துவத்தைப் பற்றி மிக அழகாக உலகறிய எடுத்துரைத்தார்கள்.

58 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும் இசை உலகில் உலக அளவில் பெறுதற்கரிய புகழ் பெற்று விளங்கினார் என்பது வரலாறு. இசைவாணர்களுடைய சுயமரியாதையை நிலைநாட்டியவர் டி.என்.ஆர். அவர்கள். அதற்கு அடித்தளமாக இருந்தவர் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்.

தன்னுடைய தனித்தன்மையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டார். யாருக்கும் தலைவணங்கிட மாட்டார். அப்படிப்பட்ட ஒரு சுயமரியாதைக்காரராக வாழ்ந்தவர் அவர்.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்படுகிற திருமருகல் நடேச பிள்ளை ராஜரத்தினம் பிள்ளைக்கு கீர்த்தனைகளை வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்திருப்பவர்களில் மிக மிக முக்கியமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய அருமைத் தந்தை – என்னுடைய தாத்தா முத்துவேலர் அவர்கள்.

தோடி ராகத்தை வாசிப்பதில் நாதஸ்வரக் கலைஞர்களுள் புகழ்பெற்ற ஒரு தன்னிகரில்லா விற்பன்னராக ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்.

இன்னொரு செய்தியும் நான் சொல்லியாகவேண்டும்.

1905-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி ஆவடியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு. அந்த மாநாட்டிற்கு ஜவகர்கலால் நேரு அவர்கள் வந்திருக்கிறார்கள். அந்த மாநாட்டையொட்டி ஊர்வலம் ஒன்று நடைபெறுகிறது. முதல் நாள் தலைவர்களை எல்லாம் வரவேற்று அந்த ஊர்வலம் நடக்கிறது, பேரணி நடக்கிறது.

அந்த ஊர்வலம் நடைபெறுவதற்கு முன் வரிசையில் நின்று அங்கு நாதஸ்வரம் வாசித்தவர்தான் நம்முடைய பெருமைக்குரிய ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்.

தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களை சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்.

இன்னொன்று, அவருடைய ஸ்பெஷாலிட்டி என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாதஸ்வரக் கலைஞர்களில் முதல்முறையாக ‘கிராப்’ வைத்துக் கொண்டவரும் அவர்தான். அது மட்டுமல்ல, முதல் முறையாக ‘கோட்’ போட்டுக் கொண்டு, ‘ஷெர்வாணி’ ஆடைகளை அணிந்து கொண்டு வந்தவரும் நம்முடைய ராஜரத்தினம் பிள்ளைதான் அவர்கள். இத்தகைய ஆடைகளை அணிந்து கொண்டு மட்டுமல்ல, காலில் ‘ஷூ’-வும் போட்டுக் கொண்டிருப்பார்.

இந்தக் குடும்பத்தைச் சார்ந்த வனஜா சுப்பிரமணியம் அவர்களுடைய இரண்டு புதல்வர்களுக்கும், ஒரு புதல்விக்கும் கலைஞர் அவர்கள் தலைமையில் தான் திருமணம் நடந்திருக்கிறது என்பதும் வரலாறு.

அந்தச் சீரிய தலைமையில் எவ்வாறு நடந்ததோ, அதேபோல இன்றைக்கு அவருடைய கொள்ளுப் பெயரனுக்கு நடக்கின்ற இந்த திருமணத்திற்கு கலைஞருடைய வாரிசாக இருக்கும் நான் இந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதில் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.

இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம், இந்தக் குடும்பத்திற்கு எப்படிப்பட்ட உறவு இருந்திருக்கிறது; எப்படிப்பட்ட வரலாறு இருந்திருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இன்று டி.என்.ஆர். அவர்களுடைய கொள்ளுப் பெயரன் கருணா ரத்தினத்திற்கும் – செல்வி காவ்யா அவர்களுக்கும் என்னுடைய தலைமையில் இந்தத் திருமணவிழா நடந்தது என்றால் கழகத்தின்பால் இந்தக் குடும்பத்திற்கு ஒரு நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

இங்கே நன்றியுரை ஆற்றிய டாக்டர் ராஜமூர்த்தி அவர்கள் பேசியபோது குறிப்பிட்டுச் சொன்னார். இவருக்கு எவ்வாறு இந்தப் பெயர் கிடைத்தது என்று. கருணாரத்தினம், இந்த கருணா பிறந்தவுடன் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும், என்னுடைய மனைவி துர்கா அவர்களும் குழந்தையாக இருந்த கருணாவை கொண்டு சென்று தலைவர் கையில் கொடுத்துப் பெயர் வைக்கவேண்டும் என்று கேட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் ‘கருணாரத்தினம்’ என்று பெயர் வைத்தார்கள். இதைக்கேட்டதும் சிலருக்கு இவ்வாறு ஒரு பெயர் வைத்து விட்டாரே, இதற்கு என்ன பொருள் என்று யாருக்கும் புரியவில்லை.

தலைவருடைய பெயர் கருணாநிதி, அந்தக் கருணா என்ற பாதி எழுத்தை எடுத்து, ராஜரத்தினம் பிள்ளையின் ரத்தினத்தைச் சேர்த்து ‘கருணா ரத்தினம்’ என்று பெயர் சூட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய பெயரைத் தாங்கியிருக்கும் மணமகன் கருணாரத்தினம், என்னுடைய குடும்பத்தைப் பொறுத்தவரையில் எந்த அளவிற்கு அவர் பாசமாக இருந்திருக்கிறார்; இருந்து கொண்டிருக்கிறார்; இருக்கவும் போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் படித்து முடித்துவிட்டு வேலைக்காக அபுதாபிக்குச் சென்றார். அபுதாபி சென்று, ஒரு வருடம் – இரண்டு வருடம் வேலை பார்த்திருப்பார். அதற்குப் பிறகு, என்னால் அங்கு இருக்க முடியாது, எனக்கு ஹோம் சிக் வந்துவிட்டது, நான் அம்மாவைப் பார்க்க வேண்டும், அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்வதைவிட நான் என்னுடைய அண்ணன் உதயநிதியைப் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி வந்தவர்தான் நம்முடைய கருணா அவர்கள்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்குக் குடும்பத்தின்மீது பற்றும் பாசமும் கொண்டவர். எனவே மணமகள் காவ்யா கவலைப்பட வேண்டாம். அவர் நிச்சயமாக உங்கள் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்து நிச்சயமாக வாழ்க்கையை நடத்துவார். அதற்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்.

எனவே ஒரு தமிழ் உணர்வோடு, தமிழ்ப்பற்றோடு இருந்த – இருந்து கொண்டிருக்கின்ற இந்தக் குடும்பத்தில் இந்தத் திருமணம் நடக்கிறது.

தமிழ் என்றால் நமக்குத் தானாக ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. அது உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைனில் இருக்கும் தமிழனாக இருந்தாலும் அவர்களையும் காப்பாற்றுகிற இயக்கம் இந்த இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியும்.

உக்ரைனில் இருப்பவர்கள் அங்கு அகதிகளாக ஆகிவிடுவார்களோ அல்லது ஆபத்தில் சிக்கி விடுவார்களோ என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் ஏறக்குறைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டவுடன் இந்தியாவில் எந்த மாநிலமும் முன்வராத நிலையில் முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் அவர்கள் அத்தனை பேரையும் இங்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவர்கள் அத்தனை பேரையும் பத்திரமாக அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக என்னென்ன முயற்சிகள் எல்லாம் எடுத்து வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நேற்றோடு அத்தனை பேரும் வந்து சேர்ந்து விட்டார்கள். கடைசியாக வந்த 9 பேரை வரவேற்பதற்காக நானே விமான நிலையத்திற்குச் சென்று அவர்களை வரவேற்ற காட்சிகளை நீங்கள் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

அதற்காக நம்முடைய திருச்சி சிவா அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, நம்முடைய அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் தம்பி டி.ஆர்.பி.ராஜா, அரசுத் துறையைச் சார்ந்திருக்கும் அதிகாரிகளை எல்லாம் குழுவாக அமைத்து, டெல்லியிலேயே பத்து நாள் தங்கி அத்தனை பேரையும் அழைத்து வந்திருக்கிறார்கள்.

எனவே தமிழன் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனவே அப்படிப்பட்ட தமிழ்க் குடும்பத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உள்ளபடியே நீங்கள் எல்லாம் கலந்து கொண்டு இங்கு மனதார வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.

எனவே தலைமையேற்று நடத்தும் நானும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டு, வழக்கமாக நான் திருமண விழாக்களில் எடுத்துச் சொல்வது போல, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும் “வீட்டிற்கு விளக்குகளாக – நாட்டிற்குத் தொண்டர்களாக” மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாக வாழுங்கள் வாழுங்கள் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.