உக்ரைன் மீதான போரை ரஷ்யா 16 நாட்களுக்குப் பிறகும் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்க்கல்வி படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டுமழை பொழிந்த நகரங்களில் உயிரைப் பிடித்துக் கொண்டு உதவிக் கேட்டு வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
அவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சென்னை மற்றும் டெல்லியில் சிறப்பு முகாம் அமைத்து, உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களுக்கு தைரியம் கொடுத்ததுடன் அவர்களின் மனஉறுதியை அதிகரிக்கும் வகையில், அமைச்சர்கள் தொடர்ந்து உக்ரைன் மாணவர்களுடன் உரையாடி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதாக கைபேசி வாயிலாக கூறி வந்தனர்.
இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவையடுத்து, திமுக எம்பி சிவா தலைமையில் ஒரு குழு, உக்ரைனையொட்டியுள்ள நாடுகளுக்கு சென்று தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட திட்டமிட்டது. இதற்கான மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அனுமதி பெற தமிழக எம்பிக்குள் குழு சென்றது.
அவர்களுடன் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருவர் விடாமல் விரைந்து மீட்கப்படுவார்கள் என உறுதியளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, உக்ரைனின் பல்வேறு நகரங்களில் தங்கியிருந்த தமிழக மாணவர்கள், குழு குழுவாக விமானங்களில் அழைத்து வரப்பட்டு சென்னை வழியாக அவர்களது சொந்து ஊர்களுக்கு தமிழக அரசு பத்திரமாக அனுப்பி வந்தது.
நிறைவாக உக்ரனில் இருந்து வந்த தமிழக மாணவ, மாணவியர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரில் வரவேற்றார். ஒவ்வொரு மாணவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர், மாணவ, மாணவியர்களிடம் அவரவரின் சொந்த ஊருக்கு செல்ல, தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் தெரிவித்தார்.
தமிழக மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இரவுபகல் பாராமல் உழைத்த தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
போர் மேகங்கள் சூழ்ந்த உக்ரைன் நாட்டில் மிகுந்த ஆபத்தான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த தங்களை மிகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்ப துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மாணவ, மாணவியர் கண்ணீர் மல்க, முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.