Sun. Nov 24th, 2024

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 21 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கடந்த 2 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட நிலையில், இன்று நடைபெற்ற மேயருக்கான தேர்தலில், அனைத்து மேயர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். மேயர் பதவியேற்பு விழாவில் ஆளும்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சியின் 49 வது மேயராக 29 வயதான பிரியா ராஜன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு பெருநகர மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேயர் பிரியா ராஜனுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் செங்கோல் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த பதவியேற்பு விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், தென் மாவட்டங்களுக்கான நுழைவு வாயில் என அழைக்கப்படும் திருச்சி மாநகராட்சியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் முதல் மேயராக அன்பழகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூரில், அணைக்கட்டு எம்எல்ஏ மற்றும் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமாரின் ஆதரவுப் பெற்ற திமுக வேட்பாளர் சுஜாதா ஆனந்தகுமார், வேலூர் மாநகராட்சி மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ, உள்ளிட்ட நிர்வாகிகள் புதிய மேயருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த கோவை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக வெற்றிப் பெற்ற நிலையில், வாடகை வீட்டில் வசித்து வரும் கல்பனா, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏகோபித்த ஆதரவின் காரணமாக மேயராக பதவியேற்றுக் கொண்டார். திமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக மேயராக பதவியேற்கும் வரலாற்று விழாவில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டு வசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் புதிய மேயருக்கு செங்கோலை வழங்கி வாழ்த்தினர்.

திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் செங்கோல் வழங்கி வாழ்த்தினர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக மறைந்த முன்னாள் அமைச்சர் என்.பி.பெரியசாமியின் புதல்வர் என்.பி. ஜெகன் பெரியசாமி, திமுக மாநில மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி வாழ்த்துகளோடு பதவியேற்றுக் கொண்டார். விழாவில், மேயரின் சகோதரியும் அமைச்சருமான கீதா ஜீவன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பொன்வசந்த், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துகளோடு பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் மதுரை வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். விழாவில் கலந்துகொண்ட சிறுகுறு தொழில்துறை அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரன் செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக வழக்கறிஞர் மகேஷ் பதவியேற்று கொண்டார். அவருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மகேஷை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனாதேவ் தோல்வியடைந்தார்.

கடலூர் தேர்தல் கலாட்டா:

கடலூர் மாநகராட்சிக்கு மேயர் வேட்பாளராக திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டவர் நகரச் செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி. இவர் மாவட்ட அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். ஆனால், தனது மனைவி கீதாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவரின் கணவரும் கடலூர் மாவட்ட திமுக பொருளாளருமான குணசேகரன், தனது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரிக்கு சென்று தங்கிவிட்டார். இதனால், திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரான சுந்தரி வெற்றி பெறுவாரா? என்ற பதற்றம் அமைச்சர் ஆதரவாளர்களிடம் மிகுதியாக இருந்து வந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக, புதுச்சேரியில் இருந்த திமுக கவுன்சிலர்களை கொத்தாக காவல்துறையினர் தூக்கிக் கொண்டு கடலூருக்கு நேற்றிரவு வந்தனர். இந்நிலையில், இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேர்தல் நடைபெற்ற போது, சுந்தரியை எதிர்த்து கீதா போட்டியிட்டார். இதனால், திமுக நிர்வாகிகளிடையே கடும் பதற்றம் நிலவியது. பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல், பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெற்றது. வெற்றிப் பெற்ற 36 திமுக கவுன்சிலர்களில் 19 பேர் சுந்தரிக்கு வாக்களிக்க, 12 பேர் கீதாவுக்கு வாக்களிக்க, 7 வாக்குகள் வித்தியாசத்தில் சுந்தரி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு திமுக தலைமை அறிவித்த வேட்பாளரான சுந்தரி ராஜா வெற்றிப் பெற்றதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

முரசொலி செய்தி:

திமுக தலைமைக் கழகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள்…..

கும்பகோணத்தில் காங்கிரஸ் கொடி

புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன், இன்று காலை பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். தமிழக காங்கிரஸில் பணபலம் படைத்த தலைவர்களுக்கு பஞ்சமில்லாத நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மட்டுமே ஒரு மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவிக்கு காலம் தாழ்த்தாமல், உடனடியாக வேட்பாளரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்தது. வேட்பாளரின் பெயரை பார்த்தவுடன், அவரின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள, தமிழ்நாட்டு மக்களே மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். அந்தளவுக்கு சாதாரண ஆட்டோ ஓட்டுநருக்கு காங்கிரஸ் கட்சி மேயர் பதவியை வழங்கி, ஏழையின் குரல் அம்பலத்தில் ஏறுவதற்கு மட்டுமல்ல, உத்தரவுகளை பிறப்பிக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் அளித்துள்ளது.

21 மாநகராட்சிகளில் ஒரே ஒரு மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான சரவணன், பதவியேற்றுக் கொண்ட வரலாற்று நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரியின் தவிர்த்து பிரபல காங்கிரஸ் தலைவர்கள் வேறு யாரும் கூட பங்கேற்று வாழ்த்தாமல் தவிர்த்தது, காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன்…

சென்னை அருகே உள்ள ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவைச் சேர்ந்த உதயகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். விழவில், அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் ஆணையர் ஆகியோர் மேயருக்கு செங்கோல் வழங்கி வாழ்த்தினர்

திருப்பூர் மாநகராட்சி மேயர் ஆக திமுகவைச் சேர்ந்த தினேஷ்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், மேயர் பதவியை ஆளும்கட்சியான திமுக கைப்பற்றியது. சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயர் பதவியேற்பு விழாவில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆட்சியர் கார்மேகம், மாநகர மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, துணை மேயர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாரதாதேவி மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதேபோல் எஞ்சிய மாநகராட்சிகளிலும் (கும்பகோணம் தவிர்த்து) திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மேயராக பதவியேற்றுக் கொண்டனர்.