மதுரை மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக மதுரை சிம்மக்கல்லில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது
மதுரையில் சிலை அமைக்க அரசு பல்வேறு தடைகளை விதித்தது. அதனை எதிர்த்து, சட்ட போராட்டம் நடத்தி மதுரையில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. தந்தையின் சிலையை திறந்து வைத்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன பேசுவது என்றே தெரியாமல் நிற்கிறேன் கலைஞரின் நினைவிடத்திற்கு எப்படி சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்றோமோ அதுபோலவே, மதுரையிலும் சிலை அமைக்க உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றோம்.
கலைஞர் கருணாநிதி சிலை, தி.மு.க. தலைமைக் கழகமான அண்ணா அறிவவாலயத்தில், முரசொலி அலவலுகததில், ஈரோட்டில், காஞ்சிபுரத்தில் என பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும், அங்கெல்லாம் சிலை நிறுவ யாரிடமும் அனுமதி பெறவில்லை. தனிப்பட்ட இடங்களில் கலைஞருக்கு சிலை நிறுவப்பட்டது. ஆனால், தமிழகத்திலேயே பொது இடத்தில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்றால், அது மதுரையில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலைதான்.
இந்த சிலை அமைக்க மதுரை மாவட்ட நிர்வாகிகள் தளபதி, மூர்த்தி, முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், டாக்டர் சரவணன் ஆகியோர் கடுமையாக பாடுபட்டனர். அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவிததுக் கொள்கிறேன்.
அதுபோலவே, கருணாநிதி சிலையை திறக்க சட்ட போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்கும் நன்றி. கலைஞர் சிலையை திறக்க தடையாக இருந்த அ.தி.மு.க. அரசுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப்போகிறது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார். விழாவில் முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டர்.