Fri. May 10th, 2024

மார்ச் 1 ஆம் தேதியான இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 69 வது பிறந்தநாள் என்பதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அவரது பிறந்தநாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திமுக தலைமையிலான ஆட்சி, அதுவும் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பதவியேற்று கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், திமுக தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதனை வெளிப்படுத்தும் விதமாக, இனிப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

உங்களில் ஒருவன் எனும் தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவரது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற போது, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் வடஇந்திய அரசியல் தலைவர்கள், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மார்ச் 1 ஆம் தேதியான இன்று காலையில் கோபாலாபுரத்திற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தனது தாயாரான தயாளு அம்மாளிடமும் முதல்வர் வாழ்த்துப் பெற்றார்.

தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் மு.கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பூந்தமல்லி சாலையில் உள்ள திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

பின்னர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் புடை சூழ தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பிரமுகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் உள்பட திமுகவினர் நீண்ட வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வரின் பிறந்தநாளையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம் ஆட்டம், பாட்டு என களைகட்டியுள்ளது.