Sat. Apr 27th, 2024

தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தலைமையில் அந்த அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்-2

விடியலைத் தந்த தலைவருக்கு நன்றி!
அ.தி.மு.க ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் சபையில் அம்பலப்படுத்தி, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியின் தமிழர் விரோத திட்டங்களை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்து, ஏளனங்களைத் தாங்கி, தமிழர் விடியல் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு, தமிழ்நாட்டைச் சுற்றிச் சுழன்று உழைத்து சட்டமன்றத் தேர்தலில் வென்று, கழக அரசு அமைக்க முழுமுதற் காரணமாக இருந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, இளைஞர் அணியின் இந்த மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் 9 மாத நல்லாட்சியின் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நகர்ப்புற உள்ளாட்சியிலும் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைப் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிவாகைச் சூடச்செய்த கழகத் தலைவருக்கு இந்தக் கூட்டம் தன் பாராட்டையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறது.

தீர்மானம்-3
விடியலுக்கு உதவிய மக்களுக்கு நன்றி!
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தமிழ்நாட்டு உரிமைகளை ஆதிக்கவாதிகளிடம் அடகுவைத்து, ஊழலில் திளைத்த மக்கள் விரோத அ.தி.மு.க அரசின் பண பலத்தை மீறி, பொய்யான கவர்ச்சித் திட்ட அறிவிப்பு நாடகங்களை உணர்ந்து, தலைவர் அவர்கள் தலைமையிலான கழக அரசால் மட்டும்தான் எளியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கழகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு உளமார்ந்த நன்றியை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்-4
விடியலுக்கு உழைத்த கழகத்தினருக்கு நன்றி!
அ.தி.மு.க-பா.ஜ.க-வினரின் தமிழ்-தமிழர் விரோதப் போக்கை அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், ‘விடியலை நோக்கி தலைவரின் குரல்’ பிரச்சார கூட்டங்கள், உங்கள் தொகுதியில் தலைவர் கூட்டங்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் சுற்றிச்சுழன்று உழைத்து சட்டமன்றப் பொதுத்தேர்தல் தொடங்கி, சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்து வகையான தேர்தல்களிலும் உழைத்து கழகத்துக்கு வெற்றிவாகை சூட்டிய கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் இளைஞர் அணியின் இந்தக் கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. தலைமைக்கழகம் – மாவட்ட-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-வட்ட-கிளைக்கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூக வலைத்தள தன்னார்வலர்கள், குறிப்பாக நிர்வாகிகள் உள்ளிட்ட இளைஞர் அணி தம்பிகள் அனைவருக்கும் நன்றியை இந்த அமைப்பாளர்கள் கூட்டம் உரித்தாக்குகிறது.

தீர்மானம்-5
மக்களை காத்த முதல்வருக்கு நன்றி!

கழகம் ஆட்சி அமைத்தபோது அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்த கொரோனா 2-ம் அலையின் பரவலைத் தன்னுடைய மிகச்சிறந்த நிர்வாகத் திறமையினால் கட்டுக்குள் வைத்து, குறுகிய காலத்தில் 10 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தி மூன்றாம் அலையை விரைவாக முடிவுக்கு கொண்டுவந்து, கொரோனாவுக்கு பிந்தைய மக்களின் பொருளாதார தேக்க நிலையை உணர்ந்து அவர்களை நோயிலிருந்தும், வறுமையிலிருந்தும் மீட்டெடுக்கும் மிகச்சிறந்த மக்கள் நலத்திட்டங்களைத் தீட்டி மருத்துவ-சமூகச் சீர்திருத்தங்களில் பிற மாநிலங்களுக்கு தமிழகம்தான் எப்போதும் முன்னோடி என்பதை நிருபித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்-6
சமூக நீதித் தலைவர்!
கழக அரசு அமைந்த இந்தக் குறுகியகாலத்தில் கொரோனா பேரிடர், மழை-வெள்ளம் நிவாரணப் பணிகளுக்கு இடையிலும் அனைத்துத் தரப்பிரனரையும் மனதில்கொண்டு திட்டங்களைத்தீட்டியமுதலமைச்சர் அவர்களுக்கு இளைஞர்அணியின் இக்கூட்டம்நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. ‘உங்கள்தொகுதியில்முதலமைச்சர்’என்றதனித்துறை, பேருந்தில் மகளிருக்கு இலவசப்பயணம், அய்யாபெரியாரின் நெஞ்சில்தைத்த முள்ளாகஇருந்தஅவரின் இறுதிவிருப்பத்தை கலைஞரின் வழியில்நின்று, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கியது, திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடியிலான திட்டங்கள், தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு, அந்த மாணவர்களின் கல்வி-விடுதிக்கட்டணத்தை அரசேஏற்கும்என்றஅறிவிப்பு, மக்களைத்தேடிமருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, தந்தைபெரியாரின் பிறந்தநாளை சமுகநீதிநாளாக அறிவித்தது… இப்படி ஆட்சிக்குவந்து 9 மாதங்களில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில்திராவிடமாடல் அரசை நடத்தி தேர்தல் வாக்குறுதிகளில் 50 சதவிகிதத்துக்கும் மேல் நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இளைஞர்அணியின் இந்த அமைப்பாளர்கள் கூட்டம்வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம்-7
சமூகநீதி முதல்வர்!
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை ஒன்றிய அரசு மறுத்துவந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி, இந்தியா முழுவதும் வாழும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
இதேபோல் சமூகநீதிக் கருத்தியலை இந்தியா முழுமைக்கும் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வளர்த்தெடுப்பதற்கும்; அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதற்கும் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ள முதலமைச்சர் அவர்களுக்கும் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளுக்கும் நன்றி கூறிக்கொள்வதுடன் இக்கூட்டமைப்பு இந்திய அளவில் சமூகநீதியை நிலைநிறுத்தும் என்ற உறுதியையும் நம்பிக்கையையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்-8
கீழடி, தமிழ்நாட்டின் பெருமை!
தமிழகத்தில் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்ததும், எழுத்தறிவு பெற்ற மேம்பட்டசமூகமாக நம் சமூகம் விளங்கியதும், கீழடி ஆய்வில் தெரியவந்தது. ஒன்றிய அரசு கீழடி ஆய்வை முடக்க நினைத்த நிலையில் கழக அரசு அமைந்ததும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி, அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் 8-ம் கட்டமாகவும், சிவகளையில் 3-ம் கட்டமாகவும், கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறையில் 2-ம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நடக்க உள்ளன. வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலையில் முதல்முறையாக அகழாய்வு நடத்தவும் தண் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்துக்கு எதிரே கடற்கரையோர முன்களப் புலஆய்வு மேற்கொள்ளவும், நம் அரசு திட்டமிட்டுள்ளது.

சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தைக் கண்டறியும் நோக்கில், கடலோரங்களில் ஆய்வு மேற்கொள்ள இந்திய கடலாய்வுப் பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றையும் பண்பாட்டையும் தமிழ்மொழியின் பழமைச்சிறப்பையும் உலகத்துக்கு ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்ட நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம்-9
தலைவர் பிறந்தநாள்,
நலத்திட்ட உதவி வழங்குவீர்!

அடிமை-ஆதிக்கவாதிகளின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி தமிழ்நாட்டுக்கு விடியலைத் தந்து, சமூக நீதித் திட்டங்கள் மூலம் மக்கள் நல அரசை வழிநடத்திக்கொண்டு இருக்கும் நம் கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி, முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றப் பிறகு நாம் கொண்டாடவுள்ள முதல் பிறந்த நாள். இந்தப் பிறந்தநாளை கழக முன்னோடிகள்-ஏழை-எளியோர்-மாற்றுத்திறனாளிகள்-திருநங்கையர் உள்பட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பயன்படும் வகையில், நலத்திட்டங்கள் வழங்கியும், கழகத்தின்-கழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும்வகையிலும் கொள்கை விளக்கக் கூட்டங்கள் நடத்தியும் கொண்டாடுவது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது. இளைஞர் அணி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, இளைஞர் அணியின் அனைத்து நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம்-10
பேராசிரியரின் நூற்றாண்டை
கொள்கை பரப்பி கொண்டாடுவோம்

கொண்டகொள்கையால், அயராத தொடர் உழைப்பால், நேசமிகு நட்பால், மேடை தோறும் கொள்கைகளை முழங்கி, கழகம் வளர்த்த திராவிட இயக்க அறிவுக் கருவூலம் பேராசிரிய பெருந்தகையின் நூற்றாண்டைக் கழக இளைஞர் அணியின் சார்பில், மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி, பேராசிரியரின் வழியில் திராவிட இயக்கக் கொள்கையைப் பரப்பி கொண்டாடிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-11
நீட் விலக்கு சட்ட முன்வடிவு

‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவோம்’ என்ற கழகத்தின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் 5 மாதங்களுக்கும் மேல் கிடப்பில் போட்டுவிட்டு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பிய ஆளுநரை இளைஞர் அணியின் இந்த அமைப்பாளர்கள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் மூலம் 2-வது முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவைக் காலம் தாழ்ததாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற்றுத்தரும் நடவடிக்கைகளைத் துவங்குமாறு ஆளுநரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-12
சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் திட்டங்களை கைவிடுக!

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துப் போகும்வரை அருகில் உள்ள மையத்தில் வைக்கப்படும் என்று ஒன்றிய இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் கூடங்குளம் போன்ற அணுஉலைகளிலிருந்து வரக்கூடிய அணுக் கழிவுகளைக் கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதை ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்பட்டு வரும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான திட்டம் தென் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கும் மிகவும் ஆபத்தானது. இந்த அபாயகரமான திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஒன்றிய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியலைப் பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-13
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

ஜி.எஸ்.டி வரி வசூலில் தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய பங்கு, மற்றும் 14-வது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிதி உள்ளிட்ட தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நிதிப் பங்கீட்டை வழங்காமல் மாநிலத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தை இந்தக் கூட்டம் பதிவுசெய்கிறது.
மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு திருப்பித் தரும் நிதி தமிழகத்திற்கு 30 சதவீதம் அளவுக்கே உள்ளது. வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. இதேபோல்இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளுக்கு தெற்கு ரயில்வேக்கு 7 ஆயிரத்து 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு ரயில்வேக்கு 66 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகள் புதிய வழித்தடத்திட்டத்திற்கான ஒதுக்கீடு என்பது தெற்கு இரயில்வேக்கு வெறும் 308 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், வடக்கு இரயில்வேயின் புதிய வழித்தடத்திட்டத்திற்கு ஒதுக்கீடு 31,008 கோடி ரூபாய் ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய வழித்தடத் திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டுக் கணக்கைப் பார்த்தால் தெற்கு இரயில்வேயை விட வடக்கு இரயில்வேக்கு 101 மடங்கு அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து பெறும் வரி வசூலை இதர மாநிலங்களுக்கு வழங்கும் நிலையில் தமிழ்நாட்டுக்குத் தேவையான நியாயமான நிதியைக்கூட வழங்காமல் ஓரவஞ்சனையாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வழங்குமாறும் ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-14
தமிழ்நாட்டில் அரசு வேலை தமிழருக்கே!
தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ் தெரியாத வேற்று மாநிலத்தவரைப் பணியில் அமர்த்துவதால் தமிழ்நாட்டு மக்களுடன் தொடர்புகொள்வதில் பெரும் மொழிச் சிக்கல்கள் ஏற்படுகிறது. தவிர, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகிறது. இதன்மூலம் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் வேலையையும் ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. எனவே, தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக்கொண்டே நிரப்பவேண்டும் என்று ஒன்றிய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.