மேகதாது அணை கட்ட 1000 கோடி ஒதுக்கீடு கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு சட்டவிரோதம் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்திட வேண்டும்
பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளளார்.
காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டி தமிழகத்தை அளிக்க வேண்டும் என்ற வக்கிர புத்தியோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜகாவுடன் காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கெதிரான கூட்டுசதியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்பதை தெரிந்தும், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ரூபாய் 1000ம் கோடி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகள் தோடங்குவதாகவும், ரூ 9,000ம் கோடி மதிப்பீட்டில் விரைவில் அணை கட்டி முடிக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருப்பது சட்டவிரோதமானது வன்மையாக கண்டிக்கதக்கது.. உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது,காவிரி மேலாண்மை ஆணையம் அணை கட்டுவதற்கான வரவு திட்ட அறிக்கையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளக் கூட மறுத்துள்ளது.
இந்நிலையில் தன்னிச்சையாக அரசியல் லாபம் கருதி கர்நாடக அரசு அறிவித்துள்ள மேகதாது அணை கட்டுமான பணி சட்டவிரோதமானது என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் வெளிப்படையாக அறிவித்து தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
விரைவில் ஆணைய தலைவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை பெற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்தித்து கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கை குறித்து எடுத்துரைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தவேண்டும்.
தமிழகத்தில் கர்நாடக அரசின் அறிவிப்புக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை துவக்க உள்ளோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
இவ்வாறு பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது செய்தித்தொடர்பாளர் என் மணிமாறன் உடனிருந்தனர்.